Fenugreek Seed Side Effects: யாரெல்லாம் வெந்தயம் சாப்பிடக் கூடாது தெரியுமா?
யாரெல்லாம் வெந்தயம் சாப்பிட கூடாது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வெந்தயம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இருப்பினும் யாரெல்லாம் வெந்தயம் சாப்பிட கூடாது என்பதை நிபுணர் சூர்யா மாணிக்கவேலிடம் இருந்து தெரிந்து கொள்வோம்…
நம் சமையலறையில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. வெந்தயக் கீரையில் தொடங்கி வெந்தயப்பொடி வரை வெந்தயத்தை பல விதமாக உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். இதில் பல மதிப்பு மிக்க பண்புகளும், பயன்களும் நிறைந்துள்ளன.
வெந்தயத்தில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, இரும்புச்சத்து, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. வயிற்றுப் பிரச்னைகள் மற்றும் மூட்டு வலியை குறைப்பது முதல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவது வரை வெந்தயம் பல்வேறு மருத்துவர் நன்மைகளை கொண்டுள்ளது.
ஆனால் எந்த ஒரு உணவுப் பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லதல்ல. இது வெந்தயத்துக்கும் பொருந்தும். வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதால் இருமல், அலர்ஜி, வயிற்றுப்போக்கு, மூக்கடைப்பு, வீக்கம், வாயு, துர்நாற்றம் வீசும் சிறுநீர் போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக இந்த மூன்று உடல் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும். இது பற்றிய தகவல்களை பிரபல ஊட்டச்சத்து நிபுணரான சூர்யா மாணிக்கவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீங்களும் வெந்தயத்தை அதிகமாக எடுத்துக் கொள்பவராக இருந்தால் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல்களை தவறாமல் படிக்கவும்.
எந்தவித முன்னெச்சரிக்கைகளும் இல்லாமல் பல உடல் நல பிரச்னைகளுக்கு தீர்வாக வெந்தயம் பரிந்துரை செய்யப்படுகிறது. வெந்தயத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருப்பது உண்மைதான், இருப்பினும் ஒரு சிலர் இதை தவிர்க்க வேண்டும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தகவல்களை அனைவரின் கவனத்துக்கும் கொண்டுவர விரும்புவதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் உறைதல் மெதுவாகத்தான் இருக்கும். இக்காரணத்தினால் கர்ப்பிணி பெண்கள் வெந்தய விதைகளை தவிர்க்கும் படி நிபுணர் அறிவுறுத்துகிறார்.கர்ப்ப காலத்தில் வெந்தயத்தை சாப்பிடும் பொழுது குமட்டல் போன்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். இது வாயு, உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
வெந்தயம் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஐரோப்பிய சுவாச இதழ் வெளியிட்டுள்ள முந்தைய ஆய்வின் படி, வெந்தயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், சுவாச பிரச்னைகளை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும் சுவாச நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. வெந்தயம் மருந்துகளின் விளைவை குறைப்பதால் அவற்றை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என நிபுணர் அறிவுறுத்துகிறார்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் நிலையான ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையவையாகும். வெந்தயம் மற்றும் வெந்தயக் கீரையில் குறைந்த அளவு சோடியம் மட்டுமே உள்ளது. இது உங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்படும், அதே சமயம் இது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவுகளையும் குறைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இக்காரணத்தினால் வெந்தயம் தினமும் சாப்பிடுவதற்கு உகந்ததல்ல.
நீங்கள் உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தாலும் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உங்கள் ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கலாம்.
டாபிக்ஸ்