Tomato Thuvayal : தக்காளி துவையல்; மூன்று நாட்கள் வரை கெடாது! சூப்பர் சுவையில் அசத்தும்! டிபஃனுக்கு நல்ல காம்போ!
Tomato Thuvayal : தக்காளி துவையல் செய்திருக்கிறீர்களா? மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தொக்கைவிட சூப்பர் சுவையில் அசத்தும். டிபஃனுக்கு நல்ல காம்போ.

தேவையான பொருட்கள்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 2
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி – ஒரு இன்ச்
பச்சை மிளகாய் – 2
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – கால் ஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
கடாயில் வரமல்லி, சீரகம், வெந்தயம், வரமிளகாய் சேர்த்து ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். இதை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் புளி, மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, இவையிரண்டையும் சூட்டிலே வதக்கவேண்டும்.
அனைத்தும் ஆறியவுடன், ஏற்கனவே பொடித்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக துவையல் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு தாளிப்பு தேவையில்லை. அப்படியே இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது வெளியில் எடுத்து ஆறவைத்து சூடு செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.
இதை ஊருக்கு செல்லும் நாட்களில் பயன்படும் ஒரு சட்னி. பயணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்லும்போது இதை செய்து வைத்துக்கொண்டால் நீண்ட நேரம் கெடாமல், சுவையும் மாறாமல் இருக்கும். மேலும் இந்த துவையலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்புகள்
தக்காளி நல்ல பழுத்த தக்காளியாக இருக்கவேண்டும்.
இதை நாட்டுத்தக்காளியில்தான் கட்டாயம் செய்யவேண்டும். பெங்களூர் தக்காளியில் முயற்சித்துவிடாதீர்கள். சுவை நன்றாக இருக்காது.
இதை இட்லி, தோசை, சாப்பாத்திக்கு தொட்டுள்கொள்ளலாம். வெரைட்டி சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும்.
தக்காளியின் நன்மைகள்
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.
தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.
இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.
100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் தொக்கு செய்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.
தக்காளி நாம் அன்றாட உணவில் சேர்ப்பதுதான் என்றாலும், அதன் நன்மை கருதி, அதை தினமுமே உணவில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும்.