House Buy: பழைய வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை - நிபுணர் சொல்லும் முக்கிய அம்சங்கள்
- House Buy: பழைய வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை - நிபுணர் சொல்லும் முக்கிய அம்சங்கள்
House Buy: பழைய வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டியவை பற்றியும் நிபுணர் சொல்லும் முக்கிய அம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.ரைட்ஸ் யூட்யூப் சேனலில் வழக்கறிஞர் சிவா அளித்த தகவலின்படி, ’’முதலில் ஒருவர் குடியிருக்கும் வீட்டில் வில்லங்கம் ஏதும் இல்லை என்று நினைக்காமல், அந்த பழைய வீட்டின் வில்லங்க சான்றினை வாங்கி சரிபார்த்துக்கொள்வது அவசியம்.
ஒருவேளை ஒரிஜினல் மூலப்பத்திரம் காணாமல்போய்விட்டது என்று சொன்னால்,மிக கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், பத்திரம் வங்கியிலோ அல்லது தனிநபரிடமோ அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், காவல்துறையினரிடம் அவர்கள் புகார் கொடுத்து, நகல் பத்திரம் வாங்கி வைத்திருக்கலாம்.
பொதுவாகவே, ஒரிஜினல் பத்திரம் வைத்திருப்பவர்கள் தான், அந்த வீட்டின் சொந்தக்காரர்களாக இருக்கமுடியும். ஒரிஜினல் பத்திரம் கை வசம் இருக்கும்போது, நகல் பத்திரம் செல்லாது என்பது நம் எல்லோருக்குமே தெரியும். அதனால் எல்லாத்தையும் தெளிவாக விசாரித்தபின் தான், வீடு வாங்க வேண்டும்.
அளவுகள் சரிபார்ப்பு பிரதானம்:
பழைய பத்திரத்தில் இருக்கும் அளவுகளையே, புதிய பத்திரத்தில் எழுதுவது வழக்கமாக இருக்கும். பத்திரத்தில் இருக்கும் நீள, அளவுகள் சரியாக இருக்கின்றதா என்று ஒருமுறைக்கு இருமுறை அளந்து பார்த்துக்கொள்வது சரியாக இருக்கும்.
எதற்கு என்றால், அது பக்கத்தில் இருப்பவர்களால் ஆக்கிரமிப்பு செய்ப்பட்டிருக்கலாம். உள்ளாட்சி நெடுஞ்சாலைத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கலாம்.
வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி ஆகியவை சரியாக கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
ரொம்ப முக்கியமாக கட்டடத்தின் தரம், கட்டடத்தின் ஆயுள் எவ்வளவு, கட்டிமுடித்து எத்தனை வருடங்கள் ஆகின்றது என்பதை சிவில் இன்ஜினியர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது.
அதேபோல், வயரிங் பாதுகாப்பாக செய்யப்பட்டிருக்கிறதா என்பதையும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
ஒரு கட்டடம் முறையாக அனுமதிபெற்று கட்டப்பட்டுள்ளதா, அந்த மனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான், அந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பதையும், பொது இடம், சாலை, கழிவுநீர் கால்வாய் பகுதியில் கட்டப்பட்டிருக்கின்றதா என்பதையும், கட்டப்பட்ட முழு இடத்துக்கும் குடிநீர், கழிவுநீர் மின் விநியோகம் ஆகியவை சரியாக இருக்கின்றதா என்பதையும், கட்டட வரைபடத்தைக்கொண்டு சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதுவே, பழைய கட்டடமாக இருந்தால் ஏதாவது ஆட்சேபனை இருக்கின்றதா என்பதை அறிய செய்தித்தாளில் விளம்பரம் செய்வது நல்லது.
கட்டடம் பரம்பரை சொத்தாக இருந்தால் இதைச் செய்யுங்கள்!:
கட்டடம் பரம்பரை சொத்தாக இருக்கும்பட்சத்தில், நேரடி வாரிசுகள் மற்றும் மறைமுக வாரிசுகள் போன்ற வாரிசுகளின் தன்மை குறித்து தீர விசாரித்துக்கொள்வது நல்லது.
உயில் அல்லது ஏதாவது செட்டில்மென்ட் மூலம் ஒருவருக்குக் கிடைத்திருந்தால், கொடுத்தவருக்கு அப்படி கொடுக்கும் உரிமை உள்ளதா என்பதையும், விற்றபின் தந்தையின் பெயரில் இருந்திருந்தால், அவரின் பிள்ளைகளுக்கு எந்தவொரு ஆட்சபனேயும் இல்லை என்ற கையெழுத்தினையும் வாங்க வேண்டும்.
ஏனென்றால், உரிமையே இல்லாத ஒரு நபரின் அல்லது கூட்டு அதிகாரமுள்ள நபரின் பெயரிலோ, அல்லது போலியான நபரின் பெயரிலோ, அதிகாரப்பத்திரம் தயாரிக்கப்படலாம்.
பவர் ஆஃப் அட்டார்னிமூலம் கிரயம் செய்யும்போது, பவர் கொடுத்தவரை நேரில் சந்தித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். விற்பனை அதிகாரம்(பவர்) அளித்தவருக்கு, அப்படி அளிக்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
அதிகாரப் பத்திரம் பற்றிய தகவல்கள்:
இதில் அதிகாரம் அளித்தவர்(பவர் அளித்தவர்) உயிருடன் இருந்தால் தான், அதிகாரப் பத்திரம் செல்லும். அதனால் பத்திரப்பதிவின்போது , பவர் கொடுத்தவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை வணங்கினால் தான், பத்திரம் பதிவுசெய்யத் தகுதியானது.
இதில் முரண்பாடுகள் இருந்தால் கிரயத்தை ரத்து செய்யலாம். வாங்கும் உரிமையாளரிடமும், அதில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நன்கு விசாரித்துக்கொள்ள வேண்டும்.
இப்படி பல விஷயங்களைத் தெரிந்துகொண்டு வாங்கும்போது சட்டச்சிக்கல்களில் இருந்து தப்பி நிம்மதியாக வாழலாம்’’ என தெரிவித்து இருக்கிறார்.
நன்றி: ஆர்.எஸ்.ரைட்ஸ்
டாபிக்ஸ்