துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன?

Priyadarshini R HT Tamil
Updated Jun 07, 2025 01:32 PM IST

தமிழக மற்றும் இந்திய கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அடிப்படை சுகாதாரத்தை வழங்க வேண்டிய கடமை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உள்ளது.

துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்யு வேண்டியது என்ன?
துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை – கிராம மக்களுக்கு அரசு செய்யு வேண்டியது என்ன?

இந்நிலையில், மிகச் சமீபத்தில் Indian Journal of Medical Research (IJMR) வெளிவந்த ஆய்வுக் கட்டுரையில், முதற்கட்ட இலவச சிகிச்சை மையமாகத் திகழும் துணை சுகாதார மையங்களின் பரிதாப நிலை வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், உலக சுகாதார மையமும் இணைந்து 7 மாநிலங்களில், 19 மாவட்டங்களில், 105 துணை சுகாதார மையங்களில் மேற்கொண்ட ஆய்வில், தமிழகத்தில் அல்லது இந்தியாவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் தொற்றா நோய்களான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் சிகிச்சையில் பெரும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

10ல் 4 துணை சுகாதார மையங்களில் மட்டுமே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் இருப்பதாகவும், 60 சதவீத துணை சுகாதார மையங்களில் அவை இல்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

3ல் 1 துணை சுகாதார மையங்களில் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு வழங்கப்படும் மாத்திரையான மெட்பார்மின் மருந்து இல்லவே இல்லை என்பதும், 45 சதவீதம் துணை சுகாதார மையங்களில் ரத்தக்கொதிப்பு சிகிச்சைக்கு வழங்கப்படும் அமைலோடிபின் மாத்திரைகள் இல்லவே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சராசரியாக 1-7 மாதங்களுக்கு சர்க்கரை, ரத்தக்கொதிப்பு சிகிச்சைக்கான மாத்திரைகள் இல்லவே இல்லாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த மருந்துகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தான் போதுமான கையிருப்பில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் சமுதாய மருத்துவக்கூடங்களில் (Community Health Centres) 2020-21 அறிக்கையின்படி சிறப்பு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் 82 சதவீதம் குறைவாகவும், அறுவைசிகிச்சை நிபுணர்கள் 83 சதவீதம் குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.

கிராமங்களில் உள்ள மாற்றங்கள், பூச்சிக்கொல்லி/உரங்களின் அதிக பயன்பாடு, உணவு முறை மாற்றம் (காய்கறி அல்லது பழங்களின் அளவு குறைவு அதிக உப்பு, அதிக மாவுச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவு) உடலுழைப்பு முன்பைக் காட்டிலும் குறைவு, கள் அல்லது சாராயம், புகைத்தல் அதிகம், மன அழுத்தம், போதிய உறக்கமின்மை போன்றவை காரணமாக கிராமப்புறங்களிலும், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அதற்கான மருந்துகளின் தட்டுப்பாடு கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை பெரிதும் பாதிப்பதோடு, அதிக முன்கூட்டிய உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவது நிச்சயம்.

எனவே, கிராமப்புற மக்களின் அருகில் இருக்கும் துணை சுகாதார மையங்களை மேம்படுத்தி, போதுமான, தேவையான மருந்துகளின் இருப்பை உறுதிசெய்தால் மட்டுமே, மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த முடியும் என ஆய்வு முடிவு சொல்கிறது.

மத்திய அரசு அனைவருக்கான இலவச சுகாதாரத்தை உறுதிப்படுத்த, போதுமான, திறனுள்ள ஆரம்ப முதல்கட்ட சிகிச்சையை (Comprehensive Primary Health Care) நடைமுறைப்படுத்த, பிரதம மந்திரி ஆயூஸ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நலனை மேம்படுத்தும் திட்டத்தின் நிதியை பயன்படுத்த இருப்பதும் வெறும் வார்த்தைகளில் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

தமிழகத்தில் IIT, சென்னை செய்த ஆய்வில் துணைசுகாதார மையங்களை மேம்படுத்துவது (போதுமான நிதி, உள்கட்டமைப்பு வசதி (மருந்து, மாத்திரை, ஆய்வக வசதிகள், போதுமான ஆள்பலம்) மக்கள் அல்லது அரசின் சுகாதார செலவீனங்களைக் குறைப்பதோடு, மக்களுக்கு தினம்தோறும் சிகிச்சையை உறுதிபடுத்தவும் செய்வதால் மிகச்சிறந்த பலனைக் கொடுப்பதாக தெரியவந்தாலும், தமிழக அரசு துணை சுகாதார மையங்களை மேம்படுத்தாமல், மாதத்தில் ஒருநாள் மட்டுமே சிகிச்சை அளிக்கும் "மக்களைத் தேடி மருத்துவ" திட்டத்தை செயல்படுத்துவது எப்படி சரியாகும்.?

வீடு தேடி மருந்துகளைக் கொடுப்பதால், பயனாளிகள் உடலுழைப்பு செய்வது குறைவதும் எப்படி சரியாகும்?

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ரத்தக்கொதிப்பு, சக்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், 20 சதவீதத்துக்கு கீழானவர்களுக்கு மட்டுமே இவ்விரண்டு நோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளது.

மிகச் சமீபத்திய ஆய்வுகள் உடற்பயிற்சி மட்டுமே நீண்ட ஆயுளை மக்களுக்கு கொடுப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில்,உடற்பயிற்சியை முற்றிலும் குறைக்கும் "மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்" தேவைதானா? எனும் கேள்வி எழுகிறது. ஆரம்ப கட்ட சிகிச்சைக்கு 60 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என இருந்தும் அது நடைமுறையில் இல்லை. கிராமப்புற மக்களின் சுகாதாரம் என்பதில் உரிய அக்கறையை அரசு காட்டவில்லை என்பது தெளிவாகிறது.

கிராமப்புற மக்கள் தங்களது ஒன்றிணைந்து செயல்பட்டு அரசுக்கு உரிய அழுத்தத்தை கொடுத்தால் மட்டுமே துணை சுகாதார மையங்களின் செயல்பாடு மேம்படும்.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.