தினமும் 3 பெக் போட்டால் முடிந்தது கதை... பாஸ்! இது நீங்க 'தெளிய' வேண்டிய நேரம்
தினசரி மது அருந்துவதால் உடலில் ஏற்படும் பேரழிவு குறித்து எச்சரிக்கும் கட்டுரை இது. தயவுசெய்து படிங்க!
மது அருந்துதல் உங்கள் உடலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். காலப்போக்கில் அல்லது ஒரே நேரத்தில் அதிகமாக குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கும். உங்கள் இதயத்திலிருந்து உங்கள் வயிறு வரை, குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகள் இருக்கலாம், நீண்ட காலத்துக்கு சிகிச்சையளிப்பது கடினம். அதனால் உங்கள் ஆல்கஹால் மோகத்தைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவது மிகவும் முக்கியமானது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதிகமாக குடிப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் சாப்பிட்ட உணவை குடல் ஜீரணிக்காமல், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்களை திறம்பட உறிஞ்சுவது தடுக்கப்படும். அதிகப்படியான குடிப்பழக்கம் வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். இரைப்பையின் பாதுகாப்பு சுவர்களை சேதப்படுத்தி நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, உள்புறத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். நாள்பட்ட இந்த வீக்கம் அல்சராக உருவாகும். இரைப்பை உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு திடீர் மரணம் கூட ஏற்படலாம்.
மதுப்பழக்கத்தினால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் ரத்த நாளங்களின் சுவர்களில் ரத்தத்தின் விசை தொடர்ந்து அதிகமாகும். இது இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரே நேரத்தில் மூன்று பெக் சாப்பிட்டால் பீபி தாற்காலிகமாக அதிகரிக்கும். இதுவே தொடர்கதை ஆனால் நிரந்தரமாக பீபி வந்துவிடும். ஒரு பெக் என்பது 60 மி.லி. ஆகும்.
ஆல்கஹால் சாப்பிட்டவுடன் அது வயிற்றில் உறிஞ்சப்பட்டு நேரடியாக ரத்தத்தில் கலந்து கல்லீரலை சென்றடைகிறது. உங்கள் உடலுக்கு அத்தியாவசியமான செயல்களைச் செய்யும் கல்லீரல் மதுவையும் செரிக்க உதவுகிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு அது சரிப்பட்டுவராது. ஏனென்றால் கல்லீரலின் திசுக்களை ஆல்கஹால் மெல்ல மெல்ல அழித்துக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் கல்லீரலை மீட்க முடியாத அளவுக்கு கெட்டுப்போகச் செய்துவிடும். கல்லீரலை இழந்தால் உயிருக்கு உத்தரவாதமே இல்லை.
அதேபோல் மூளையில் உள்ள ரசாயனங்களின் செயல்படுகளை ஆல்கஹால் மந்தமாக்குகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் தான் வாகனங்களை ஓட்டும்போது எதிர்பாராத விபத்துகள் நிகழ்கின்றன என்று போலீஸார் கூறுகின்றனர். விபத்து சம்பவிக்கும்போது மது அருந்தியவர்களால் சரியாக சிந்தித்து முடிவெடுக்க முடியாமல் நிதானம் தவறிவிடுவதால் விபத்து நிகழ்கிறது.எனவேதான் குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பில் பணியாற்றுபவர்கள் வேலையில் கவனமாக செயல்பட முடியாமல் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர் என்று பிரபல கார்ப்பொரேட் நிறுவன ஹெச்ஆர் மேலாளர் சித்தார்த் கூறுகிறார்.
அதிகப்படியான மது அருந்துதல் கணைய அழற்சியை ஏற்படுத்தும், இதன் விளைவாக உணவு செரிமானத்துக்கு உதவும் நொதிகள், ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் திறனை கணையம் இழக்கத் தொடங்கும். உடல் சர்க்கரையை ஆற்றலாக மாற்றும் இன்சுலினை கணையம்தான் உற்பத்தி செய்கிறது. கணையம் பாதிக்கப்பட்டால் நீரிழிவு நோயாளியாக மாறிவிடும் ஆபத்து கட்டாயம் ஏற்படும்.
கணையத்தில் நாள்பட்ட வீக்கம் கணைய புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
இத்தகைய அபாயகரமான விளைவுகளைக் காட்டிலும் மது அருந்துவதால் கிடைக்கும் சந்தோஷம் ஒன்றும் பெரிதல்ல. காலம் தாழ்த்தாமல் மதுப்பழக்கத்தை உடனடியாக நிறுத்தினால் நல்லது. முடியாவிட்டால் படிப்படியாக முயலுங்கள்.
வாழ்க வளமுடன்!