அமிலவீச்சு, விரைவான நீரேற்றம்.. ஏராளமான தாதுக்கள் நிறைந்த கார நீர்.. யாருக்கெல்லாம் நல்லது? முழு விவரம்
ஆங்கிலத்தில் AlkalineWater என்று அழைக்கப்படும் 'கார நீர்' பருகுவது தற்போது பலரிடம் அதிகரித்து வருவதுடன், புதிய ட்ரெண்டாகவும் மாறியுள்ளது. பல்வேறு விதமான தாதுக்கள் நிறைந்த இந்த நீர் உண்மையில் நீரேற்ற அளவை அதிகரிக்கிறதா? இந்த நீர் நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்

மக்களிடையே அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வின் ஒரு பகுதியாக 'கார நீர்' என்பது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. பல்வேறு விதமான தாதுக்கள் நிறைந்ததாக கூறப்படும் இந்த நீர் பருகுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. உடலின் நீரேற்ற அளவை இந்த நீர் கணிசமாக அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா அல்லது வெறும் விளம்பரமா?, இந்த கார நீர் நம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? என்பது குறித்த தெரிந்து கொள்ளலாம்.
நவீன வாழ்க்கை முறையில், மக்கள் சிற்றுண்டிகளிலிருந்து தோல் பராமரிப்பு வரை அனைத்திலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கூடுதல் நன்மைகளை பெற விரும்புகிறார்கள். இதில் தண்ணீரும் விதிவிலக்கல்ல. மினரல் வாட்டரில் இருந்து தற்போது Alkaline Water, அதாவது "கார நீர்" என்ற புதுமையான வடிவத்தை எடுத்துள்ளது. இந்த நீர் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இதை பருவதால் யாருக்கு அதிக நன்மை பயக்கும்? என்பது குறித்து HT லைஃப்ஸ்டைலுக்கு பிரபல மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளின்படி, கார நீரில் இருக்கும் சத்துகள் முதல் அவற்றில் இருக்கும் நன்மைகள் வரை பார்க்கலாம்
கார நீர் என்றால் என்ன?
மும்பையில் உள்ள நானாவதி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணரும் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் தலைவருமான சுவர்ணா சாவந்த் இதுபற்றி கூறும்போது, "கார நீரைப் புரிந்து கொள்ள, முதலில் pH அளவைப் புரிந்து கொள்ள வேண்டும் pH அளவுகோல் ஒரு பொருளின் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையை அளவிடுகிறது.