TN Water Levels : தண்ணீர் தட்டுப்பாடு; அடுத்த இலக்கு தமிழகமா? அதிர்ச்சியூட்டும் நீரின் அளவுகள் – என்ன செய்வது?
TN Water Levels : பருவமழை நன்கு பெய்தும், தமிழக மொத்த நீர்தேக்கங்களில், 33 சதவீதம் மட்டுமே நிரம்பிருப்பதை கருத்தில்கொண்டு, மக்கள் தான் அரசிற்கு நீர்நிலைகளை காக்க அழுத்தம் தரவேண்டும்.
தமிழக நீர்தேக்கங்களில் நீரின் அளவு குறைவாக இருப்பதால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தில் தமிழக அரசு என்ன செய்திருக்க வேண்டும்?
கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நன்றாக பெய்திருந்தாலும், தமிழக நீர்தேக்கங்களில் கடந்தாண்டைவிட 50 சதவீதம் குறைவாகவே நீர் உள்ளது.
18.3.24 நிலவரப்படி, தமிழக நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 tmcft அளவில் 76.233 tmcft நீர் மட்டுமே (33.99 சதவீதம்) நிறைந்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு, 19.3.23 அன்று நீர்தேக்கங்களில் 135.087 tmcft நீர் (60 சதவீதம்) நிறைந்திருந்தது.
அதனால், தமிழக நீர்வளத்துறை, இந்தாண்டு, கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கிறது.
நீர்வளத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 70 நீர்தேக்கங்களில், 6ல் சொட்டுகூட நீர் இல்லை. 25 நீர்தேக்கங்களில் 20 சதவீத நீர் மட்டுமே நிரம்பியுள்ளது. 39 நீர்தேக்கங்களில் 20-50 சதவீதம் நீர் மட்டுமே நிரம்பியுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள வண்டல் ஓடையில் மட்டுமே முழுக் கொள்ளளவு நீர் (58 மில்லியன் கன அடி நீர்) நிரம்பியுள்ளது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்படுவதை சமாளிக்க முடியும் என தெரிவித்தாலும், பாசன வசதிக்கு சொட்டுநீர் கூட தரமுடியாது என்பதால் பயிரிடுவதை தள்ளிப்போட விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வடகிழக்கு பருவமழையின்போது பெய்த கனமழையால், பல நீர்தேக்கங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், அவற்றில், 50 சதவீதம் கொள்ளளவு நீரை மட்டுமே சேமிக்க முடியும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்படைந்த மாவட்டங்களில் இருக்கும் நிலையை சீர்செய்ய அரசு 280 கோடி ஒதுக்கியிருந்தாலும், பணம் வந்த பிறகே பணிகளை மேற்கொள்ள முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேட்டூர் அணையில், அதன் மொத்த கொள்ளளவான 93.47 tmcft நீர்அளவில், 56.4 மி.மீ. மழைப்பொழிவின் காரணமாக 69.21 tmcft நீர் மட்டுமே நிரம்பியுள்ளது.
தற்போது, மழை பெய்யாத காரணத்தால், அதில் 26.05 tmcft நீர் மட்டுமே உள்ளது. கோடையில் மழை பெய்யாவிடில், குடிமக்களுக்கு நீர் விநியோகம் செய்வது சிரமமே.
சென்னையை பொறுத்தமட்டில், முக்கிய நீர்தேக்கங்களின் மொத்தகொள்ளளவான 13.213 tmcft நீர் அளவில்,8.454 tmcft நீர் நிரம்பியுள்ளதால் (63.98 சதவீதம்) கோடைக் காலத்தில் மக்களின் குடிநீர் தேவையை எளிதில் சமாளிக்க முடியும் என்பதே நீர்வளத்துறை அதிகாரிகளின் கூற்றாக உள்ளது.
தமிழக அரசு எதை செய்திருக்க வேண்டும்?
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்திருந்தும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தான், மழை நீரை சேமிக்க முடியாமல் போனது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே, நீர்நிலைகளின் குறுக்கே தேவையான தடுப்பணைகள் கட்டுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
நீர்நிலைகளின் கரைகளை பலப்படுத்தி போதுமான நீரை மழையின்போது சேமிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
நீர்நிலைகள் அல்லது நீர்தேக்கங்களை (மேட்டூர் அணை உட்பட) தூர்வாரும் பணியை செவ்வனே அரசு செய்திருந்தால், அதிக மழைநீரை சேமித்திருக்க முடியும்.
மரங்கள் அதிகமுள்ள, முக்கிய சுற்றுலாத் தலமான ஊட்டியில் கூட நீர்தேக்கங்களில் நீரின் அளவு குறைவாக இருப்பதால், 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர், குழாய் வழியாக வழங்கும் அவலம் நடந்துள்ளது.
ஊட்டியில் மொத்தமுள்ள 10 நீர்தேக்கங்களில் சிலவற்றில் நீர் முற்றிலும் வற்றியும், சிலவற்றில் குறைவான அளவுமே நீர் நிரம்பியுள்ள சூழல் உள்ளது.
பருவமழை பொய்த்ததின் காரணமாகவே இது நடந்தேறியுள்ளது.
பார்சன் பள்ளத்தாக்கு, மார்லிமுன்ட், டைகர்ஹில், கோரிசோலா நீர்தேக்கங்களில் 30 சதவீதம் நீர் மட்டுமே நிறைந்துள்ளது.
கோடையில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் வேளையில், போதுமான மழை பெய்யாவிடில் குடிநீர் பிரச்னை ஏற்படுவதை சமாளிப்பது சிரமம்.
தற்போது குறைந்த அளவு குடிநீர், குறைந்த நேரத்திற்காவது மக்களுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
36 அடி மொத்த கொள்ளளவு உள்ள மார்லிமுன்ட் நீர்தேக்கத்தில் தற்போது 8 அடி மட்டுமே நீர் உள்ளது.
பார்சன் பள்ளத்தாக்கு நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 54 அடியில், 18 அடி மட்டுமே நீர் உள்ளது.
முனிசிபல் பகுதியில், மொத்தம் 50,000 குடிநீர் குழாய் இணைப்புகள் இருக்க, அனைவருக்கும் தேவையான குடிநீரை வழங்க 200 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
அதிக மரங்கள் உள்ள ஊட்டியிலே தண்ணீர் பஞ்சம் என்றால், தமிழகத்தின் பிற இடங்களில் இந்த கோடையில் குடிநீர் கிடைப்பது எப்படியிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.
இந்த சுழலில் தமிழகத்தின் ஈரநிலங்களை காக்க வேண்டும் என இருந்தும், தமிழக அரசு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு, மொத்த பரப்பில் ஏறக்குறைய 26 சதவீதம் ஈரநிலங்கள் பரப்பை, உள்ளூர் மக்கள் அல்லது பஞ்சாயத்துகளின் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்த முனைவது எப்படி சரியாகும்?
பருவமழை நன்கு பெய்தும், தமிழக மொத்த நீர்தேக்கங்களில், 33 சதவீதம் மட்டுமே நிரம்பிருப்பதை கருத்தில்கொண்டு, மக்கள் தான் அரசிற்கு நீர்நிலைகளை காக்க அழுத்தம் தரவேண்டும்.
நன்றி மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்