ஆரோக்கிய பானம்: ஒரு கப்பில் ஒளிந்திருக்கும் பல நன்மைகள்.. கோடை கால பானமாக இருக்கும் சுவை மிகுந்த டீ
கோடை காலத்தில் பருக வேண்டிய பானங்களில் ஒன்றாக இருக்கிறது பைனாப்பிள் தோலில் தயார் செய்யக்கூடிய பைனாப்பிள் டீ. கண்டிப்பாக டீ பிரியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்குமான சிறந்த ஆரோக்கிய பானமாக இருக்கும் பைனாப்பிள் டீ தயார் செய்யும் முறையை பார்க்கலாம்

மசாலா டீ, இஞ்சி டீ, செம்பருத்தி டீ என டீ பிரியர்களை மகிழ்விக்க ஏராளமான டீ வகைகள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றாகவும், ஆரோக்கியம் மிக்க டீ வகையாகவும் பைனாப்பிள் டீ இருந்து வருகிறது. பைனாப்பிள் டீ என்பது கரடு முரடாக இருக்கும் அதன் தோல்களை சுட வைத்து தயாரிக்கும் பானமாகும். கோடை காலத்தில் பருக்ககூடிய அற்புத பானங்களில் ஒன்றாக இவை இருக்கின்றன.
பைனாப்பிள் போல் அதன் தோல்களும் உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. இதில் வைட்டமின் சி, பி வைட்டமின்களான போலேட் மற்றும் நியாசின், பொட்டாசியம், மைக்ரோ ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன.
கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் பைனாப்பிள் பழத்தின் தோல்களில் இருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்
வீக்கத்தை குறைக்கிறது
பைனாப்பிளில் இருக்கும் புரோமெலைன் என்ற நொதி உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கீல்வாதம் உள்ளவர்களுக்கு நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். பைனாப்பிள் தோலில் சுமார் 0.23 சதவீதம் புரோமெலைன் செயல்பாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
சீரான செரிமானத்துக்கு உதவுகிறது
புரோமெலைன் ஒரு புரோட்டியோலிடிக் நொதி என்பதால், இது புரதங்களை உடைக்க உதவுகிறது. இது சீரான செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கம் மற்றும் வாயு போன்ற அசௌகரியங்களைக் குறைக்கவும் உதவுகிறது. குடலைப் பாதுகாக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பைனாப்பிள் தோலில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களான வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கவும் உதவுகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பவர்ஹவுஸ்
பைனாப்பிள் தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. அத்துடன் இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் வளமான மூலமாகும். இவை அனைத்தும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக திகழ்கின்றன.
சருமத்துக்கு நன்மை
பைனாப்பிள் தோல் சருமத்துக்கு நன்மை விளைவிக்கிறது. இதில் ஏராளமான அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது கொலாஜன் தொகுப்புக்கு முக்கியமானது. உங்கள் முகம் மற்றும் பிற பகுதிகளில் தோன்றக்கூடிய வயதான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சரும அமைப்பை மேம்படுத்துகிறது
ஆற்றல் அளவை அதிகரிக்கிறது
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்கு மட்டுமல்லாமல் உடல் ஆற்றலுடனும் தொடர்புடையதாக உள்ளது. இதில் இருக்கும் ப்ரோமைலின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை புரதங்களை உடைத்தல் மற்றும் குளுக்கோஸ் மாற்றத்துக்கு உதவுகின்றன. இதனால் உடலில் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க உதவுகின்றன.
சுவையான பைனாப்பிள் டீ தேநீர் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- பைனாப்பிள் தோல் - 1 பழத்தின் அளவு
- தண்ணீர் - 4 கப்
- இஞ்சி (துருவியது) - 1 அங்குலம்
- எலுமிச்சை சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
மேலும் படிக்க: கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சர்க்கரை இல்லாமல் சுவை மிக்க வீகன் ஐஸ்க்ரீம்
செய்முறை
- தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதனுடன் நன்கு கழுவிய பைனாப்பிள் தோல்களை சேர்க்கவும். விரும்பினால், நீங்கள் சில பைனாப்பிள் சதை துண்டுகளையும் சேர்க்கலாம்.
- ஒரு கொதி வந்தவுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- ஸ்டாரங்கான சுவையை விரும்பினால் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- இந்த கலவையை வடிகட்டி பின்னர் சூடாக சுவைக்கலாம். தேவைப்பட்டால் பிரிட்ஜில் வைத்து ஐஸ் டீ ஆகவும் குடிக்கலாம்

டாபிக்ஸ்