காலை உணவு கலகலக்க வேண்டுமா? பாலக் - பன்னீர் இட்லி; பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுகிறதா?
பாலக் - பன்னீர் இட்லி செய்வது எப்படி என்று பாருங்கள்.
இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது.
கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பாலக் கீரை – அரை கப்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பன்னீர் – அரை கப்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் இட்லி மாவு தயாரித்துக்கொள்ளவேண்டும். அதற்கு அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளவேண்டும். உளுந்துடன் வெந்தயத்தையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஊறவைத்த மாவை தனித்தனியாக மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தனித்தனியாக அரைத்த மாவை ஒன்று சேர்த்து, உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை 8 மணி நேரம் புளிக்க வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் சீரகம் தாளித்து, வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய பாலக்கீரை, பச்சை மிளகாய், துருவிய பன்னீர், இஞ்சி என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். இதனுடன் உப்பு சேர்த்து அனைத்தும் வதங்கி திரண்டு வரும் வரை எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தக்கலவை தயாரானவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைக்கவேண்டும்.
இட்லி மாவை எடுத்து இட்லி பாத்திரத்தில் சிறிது ஊற்றி, ஒரு ஸ்பூன் இந்த பாலக் பன்னீர் கலவை எடுத்து அதற்கு உள்ளே வைக்கவேண்டும். அதற்கு மேல் சிறிது மாவை ஊற்றி மூடிவிடவேண்டும். இதை வேக வைத்து ஏடுத்தால் பாலக்-பன்னீர் இட்லி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும். இதை பொடி தூவி அலங்கரித்து, சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறினால், காலை உணவு மேடையே கலகலக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்