‘தைப்பொங்கலும் வந்தது, பாலு பொங்குது’ இந்த பொங்கல் பண்டிகைக்கு வித்யாசமான ரெசிபி! என்னவாக இருக்கும்?
கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்குகிறது. போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள். அடுத்த நாள் தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகிறார்கள். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு, ஊட்டி மகிழ்கிறார்கள். அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த நாளில் மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களும் சென்று புதிய இடங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். இதனால் இந்த நான்கு நாட்களும் உழைத்து, களைத்த தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகயான பொங்கல் நான்கு நாட்கள் நிறைவுடனும் மகிழ்வுடனும் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த ஆண்டு வித்யாசமாக கருப்பட்டியில் பொங்கல் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பட்டி தூள் – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
பால் – 4 கப்
நெய் – கால் கப்
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
உலர்ந்த திராட்சை – ஒரு கைப்பிடியளவு
உங்களிடம் பாதாம், பிஸ்தா இருந்தால், உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அதையும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து, அது கொதி வந்தவுடன் அரை மணி நேரம் ஊறவைத்த பச்சரியை சேர்த்து நன்றாக குழைய வேக வைத்துக்கொள்ளவேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூள், சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்துக்கொள்ளவேண்டும். பாகு பதம் தேவையில்லை. கருப்பட்டி கரைந்தால் போதும். கரைந்தவுடனே, வெந்துகொண்டிருக்கும் சாதத்தில் சேர்த்து கிளறவேண்டும். பாத்திரத்தில் வேக வைத்த அரிசியை அடிக்கடி கிளறி விடவேண்டும்.
பாலும், தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சிய பாகை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். தேவைப்பட்டால் மேலும் பாலை சேர்த்துக்கொள்ளலாம். நெய்யையும் சேர்த்து கிளறவேண்டும். பொங்கல் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவேண்டும். ஏலக்காயைத் தூவி இறக்கினால், சூப்பர் சுவையான கருப்பட்டி பொங்கல் தயார். இந்தப்பொங்கலை இந்த பொங்கல் பண்டிகைய்ன்று செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இந்தப்பொங்கலை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட முடியும். நெய்யை வேண்டுமானால் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்