Service charges in Banks: அடிக்கடி வங்கிகளில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறதா ? தேவை கவனம்!!
Service charges in Banks: சேமிப்பு கணக்கில் இருந்து அடிக்கடி பணம் பிடிப்பதாக வங்கி தரப்பிடமிருந்து நமக்கு எஸ்எம்எஸ் அல்லது பாஸ்புக் பதிவேட்டின் போது நாம் காணக்கூடும். அவ்வாறு வங்கிகள் விதிக்கும் சேவை கட்டணங்கள் (சர்வீஸ் சார்ஜஸ்) குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பு கணக்கே இல்லாதவர் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு வங்கி சேவை அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. டிஜிட்டல் காலகட்டம் வந்த பிறகு நம்முடைய கைகளிலேயே மொத்த வங்கி சேவையும் அடங்கி விடுவதால் சேமிப்பு கணக்கின் தேவையும் டிஜிட்டல் சார்ந்த சேவைகளை பிரதானமாக நம்பியே நாம் இருக்கிறோம். அப்படி இருக்க சேமிப்பு கணக்கில் இருந்து அடிக்கடி பணம் பிடிப்பதாக வங்கி தரப்பிடமிருந்து நமக்கு எஸ்எம்எஸ் அல்லது பாஸ்புக் பதிவேட்டின் போது நாம் காணக்கூடும். அவ்வாறு வங்கிகள் விதிக்கும் சேவை கட்டணங்கள் (சர்வீஸ் சார்ஜஸ்) குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
சேவைக் கட்டணம் என்றால் என்ன ?
வங்கிகள் நமக்கு வழங்கும் சேவைக்கு ஈடாக சேவை கட்டணம் வசூலிக்கிறது. அதுதான் சர்வீஸ் சார்ஜஸ் என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக நாம் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டு, வங்கிகள் நமக்கு அனுப்பும் எஸ்எம்எஸ் சேவை, மொபைல் பேங்கிங் மூலமாக அனுப்பும் பணம் என ஒவ்வொரு சேவைக்கு ஏற்ப சேவை கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவை ஒவ்வொன்றாக இங்கு காண்போம். இந்த சேவை கட்டணங்கள் வங்கிகளை பொறுத்து மாறுகின்றன.
ஏடிஎம் கார்டு:
நாம் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டுகளுக்கு வருடாந்திர அடிப்படையில் சேவை கட்டணம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதை வங்கி அதிகாரிகள் AMC (Annual maintenance charges) என்று கூறுவார்கள். இதை நாம் நமது பாஸ்புக் எண்ட்ரிகளில் பார்த்திருப்போம். எனினும் இதைப் பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினால் நாம் வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. நாம் வைத்திருக்கும் காடுகளுக்கு ஏதுவாக (Classic, Platinum, International) AMC நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் கிளாசிக் கார்டுகள் என்றால் AMC குறைவாகவும் இன்டர்நேஷனல் கார்டுகள் என்றால் கூடுதலாகவும் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே போன்ற சார்ஜஸ் கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.
அதேபோன்று குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் நாம் ஏடிஎம்மில் எடுக்கும் பணத்திற்கும் Excess ATM withdrawal charges என்று பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. பொதுவாக மெட்ரோ நகர் பகுதிகளில் அமைந்திருக்கும் ஏடிஎம் என்றால் மாதத்திற்கு மூன்று முறையும் மெட்ரோ அல்லாத பகுதிகளில் அமைந்திருக்கும் ஏடிஎம்களுக்கு மாதத்திற்கு ஐந்து முறையும் சேவை கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். பேலன்ஸ் சரி பார்ப்பதற்காக ஏடிஎம் கார்டை உள்ளே செலுத்தினாலும் சார்ஜஸ் ஒன்று என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே வங்கிகள் வழங்கும் மொபைல் பேங்கிங் சேவையிலேயே பேலன்ஸை சரி பார்ப்பதே நல்லது.
பிரதான பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஏடிஎம் சர்வீஸ் சார்ஜஸ் குறித்து அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறுந்தகவல் சேவை
நம் கணக்கில் பணம் வருவதற்கும் போவதற்கும் வங்கிகள் எஸ்எம்எஸ் அனுப்புவதுண்டு. அவ்வாறு அனுப்பும் குறுந்தகவல்களுக்கு நம் கணக்கில் இருந்து SMS Service charges என்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வீதம் என ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணம் வங்கிகளை பொறுத்து மாறுகின்றன.
இதேபோன்று மொபைல் பேங்கிங் மூலமாக IMPS(Immediate Payment Settlement System) வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் சர்வீஸ் சார்ஜஸ் குறைந்த அளவில் வசூல் செய்யப்படுகிறது.
அன்றாடம் நம் சேமிப்பு கணக்கில் காணப்படும் சேவைக் கட்டணங்கள் இவ்வளவே. சேவை கட்டணங்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ள வங்கிகளின் இணையதளத்தை பார்வையிடவும். அதில் ஒவ்வொரு சேவைக்கு அளிக்கப்படும் சர்வீஸ் சார்ஜஸ் குறித்து விரிவான தகவல் வழங்கப்பட்டிருக்கும். இன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவை நிதி குறித்த அறிவே ஆகும். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நிதி குறித்த அறிவு பெறுவதன் முயற்சியே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

டாபிக்ஸ்