Urad Payasam : திருநெல்வேலி ஸ்பெஷல் ரெசிபி! உளுந்து பாயாசம்! பெண்களின் உடலை வலுப்படுத்தும்!
உளுந்து பாயாசம் செய்வது எப்படி என்று பாருங்கள்.

உளுந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் தானியங்களுள் ஒன்று. தினமும் இட்லி அல்லது தோசைதான் நாம் அதிகளவில் பயன்படுத்தும் டிஃபனாக உள்ளது. அதனால் உளுந்து நம் அன்றாட பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும். உளுந்தில் இட்லி, தோசை, வடை ஆகியவைதான் பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் பாயாசமும் செய்ய முடியும். அது எப்படி என்று பாருங்கள். உங்கள் வீட்டில் பாயாசம் செய்யும் விஷேச நாட்களில் இந்த பாயாசத்தை செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
உளுந்து – ஒரு கப் (வெள்ளை அரை உளுந்து எடுத்துக்கொள்வது நல்லது. உடைத்த கருப்பு உளுந்தை ஊறவைத்து அதன் தோலை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்)
பால் – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பூண்டு – 6 பல்
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு
திராட்சை – ஒரு கைப்பிடியளவு
நெய் – 4 ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
செய்முறை
உளுந்தை நன்றாகக் கழுவிக்கொள்ளவேண்டும. அதை குக்கரில் சேர்த்து, பூண்டை நறுக்கி அதனுடன் சேர்த்து 6 விசில் வரும் வரை வேகவிடவேண்டும். உளுந்த நன்றாக வெந்தவுடன், அதில் வெல்லம் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெல்லத்தைக் கரைத்து அதில் பால் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அனைத்தும் நன்றாக கலந்து வரும்போது தேங்காய்த் துருவல் சேர்க்கவேண்டும். அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து அதில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையான உளுந்து பாயாசம் தயார்.
இந்தப் பாயாசத்தில் உளுந்து மற்றும் பூண்டு சேர்ப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. சுவையும் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே இதை கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள்.
பாயாசம் என்பது இனிப்பான ஒன்று அதில் மசாலாப் பொருளான பூண்டை சேர்த்து செய்வது நன்றாக இருக்குமா என்ற சந்தேகம் வரும். ஆனால் பூண்டு செய்து சாப்பிட்டு பாருங்கள் நன்றாக இருக்கும். பூண்டின் வாசமும் தெரியாது. பூண்டு இல்லாமலும் செய்ய முடியும். பசும்பாலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
உளுந்தின் நன்மைகள்
சர்க்கரை நோயாளிகள் உளுந்தை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு முறையாக பராமரிக்கப்படும். உளுந்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுகிறது. உளுந்து சருமத்துக்கு நல்லது. கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும். இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. செரிமானத்துக்கு நல்லது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்றுப்போக்கை எதிர்த்து போராட உதவுகிறது. உடல் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்தத்தை வழங்குகிறது. உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாக்குகிறது. மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்னைகளை தடுக்கிறது. உடலில் இரும்புச்சத்தை அதிகப்பதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நல்லது. உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்