Summer Tips: முலாம் பழத்தை வைத்து 2 புதுமையான குளுகுளு ரெசிபிகள்
முலாம் பழத்தை வைத்து 2 புதுமையான குளுகுளு ரெசிபிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
கோடையை சமாளிக்க பழங்களே போதும். இந்த வருடமும் நுங்கு, மாம்பழம், தர்பூசணி, மூலம்பழம் என சந்தை களைகட்டத் தொடங்கி விட்டது...
கோடையில் வயிற்றுக்கு குளிர்ச்சி தரவும் உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் முலாம் பழங்களை சாப்பிடலாம். இதனால் கோடைகால பிரச்னைகளை தவிர்ப்பதோடு மட்டுமின்றி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். இந்த பருவ காலத்தில் கிடைக்கக்கூடிய முலாம் பழங்களை உண்டு பயன் அடையுங்கள்.
பொதுவாக முலாம் பழங்களை கொண்டு ஜூஸ் போட்டு குடிப்பது வழக்கம். ஆனால் சுவை மிகுந்த இந்த முலாம் பழங்களை கொண்டு நிறைய வித்தியாசமான ரெசிபிகளையும் செய்யலாம். அந்த வகையில் முலாம்பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் இரண்டு புதுவிதமான ரெசிபிகளை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி-
தேவையான பொருட்கள்:
முலாம்பழம் - 200 கிராம்
ஸ்ட்ராபெர்ரி - 3
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி - 2
முலாம்பழம் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி செய்முறை
முதலில் முலாம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஸ்ட்ராபெர்ரிகளையும் சுத்தம் செய்து தயாராக வைக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸர் ஜாரில் முலாம் பழம், ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை, தேன் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
இதை வடிகட்டாமல் குடித்தால் நார்ச்சத்துக்களை இழக்காமல் முழு நன்மைகளையும் பெறலாம்.
முலாம்பழம் ஐஸ்கிரீம்-
தேவையான பொருட்கள்:
முலாம்பழம் - 200 கிராம்
பால் - 1 கப்
கிரீம் - 1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் - 1 டீஸ்பூன்
வெண்ணிலா எஸ்ஸன்ஸ் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
முலாம்பழம் ஐஸ்கிரீம் செய்முறை
முதலில் முலாம் பழத்தின் தோலை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கஸ்டர்ட் பவுடருடன் சிறிதளவு பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் மீதமுள்ள பாலுடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
இதனுடன் கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.
இது திக்காகி கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
கஸ்டர்ட் பால் கலவை நன்கு ஆறிய பிறகு, இதனுடன் அரைத்து வைத்துள்ள முலாம்பழம், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை ஃப்ரீசரில் 5-6 வைத்து பரிமாறலாம்.
கோடைக்கு உகந்த இந்த இரண்டு ரெசிபிக்களை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.