தலை தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்; மாப்பிள்ளை சம்பா அரிசி அதிரசம் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
தலை தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட், மாப்பிள்ளை சம்பா அரிசி அதிரசம் செய்வது எப்படி? வழக்கமான பச்சரிசியில் செய்யும் வழிமுறை மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசியில் அதிரசம் செய்யும் முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளிக்கு பெரும்பாலான வீடுகளில் செய்யும் முக்கியமான பலகாரம் அதிரசம். இதை செய்வதற்கு அரிசி முக்கியமான உட்பொருள் ஆகும். வெல்லத்துடன் சேர்த்து இந்த அதிரசம் இனிப்பான சுவை நிறைந்ததாவும், தீபாவளிக்கு உங்களுக்கு இனிமை கூட்டும். இந்த தீபாவளிக்கு நீங்கள் கட்டாயம் அதிரசம் செய்து அதிரவிடுங்கள். அதிரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம் ஆகும். இதை சர்க்கரை அல்லது வெல்லம் இரண்டிலும் செய்ய முடியும். ஆனால், வெல்லத்தில் செய்யும் அதிரசத்தின் சுவை அட்டகாசமானதாக இருக்கும். இரண்டுக்கும் சுவை வேறுபடும். அதிரத்தை செய்வதற்கு சிறிய மெனக்கெடல் வேண்டும். தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் அதிரசம் மற்றும் முறுக்கு நீக்கமற நிறைந்திருக்கும். அதிரசம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி – ஒன்றரை கப்
வெல்லம் – ஒரு கப்
எள்ளு – 2 ஸ்பூன் (தேவைபட்டால் சாப்பிட்டால் எடுத்துக்கொள்ளவேண்டும்)
சுக்குப் பொடி – இரு சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி – இரு சிட்டிகை
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தாராளமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிரசத்துக்கு முக்கிய உட்பொருளே பச்சரிசியும், வெல்லமும்தான். பச்சரிசி நல்ல மாவு தருவதாக இருக்கவேண்டும். நீங்கள் அரிசியை கடையில் வாங்கும்போது, நல்ல மாவு தரும் அரிசியாக பார்த்து வாங்கவேண்டும். பொன்னி வகை அரிசிகளை தவிர்க்கவேண்டும். இட்லி அரிசி அல்லது ஐஆர்20 வகை அரிசிகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். நல்ல வெண்மை நிறத்தில் அரிசி இருக்கவேண்டும்.
வெல்லமும் நல்ல பாகுவரும் பிரவுன் நிற வெல்லத்தை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும்.
சுக்கு – சுக்கு செரிமானம் மற்றும் சுவை இரண்டுக்கும் உதவும்.
ஏலக்காய் – சுவைக்கு உதவும்.
நெய் – நெய் அதிரசத்தை தட்டுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
எண்ணெய் – அதிரசத்தை பொரித்த எடுக்க தாராளமாக வேண்டும்.
செய்முறை
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாக கழுவிக்கொள்ளவேண்டும். அதை ஒரு வெள்ளை பருத்தி துணியில் சேர்த்து காய வைக்கவேண்டும்.
நீண்ட நேரம் காய வைக்கக்கூடாது. நீண்ட நேரம் காய்ந்தால் அதிரசம் நன்றாக இருக்காது. அரிசியை சிறிது ஈரப்பதத்துடன் இருக்கவேண்டும். அரிசியை தொட்டுப்பார்த்து எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நல்ல ஈரப்பதத்துடன் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். தண்ணீர் சொதசொதவென இருக்கக்கூடாது. அதேநேரத்தில் அதிகம் காய்ந்தும் இருக்கக்கூடாது.
அரிசியை மிக்ஸியில் சேர்த்து இடித்துக்கொள்ளவேண்டும். காய்ந்த ஜாரில் சேர்த்து நன்றாக இடித்துக்கொண்டு, சலித்துக்கொள்ளவேண்டும். மாவு மிகவும் மிருதுவாக இருக்கக்கூடாது. ரவை சலிக்கும் ஓட்டையுள்ள சல்லடையில் சலித்துக்கொள்ளவேண்டும். சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்து ஈரமான துண்டைவைத்து மூடிவைக்கவேண்டும். அப்போதுதான் அந்த மாவின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
வெல்லப்பாகு
வெல்லத்தை இடித்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கரைத்துக்கொள்ளவேண்டும். அதை வடித்து வெல்லத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிடவேண்டும். பின்னர் வேறு பாத்திரத்தில் வெல்லப்பாகை வைத்து குறைவான தீயில் சூடாக்கவேண்டும்.
வெல்லத்தின் பாகு பதத்தை சரிபார்க்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் வெல்லப்பாகை சேர்த்தால், அது கட்டியாக தேங்கவேண்டும். கையை வைக்கும்போது கரைந்து ஓடவேண்டும். நன்றாக கெட்டியாக பாகுபதம் வரவேண்டும்.
இப்போது மாவில் எள்ளு, சுக்குப்பொடி, ஏலக்காய்ப் பொடி, சிறிது உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். இதை வெல்லப்பாகில் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவேண்டும். இந்த மாவு தோசை மாவு பதத்தில் இருக்கவேண்டும். இந்த மாவை கரைத்து ஓரிரவு அல்லது ஓரிரு நாள் புளிக்க வைத்துவிடவேண்டும்.
நீங்கள் மாவை அதிக நாட்கள் வைத்தால் அதை ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும்.
சிறு உருண்டைகளாக எடுத்து தட்டிக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் விட்டு, சூடானவுடன் அதில் தட்டிய அதிரசங்களை போட்டு சுட்டு எடுக்கவேண்டும். நீங்கள் மாவை எடுத்து தட்டுவதற்கு நெய்யை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இருபுறமும் பொன்னிறமானவுடன் வெந்த அதிரசங்களை எடுத்து மற்றொரு கரண்டியை வைத்து அதிரசத்தை அழுத்தி அதிகமாக உள்ள எண்ணெயை பிழிந்து எடுத்துவிடவேண்டும். எண்ணெய் வடிகட்டியில் சேர்த்து எஞ்சியுள்ள எண்ணெய் வடித்து எடுத்துவிட்டால் சூப்பர் சுவையான அதிரசம் தயார். இந்த அதிரசத்தை கட்டாயம் செய்து இந்த தீபாவளியை அசத்திவிடுங்கள்.
இதில் நீங்கள் வழக்கமான அரிசிக்கு பதில் மாப்பிள்ளை சம்பா பச்சரிசியை சேர்த்து செய்தால் வீட்டுக்கு தீபாவளி விருந்துக்கு வரும் புதுமாப்பிள்ளைக்கு பரிமாறி அசத்தலாம்.
இந்த ரெசிபியை வேறு எந்த பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்