Exclusive : அறிந்து கொள்வோம்: செல்வ மகள் சேமிப்பு திட்டம் தெரியுமா? பயனும்.. எதிர்பார்ப்பும்!
ஒரு பெண்குழந்தை பத்து வயதை எட்டுவதற்கு முன்னால் அதன் பெற்றோர் பாதுகாவலராக இருந்து கணக்கை துவக்கலாம் . பத்து வயது முடிந்தததும் அப்பெண் குழந்தையே அக்கணக்கை நிர்வகிக்கலாம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை அதில் பணம் சேமிப்பு செய்யலாம்.

Exclusive : பெண் குழந்தைகள் வைத்திருப்போருக்கு பயனுள்ள திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம். தொடக்கத்தில் பயங்கர ஆர்வத்தை தந்த இத்திட்டம் இப்போது எப்படி இருக்கிறது? அதன் பயன் என்ன? அத்திட்டம் மீதான எதிர்பார்ப்பு என்ன? அத்தனையையும் அலசி ஆராய்கிறது இந்த கட்டுரை. முன்னாள் அஞ்சலக அதிகாரியும், சமூக ஆர்வலருமான சேர்முக பாண்டியன், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார்.
திட்டத்தின் நோக்கம் என்ன?
பெண்குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்திட , அவர்களின் கல்வியை மேம்படுத்திட பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ என்ற பெயரில் பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சின் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பெண்களின் கல்வியை ஊக்குவிக்க கொண்டுவரப்பட்ட சுகன்யா சம்ருத்தி யோஜனா என்ற பெயரில் மத்திய அரசு துவக்கிய சேமிப்புத் திட்டமே செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.
பெண் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அக்குழந்தைகளின் பிற்கால கல்விக்கு, திருமணத்திற்கு சேர்த்து வைக்கும் சிறு சேமிப்பு பணத்துக்கு வழக்கமாக பிற சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியை விட கூடுதலாக வட்டி தந்து ஊக்குவிப்பதே அதன் பிரதான நோக்கம் .எனவே திட்டம் துவக்கப்பட்ட நாளான 22.01.2015 அன்று அதன் வட்டி 9.1% என நிர்ணயம் செய்யப்பட்டது . பின்னர் இரண்டு மாதங்களிலேயே வட்டி விகிதம் 9.2% ஆக 01.04.2015 முதல் உயர்த்தப்பட்டது.
திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு கிடைக்கும் பயன்
ஒரு பெண்குழந்தை பத்து வயதை எட்டுவதற்கு முன்னால் அதன் பெற்றோர் பாதுகாவலராக இருந்து கணக்கை துவக்கலாம் . பத்து வயது முடிந்தததும் அப்பெண் குழந்தையே அக்கணக்கை நிர்வகிக்கலாம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை அதில் பணம் சேமிப்பு செய்யலாம் . குறைந்த பட்ச சேமிப்பு ரூ250 . அடுத்த அடுத்த சேமிப்புகள் நூறின் மடங்காக இருக்க வேண்டும். துவக்கப்பட்ட தேதியிலிருந்து 21 ஆண்டுகளில் கணக்கு முதிர்வடையும் . அப்பெண் உயர்கல்வி கற்க சென்றால் சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் . சேமிப்புத் தொகைக்கும் அதில் கிடைக்கும் வட்டிக்கும் வருமான வரியிலிருந்து விலக்கு உண்டு . கூடுதல் வட்டி விகிதமும் உயரிய நோக்கமும் கொண்ட இத்திட்டம் மக்களிடையே ஆரம்ப காலத்தில் மிகவும் வரவேற்பு பெற்றது.
ஆரம்பித்தில் இருந்த ஆர்வம்.. இப்போது?
ஆனால் செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு 01.01.2024 முதல் 8.2% வழங்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல்கள் பேரில் இந்த வட்டி குறைப்பு செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்தியா முழுதும் விரிந்து பரந்து இருக்கும் தபால் அலுவலகங்கள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த துவக்க காலத்திலிருந்தே அஞ்சல் துறை முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. இந்திய அஞ்சல் துறையின் 2023-2024 ஆண்டறிக்கையின்படி 31.03.2023 தேதி வரை செல்வ மகள் திட்டம் மூலம் திரட்டப்பட்ட சேமிப்பு தொகை 1.23 லட்சம் கோடியாகும். இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான சேமிப்பைத் திரட்ட தமிழகம் முழுதும் தொடர்ச்சியாக மேளாக்கள் நடைபெற்று வருகின்றன.
தர வரிசைப்படி செல்வ மகள் திட்டம் மூலம் திரட்டப்பட்ட சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை விபரம் இதோ:
தர வரிசை | மாநிலத்தின் பெயர் | சேமிப்பு கணக்குகள் |
---|---|---|
1 | தமிழ்நாடு | 15345 கோடியே 31.44 லட்சம் |
2 | கர்நாடக | 13757 கோடியே 24.86 லட்சம் |
3 | உத்தரபிரதேசம் | 12361 கோடியே 32.20 லட்சம் |
தமிழகத்தில் பெண் குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் அவர்களது கல்வி மேம்பாட்டில் காட்டும் அக்கறையையே இது காட்டுகிறது . இது தமிழக கல்வியாளர்கள் வரவேற்க வேண்டிய செய்தி. தமிழக அரசும் பெண்களின் உயர்கல்விக்கு தொடர்ந்து பல திட்டங்களை அமல்படுத்தி வருவதால் இந்த சேமிப்புத் திட்டம் அதற்கு துணை செய்கிறது .
ஆர்வம் குறைந்து வருகிறதா?
ஆனால் செல்வ மகள் திட்டத்தின் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால் புதிய கணக்குகள் துவக்கப்பட்டாலும் ஆரம்ப காலத்தில் இருந்த வளர்ச்சி வேகம் இப்போது இல்லை. அஞ்சல் துறை உயர் அதிகாரிகள் தல நிலவரம் குறித்த புரிதல் இல்லாமல் குறிப்பிட்ட காலவரையறைக்குள் இவ்வளவு எண்ணிக்கையில் கணக்குகள் துவக்க வேண்டும் என அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து நிர்பந்தம் செய்து வதைப்பது தொடர்கதையாக உள்ளது.
தானாக முன்வந்து கணக்குகளை துவக்கும் வகையில் மக்களை ஈர்க்கும் வகையில் செல்வ மகள் திட்டத்திற்கு துவக்க காலத்தில் தந்த வட்டி விகிதத்தை இப்போதும் வழங்க வேண்டும் . பெண்கள் கல்வியை இலக்காக வைத்து கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் இதன் வட்டி விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டால் குறைக்கப்பட்டது என அரசு காரணம் சொல்லித் தப்பிக்க கூடாது . மத்திய அரசின் பிரத்யேக சிறப்புத் திட்டம் என்பதால் குறைந்த பட்ச வட்டி விகிதம் 9.2% என நிர்ணயம் செய்து நல்லதோர் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதன் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்துமா? மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
குறிப்பு: இது ஒரு கட்டுரையாளர் பகுதி. இதில் இடம் பெறும் கருத்துக்களும், தகவல்களும் கட்டுரையாளின் கருத்துக்களே.

டாபிக்ஸ்