வத்தல் குழம்பு : நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட்! ஐயங்கார் ஸ்டைலில் வீட்டிலே செய்யலாம் எளிதாக!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வத்தல் குழம்பு : நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட்! ஐயங்கார் ஸ்டைலில் வீட்டிலே செய்யலாம் எளிதாக!

வத்தல் குழம்பு : நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட்! ஐயங்கார் ஸ்டைலில் வீட்டிலே செய்யலாம் எளிதாக!

Priyadarshini R HT Tamil
Updated Mar 28, 2025 11:01 AM IST

வத்தல் குழம்பு : நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட், இதை நீங்கள் வீட்டிலே தயாரித்து சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதனால் உங்களின் பரபரப்பான நாட்களில் வேலை எளிதாகும்.

வத்தல் குழம்பு : நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட்! வீட்டிலே செய்யலாம் எளிதாக! இதோ ரெசிபி!
வத்தல் குழம்பு : நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட்! வீட்டிலே செய்யலாம் எளிதாக! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• புளி – எலுமிச்சை அளவு

(சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும், கரைத்துக்கொள்ளவேண்டும்)

• நெய் – ஒரு ஸ்பூன்

• சுண்டைக்காய் வத்தல் – 3 டேபிள் ஸ்பூன்

• நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• கடலை பருப்பு – 2 ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

• பொடித்த வெல்லம் – ஒரு ஸ்பூன்

வத்தக் குழம்பு பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்

• நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

• வரமல்லி விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்

• கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

• உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்

• மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்

• வெந்தயம் – ஒரு ஸ்பூன்

• வர மிளகாய் – 10

செய்முறை

1. கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதை சூடாக்கவேண்டும். அடுத்து மல்லி விதைகள், கடலை பருப்பு, உளுந்து, மிளகு, வெந்தயம் மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். அனைத்து பொருட்களும் கருகிவிடாமல் மணம் வரும் வரை வறுக்கவேண்டும். குறைந்த தீயிலே இவற்றை வறுத்துக்கொள்ளவேண்டும். வறுக்கும்போது தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறுவதை நிறுத்திவிட்டால் கருகிவிடும். எனவே இதை வறுக்கும்போது மிகுந்த கவனம் தேவை. வறுத்தவற்றை ஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடாக்கி, அதில் சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை இறுதியாகத்தான் சேர்க்கவேண்டும். எனவே இதையும் எடுத்து தனியாக ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.

3. அதே கடாயில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.

4. அடுத்து பொடித்தவற்றை சேர்த்து மணம் வரும் வரை நன்றாகக் கிளறவேண்டும். இந்தப் பொடி நன்றாக வறுபட்டவுடன், புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். அது நன்றாக கொதி வந்தவுடன், அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூளை சேர்க்கவேண்டும். குறைவாக தீயிலே இவற்றை நன்றாகக் கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கி ஆறவிடவேண்டும். சூப்பர் சுவையான வத்தக்குழம்பு பேஸ்ட் தயார். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவை அள்ளும்.

ஆறிய வத்தக்குழம்பு பேஸ்டை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதை நீங்கள் தேவைப்படும்போது எடுத்து சூடாக்கி சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.

இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், முட்டை ஆம்லேட் இருந்தாலே போதும். வேறு எதுவும் தேவையில்லை. பரபரப்பான நாளில் எளிமையாக லன்ச் செய்து முடித்துவிடலாம்.