Cooker Veg Kuruma : குக்கரில் 2 விசில்விட்டு இறக்கினால் போதும்! பட்டுன்னு ரெடி ஆயிடும் 10 நிமிடத்தில் வெஜிடபுள் குருமா!
Cooker Vegetable Kuruma : இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என டிஃபன் வெரைட்டிகளுக்கும், வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட சாதங்களுக்கும், பிரியாணி, புலாவ் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்
கேரட் – 1
பீன்ஸ் – 8
உருளைக்கிழங்கு – 1
ஊறவைத்த பட்டாணி – கால் கப்
இஞ்சி - பூண்டு விழுது – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பட்டை – 2
கல்பாசி – சிறிதளவு
கிராம்பு – 3
கறிவேப்பிலை – 20
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
புதினா இலைகள் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல் – முக்கால் கப்
முந்திரி பருப்பு – 7
சோம்பு – ஒரு ஸ்பூன்
கசகசா – அரை ஸ்பூன்
செய்முறை
கேரட் மற்றும் உருளைக்கிழங்கை தோலை சீவி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்.
ஊறவைத்த பட்டாணி தண்ணீரை வடிகட்டவேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்துகொள்ளவேண்டும். பச்சை மிளகாயை கீறிவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு, சோம்பு, கசகசா மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டால் போதும். குக்கரில் சேர்த்து இரண்டு விசில்விட்டால் குருமா தயராகிவிடும்.
குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கல்பாசி போட்டு வாசம் வந்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து வதக்கவேண்டும். அவை பச்சை வாசம் போனவுடன், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவேண்டும். அதனுடன், நறுக்கிய காய்கறிகள் மற்றும் ஊறவைத்த பட்டாணி சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடிவைத்து, 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
குக்கரில் இருக்கும் ஆவி தானாக அடங்கியதும், திறந்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கரம் மசாலாதூள் சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவேண்டும்.
பின் பொடியாக நறுக்கிய புதினா இலைகள், கொத்தமல்லி இலை மற்றும் வெண்ணெய் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து 20 நிமிடங்கள் மூடிவைக்கவேண்டும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என டிஃபன் வெரைட்டிகளுக்கும், வெரைட்டி ரைஸ் உள்ளிட்ட சாதங்களுக்கும், பிரியாணி, புலாவ் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் கார அளவுக்கு ஏற்ப பச்சை மிளகாய் அளவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தேங்காய் முந்திரி விழுதை சேர்த்த பின் குருமாவை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. அரைக்கும் விழுதில் விருப்பப்பட்டால் 2 ஏலக்காய் மற்றும் 1 நட்சத்திர சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.
நன்றி – விருந்தோம்பல்.

டாபிக்ஸ்