குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? – சுற்றுச்சுசூல் நிபுணர் அலசல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? – சுற்றுச்சுசூல் நிபுணர் அலசல்!

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? – சுற்றுச்சுசூல் நிபுணர் அலசல்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 07, 2025 10:10 AM IST

மேலும், சூழல் சீர்கேடு காரணமாக, டெல்லியில் வாழும் மக்களின் வாழ்நாள் 12 வருடம் குறைந்ததாக ஆய்வுகள் உறுதிபடுத்தின. சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் டைஆக்சின் (Dioxin), புரான் (Furan) அளவு 9 மடங்கு அதிகமாக இருந்தது.

குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? – சுற்றுச்சுசூல் நிபுணர் அலசல்!
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் – வரமா? சாபமா? – சுற்றுச்சுசூல் நிபுணர் அலசல்!

குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் வெளித்தோற்றத்திற்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும், உண்மையில் சூழல் சீர்கேட்டை அதிகமாக்கி, மக்களுக்கு நோய் பாதிப்பை அதிகப்படுத்துவதே கள உண்மை என்பதால் கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

ஏப்ரல் 2025ம் தேதி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அளித்த தகவலில் இந்தியாவில் தற்போது 21 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகள் இயங்கி வருவதாகவும், இன்னமும் புதிதாக 556 திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் செய்திகள் உள்ளது.

இயங்கும் 21 குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள், அதிலிருந்து வெளியாகும் ஆபத்தான அனைத்து கழிவுகளையும் முறையாக கண்காணிக்காமல், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2016 விதிகளை முழுமையாக கடைபிடிக்காமல் இருப்பது சரியா?

அரசே விதிகளை மீறுவது எப்படி சரயாகும்?

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கூட குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் ஓட்டைகள் இருப்பதால் அவை செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6,000 மெட்ரிக் டன் குப்பை நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

கொடுங்கையூரில் அமையவிருக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் 1,026 கோடி செலவில், நாளொன்றுக்கு 2,100 டன் குப்பையை எரிக்க உள்ளது.

சென்னையில் உள்ள குப்பை, கலவை குப்பையாக (Mixed Waste) இருப்பதால் (2100 டன் குப்பையில், 358 டன் நெகிழ்ச்சித்தன்மை குறைவு (Rigid), அதிகமாக (Flexible) பிளாஸ்டிக் குப்பைகள், 105 டன் காகிதக் கழிவுகள், 42 டன் PET குடுவைகள் (ஒருவகை பிளாஸ்டிக்) இருக்கப்போகிறது. அதன் கலோரிபிக் மதிப்பு ஈரத்தன்மையின் காரணமாக குறைவாக இருக்கப்போகிறது. இதனால் சென்னையில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியின் திறன் குறைவாக இருக்கும்.

தலைநகர் டெல்லியில், ஓக்லா பகுதியில் இயங்கும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியில் (2011ல் நாளொன்றுக்கு 2,000 டன் குப்பை எரிக்கப்பட்டது) சூழல் பாதிப்பு அதிகம் இருந்தது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டதால் டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உற்பத்தி செய்த நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது.

மேலும், சூழல் சீர்கேடு காரணமாக, டெல்லியில் வாழும் மக்களின் வாழ்நாள் 12 வருடம் குறைந்ததாக ஆய்வுகள் உறுதிபடுத்தின. சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் டைஆக்சின் (Dioxin), புரான் (Furan) அளவு 9 மடங்கு அதிகமாக இருந்தது.

ஓக்லா சுற்றுப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார ஆய்வில் குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு தொற்றும், குழந்தைகளின் அறிவு வளர்ச்சி (IQ) குறைவாக இருப்பதும், கர்ப்பிணி பெண்கள் அந்தப் பகுதியை விட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக வேறு இடத்திற்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூழல் சீர்கேட்டை உறுதிபடுத்துகிறது. சுற்றுப்புற காற்று தவிர, மண், நீர்நிலைகளும் (நிலத்தடி நீர் உட்பட) மாசு பாதிப்பிற்கு உள்ளாவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடசென்னையில் (கொடுங்கையூர் பகுதியில்) எற்கனவே 40 அதிக ஆபத்தை விளைவிக்கும் ஆலைகள் (Red category Industries) இயங்கி வருகின்றன. குப்பை எரிப்பும் கொடுங்கையூரில் நடந்து வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்கனவே பலர் தோல் நோய்கள், நுரையீரல்பிரச்னைகள், கருக்கலைப்பு, புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னைகள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், காற்று, சூழல் தரம் மேலும் மோசமான பாதிப்புக்கு ஆளாகும்.

கொடுங்கையூரில் சென்னையில் உற்பத்தியாகும் 33 சதவீதம் குப்பைகள் எரிக்கப்படும். அதனால் நாளுக்கு 3,400 டன் கரியமிலவாயு வெளியாகும். இது 10 லட்சம் கார்களிலிருந்து வெளியாகும் கரியமிலவாயுவிற்கு சமம்.

ஏற்கனவே கொடுங்கையூரின் தரை வெப்பநிலை-42°C என மிக அதிகமாக உள்ளது. பள்ளிக்கரணையில் அது 28.5°C மட்டுமே.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2015ம் ஆண்டு உத்தரவில், வட சென்னை எத்தனை தொழிற்சாலை ஆலைக் கழிவுகளைத் தாங்கும் திறன் கொண்டுள்ளது என்பதை ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்திய பின்னரே அங்கு புதிதாக ஆலைகள் நிறுவ அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அந்த ஆய்வை செய்யாமலே, கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணிக்கு இந்தாண்டு பிப்ரவரி 27ம் தேதி சென்னை பெருநகர கார்ப்பரேசன் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியது எப்படி சரியாகும்?

2019 ல் Newyork Times பத்திரிக்கை செய்த ஆய்வில் (குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் அருகில்) சாம்பலில் (Flyash) ஈயம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் அதிகம் இருப்பதும், காட்மியத்தின் அளவு 8 மடங்கு அதிகம் இருப்பதும் தெரியவந்துள்ளது. காட்மியத்தின் காரணமாக புற்றுநோய், எலும்பு பாதிப்பு, சிறுநீரகங்கள் பாதிப்பு போன்ற மோசமான நோய்கள் ஏற்படும்.

சென்னை மணலியில் செயல்படும் 10 டன் எரிப்பு நிலையம் அருகே காட்மியத்தின் அளவு 24 மடங்கு அதிகமாக உள்ளது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஒரு பத்திரிக்கை நிறுவனம் செய்த ஆய்வில் குப்பை எரிக்கும் நிறுவன சேமிப்பு கிடங்கில் (சின்னமாத்தூர், மணலி) சாம்பல் முறையாக கையாளப்படவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இன்னமும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

இங்கு 2,100 டன் குப்பையல்லவா எரிக்கப்படபோகிறது?

சென்னை பருவநிலை மாற்ற செயல்திட்டம் (Chennai Climate Action Plan) குப்பையை தரம் பிரிக்க வேண்டும் என்றும் (Segregation), அதிகாரம் பரவலாக்கப்பட்ட குப்பை கையாளும் முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தேவையில்லை என்றும் உறுதிபட சொல்கிறது.

2015ல் Japan International Corporation Agency செய்த ஆய்வில், 2030 வரை சென்னைக்கு குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தேவையில்லை என உறுதிபட சொல்வதையும், ஏன் சென்னை பெருநகர கார்ப்பரேசன் கணக்கில் கொள்ளவில்லை?

குப்பைகளை தரம் பிரித்தல், 2016, திடக்கழிவு மேலாண்மைத் திட.ட்டத்தில் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறை என இருந்தும், அது குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளில் பின்பற்றப்படுவதில்லை, ஏன்?

ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளில் ரூ.33 கோடி செலவாகிறது. ஆனால் சூரிய சக்தி மின்சாரம் மூலம் அதை தயாரிக்க ரூ.5 கோடி மட்டும் செலவாகிறது. அனல் மின்நிலைய திட்டத்திலும் ரூ.8 கோடி மட்டுமே அதற்கு செலவாகிறது.

கொடுங்கையூர் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால் சுற்றுச்சுழல் சீர்கெடுவதுடன், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ரெட்டேரி, புழல் ஏரிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

கொடுங்கையூரில் ஏற்கனவே 30-40 ஆண்டுகளாக குப்பை கிடங்கு செயல்பட்டு வந்து ஏற்கனவே வடசென்னை மக்களுக்கு சுகாதார சீர்கேடுகளை அது ஏற்படுத்தி வருகிறது.

பொதுவாக, குப்பைக் கிடங்குகள் சுற்றியுள்ள பகுதிகளில் 500 மீட்டர் தொலைவிற்கு வீட்டுமனைகள் இருக்கக்கூடாது என்பது சட்டவிதி. ஆனால் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கு 100 மீட்டர் தொலைவிலே வீட்டுமனைகள் உள்ளது.

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளிலிருந்து வெளியாகும் மாசு காரணமாக,வெப்பத்தீவு விளைவு அதிகமாகும். ஏற்கனவே சென்னையின் தரை வெப்பநிலை 6.53° C உயர்ந்துள்ளது. தமிழக திட்டக் கமிசனே சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் 3°C அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. இது குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தால் மேலும் மோசமாகும். வெளியாகும் மாசு காரணமாக புவிவெப்பமடைதல் பாதிப்பும் அதிகமாகும்.

டையாக்சினால் ஏற்படும் பாதிப்புகள்

இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு,

ஹார்மோன் பிரச்னைகள்,

வளர்பருவ மாற்றங்கள் (Developmental issues),

நோய் எதிர்ப்புசக்தி குறைப்பாடுகள்,

புற்றுநோய்,

நரம்பு மண்டல பாதிப்பு,

ஈரல் பாதிப்பு

புரான்(Furan)களால் எற்படும் பாதிப்பு

ஈரல் பாதிப்பு,

இனப்பெருக்க உறுப்புகளில் பாதிப்பு,

நரம்பு மண்டல பாதிப்பு,

தோல், கண் பாதிப்பு,

புற்றுநோய் பாதிப்பு

ஹைதராபாத்தில் (ஜவகர் நகர்) குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவிற்கு துர்நாற்றம் வீசுவதும், காற்று நீர்நிலைகள் 10 கி.மீ. வரை பாதிக்கப்பட்டுள்ளதும் ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

எனவே, இவ்வளவு குறைபாடுகள் இருக்கும்போது, கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தேவைதானா? தமிழக அரசு அல்லது சென்னை பெருநகர கார்ப்பரேஷன் சுற்றுச்சூழல், மக்களின் சுகாதார பாதிப்புகளை கருத்தில்கொண்டு, இத்திட்டத்தை கைவிட முன்வருவது நல்லது. அரசு செவிசாய்க்குமா?

நன்றி – சுற்றுச்சூழல் நிபுணர். மருத்துவர். புகழேந்தி.