Tuberculosis : காசநோயால் கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்! பலனளிக்காத நடவடிக்கைகள்!
Tuberculosis : காசநோயால் கொத்துக்கொத்தாக மக்கள் மடிகின்றனர். இதற்கு மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அவற்றுள் ஒன்றாகவும், முக்கியமானதாகவும் காசநோய் உள்ளது. இன்று காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இங்கு அலசப்பட்டுள்ளது. மேலும் முக்கிய புள்ளிவிவரங்களும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசநோய்
2025க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பது சாத்தியமில்லை.
இந்திய அரசு சாசநோயால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், 2025க்குள் காசநோயை ஒழிப்பது குறித்து திட்டங்களை மேற்கொண்டாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக காசநோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
காசநோய் பாதிப்பு
2015ல் இந்தியாவில் லட்சத்தில் 237 பேருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது, 2020ல் 197 பேர்/லட்சம் எனக் குறைந்தாலும், தொடர்ந்து குறையாமல், கடந்த 2-3 ஆண்டுகளாக, கட்டுப்பாட்டுத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அதே நிலையில் தேங்கி இருக்கும் சூழல் நிலவுவதால், 2025க்குள் காசநோயை ஒழிப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை.
உலகில் உள்ள காசநோயாளிகளில் 4ல் ஒருவர் இந்தியர். (இந்தியாவில் மொத்த பாதிப்பு 25 லட்சம். உலக அளவில் பாதிப்பு-1.05 கோடி பேர்)
இந்தியாவில் ஆண்டுக்கு காசநோயால் 4,80,000 பேர் மடிகின்றனர். நாள் ஒன்றுக்கு 1,400 பேர் மடிகின்றனர்.
காசநோயால் ஏற்படும் பாதிப்புகள்
காசநோயால் ஏற்படும் பாதிப்புகள், உயிரிழப்புகள், வறுமை போன்றவற்றை நீக்க திட்டங்கள் இருந்தாலும், நோயை கண்டறிவதிலேயே பிரச்னை நீடிக்கிறது. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு காசநோய் இருந்தும், அது இந்தியாவில் கண்டறியப்படாமல் (Missing TB) உள்ளது.
பெரும்பாலான காசநோயாளிகளின் காசநோய் பாதிப்பு கண்டறியப்படாமல் இருப்பதுடன், முறையாக கண்டறிந்து உறுதிசெய்யப்படாமல் போவதும், முழு சிகிச்சை கிடைக்காமல் போவதும் இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்னைகள்.
காசநோய் சிகிச்சை
ஆரம்பத்திலேயே காசநோயை கண்டறிதல் (கையில் எடுத்துச் செல்லும் X கதிர் இயந்திரங்கள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நோயை சிறப்பாக கண்டறிதல்), முழுமையான சிகிச்சை அளித்தல், முழு சிகிச்சையை தொடர்ந்து பெற ஆதரவளிக்கும் திட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசு முயன்றாலும், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் செயல்பாடுகளில் தொய்வும், சிக்கலும் இருக்கத்தான் செய்கின்றன என அரசு அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.
ஆண்டிற்கு 10 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்டாத இந்திய சூழலில், காசநோய் பாதிப்பு மற்றும் இறப்புகளை குறைக்க இன்னமும் கூடுதல் முயற்சிகளை அரசு கையாண்டால் மட்டுமே ஓரளவிற்காவது காசநோய் ஒழிப்பு சாத்தியம். காசநோய் கட்டுப்பாட்டிற்கு புதுத் திட்டங்கள் தேவை என்பதை அரசு அதிகாரிகளே ஏற்றுக்கொள்கின்றனர்.
அது இல்லாதவரை 2025க்குள் காசநோய் ஒழிப்பு என்பது சாத்தியமில்லை.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்