தமிழ் புத்தாண்டு இனிப்பு : தமிழ் புத்தாண்டுக்கு வீடுகளில் செய்து அசத்த சூப்பரான இனிப்பு; அரிசீம்-பருப்பு பாயாசம்!
தமிழ் புத்தாண்டு இனிப்பு : தமிழ் புத்தாண்டுக்கு இந்த அரசீம் பருப்பு பாயாசத்தை செய்ய ஏதுவாக அதை எப்படி செய்வது என்ற ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டு இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்கள் வீட்டில் இந்த இனிப்பை செய்து மகிழ்ந்திருங்கள்.

பண்டிகை காலங்களில் தமிழ்நாட்டில் செய்யப்படும் முக்கிய இனிப்பு ரெசிபிக்களில் ஒன்று அரிசீம்பருப்பு பாயாசம். இதை தேங்காய்ப்பால் வைத்தும் செய்யலாம். தமிழ் புத்தாண்டுக்கு இந்த அரசீம் பருப்பு பாயாசத்தை செய்ய ஏதுவாக அதை எப்படி செய்வது என்ற ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை எப்படி செய்வது என்று தெரிந்துகொண்டு இந்த தமிழ் புத்தாண்டுக்கு உங்கள் வீட்டில் இந்த இனிப்பை செய்து மகிழ்ந்திருங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தேவையான பொருட்கள்
• பச்சரிசி - கால் கப்
• பாசி பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
• வெல்லம் – கால் கப் (பொடித்தது)
• தேங்காய்ப் பால் – கால் கப்
• முந்திரி – 10
• ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
• நெய் – தேவையான அளவு
• உலர்ந்த திராட்சை – சிறிதளவு (தேவைப்பட்டால் சேர்க்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்)
செய்முறை
1. ஒரு குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கி, அதில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவேண்டும். அடுத்து அரிசியையும் சேர்த்து வறுக்கவேண்டும். (அரிசியை வறுக்காமலும் சேர்க்கலாம். ஆனால் அதை வறுத்து சேர்க்கும்போது நல்ல சுவை வரும்)
2. இரண்டையும் வறுத்துவிட்டு தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு எடுக்கவேண்டும். தண்ணீர் ஒன்றரை கப் முதல் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
3. ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிது நெய் சேர்த்து முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
4. அரிசி மற்றும் பருப்பு இரண்டும் வெந்தவுடன், குக்கரைத் திறந்து அதை நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.
5. அடுத்து தண்ணீர் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்க்கவேண்டும்.
6. அனைத்தையும் சேர்த்து நன்றாக கரைத்துவிடவேண்டும.
7. நல்ல கொதி வந்தவுடன், தேங்காய்ப் பால் மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறவேண்டும்.
8. அடுத்து வறுத்து வைத்து முந்திரி, திரரட்சை தூசி இறக்கினால் சூப்பர் சுவையான பண்டிகை கால அரிசீம்பருப்பு பாயாசம் தயார்.
இதை பண்டிகை காலங்களில் இறைவனுக்கு படைக்கவும் அல்லது தமிழ் புத்தாண்டு போன்ற நேரங்களில் வீட்டில் செய்தும் சாப்பிட்டு மகிழலாம். இந்த பாயாசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை ஒருமுறை ருசித்தால் இனி உங்கள் வீட்டில் எப்போது விசேஷ நாட்கள் என்றாலும் இந்த பாயாசம்தான் செய்வீர்கள். அத்தனை ருசியான பாயாசத்தை செய்து தமிழ் புத்தாண்டை கொண்டாடுங்கள்.‘
குறிப்புகள்
• சூடான தண்ணீரில் சிறிது நேரம் தேங்காயை ஊறவைத்து அரைத்து பால் பிழிந்தால் பால் நன்றாக வரும்.
• உங்களுக்கு தேவைப்பட்டால் தண்ணீருக்கு பதில் தேங்காய்ப் பாலையே முழுதாக சேர்த்துக்கொள்ளலாம். சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.
• வெல்லமும் உங்கள் இனிப்பு அளவுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம். இந்த பாயாசம் ஆறஆற கெட்டிப்படும் என்பதால் தண்ணீர் பார்த்து சேர்த்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு தண்ணீராக வேண்டுமென்றால் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். கெட்டியாக இல்லாவிட்டால் தண்ணீர் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
• தேங்காய்ப்பால் சேர்த்த பின்னர் பாயாசத்தை அதிக நேரம் கொதிக்கவிடக்கூடாது. அடுப்பை குறைத்து தேங்காய்ப் பால், ஏலக்காய்ப் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து கலந்துவிட்டு இறக்கிவிடவேண்டும்.

டாபிக்ஸ்