தண்டை பானம் : ஹோலியன்று பரிமாறப்படும் தண்டை ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்! குளுகுளு வாழ்த்துக்கள்!
தண்டை பானம் : ஹோலியன்று பரிமாறப்படும் தண்டை ரெசிபியை எப்படி செய்யவேண்டும். இதோ ரெசிபியின் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

ஹோலியை கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு முறை நீங்கள் வண்ணத்தை மற்றவர்கள் மீது பூசி மகிழும்போது, குளுமையாக குடிப்பதற்கு ஒரு பாரம்பரிய பானமாக தண்டை என்ற பானம் உள்ளது. ஹோலியன்று பரிமாறப்படும் தண்டையை செய்வது எப்படி என்று பாருங்கள். இதற்கு முதலில் தண்டை மசாலாவை தயாரித்துக்கொள்ளவேண்டும். இதற்கு பிரதான உட்பொருளாக பால் உள்ளது.
தேவையான பொருட்கள்
• சர்க்கரை – ஒன்னேகால் கப்
• முந்திரி – அரை கப்
• பிஸ்தா – அரை கப் (முழுமையாக) (துருவியது – அரை கப்)
• குங்குமப்பூ – இரண்டு சிட்டிகை (பாலில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
• பாதாம் – அரை கப் (ஊறவைத்து தோலை உறித்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
• சோம்பு – கால் கப்
• முலாம் பழ விதைகள் – கால் கப்
• மிளகு – அரை டேபிள் ஸ்பூன்
• ஜாதிக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
• ஏலக்காய் – 2
• ஃபுல் கிரீம் மில்க் – அரை லிட்டர்
செய்முறை
1. பாலை சூடாக்கி, நன்றாக சுண்டக் காய்ச்சிக்கொள்ளவேண்டும்.
2. ஒரு மிக்ஸி ஜாரில் பாதாம், பிஸ்தா, முந்திரி, சோம்பு, ஏலக்காய், மிளகு மற்றும் முலாம் பழ விதைகளை கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. இதை கொரகொரப்பாக அரைத்து எடுக்கவேண்டும் என்பதால், மிக்ஸியை முழுதாக ஓடவிடக்கூடாது. மிக்ஸியை பல்ஸ் மோடில் இயக்கவேண்டும். சில நிமிடங்கள் பல்ஸ் செய்து, சில நிமிடங்கள் விட்டு, அவ்வப்போது மூடியை திறந்து குலுக்கிவிடவேண்டும். அப்போதுதான் அனைத்தும் ஒன்றாக அரைக்கப்படும். தேவைப்படும் அளவுக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.
4. அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்தவுடன் அதில் சர்க்கரை, குங்குமப்பூ, ஜாதிக்காய் சேர்த்து அரைக்க வேண்டும். இதுதான் தண்டை மசாலா என்று அழைக்கப்படுகிறது.
5. பால் கொதிக்கும்போது, அதில் இந்த தண்டை மசாலாவை சேர்த்து கலக்கவேண்டும்.
6. நன்றாக குறைவான தீயில் கொதிக்கவிடவேண்டும். அது நல்ல கெட்டியாகும் வரை காய்ச்சவேண்டும். அதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.
7. அடுப்பில் இருந்து இறக்கி, ஆறவைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும்.
இதை டம்ளரில் ஊற்றி, பொடித்த பிஸ்தாக்களை தூவி பரிமாறவேண்டும். சில குங்குமப்பூக்களையும் மேலே தூவலாம். இதை சில்லென்று பரிமாறவேண்டும்.
இதன் மேலே தூவ ஒரு பொடியையும் தயாரித்துக்கொள்ளலாம். அதை எப்படி தயாரிப்பது என்று பாருங்கள். ஆனால் இது தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
தேவையான பொருட்கள்
• தர்பூசணி விதைகள் – கால் ஸ்பூன் ‘
• ரோஜா இதழ்கள் – கால் ஸ்பூன்
• கசகசா – கால் ஸ்பூன்
செய்முறை
1. தர்பூசணி விதைகள், ரோஜா இதழ்கள், கககசா ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்டையின் மேலே தூவலாம்.
எஞ்சிய தண்டை மசாலாவை நீங்கள் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளலாம். இதை ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

டாபிக்ஸ்