Summer Days : இன்னும் 25 ஆண்டுகளுக்கு கோடைக்காலம் எப்படி இருக்கும்? அண்ணா பல்கலை. அதிர்ச்சி ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Summer Days : இன்னும் 25 ஆண்டுகளுக்கு கோடைக்காலம் எப்படி இருக்கும்? அண்ணா பல்கலை. அதிர்ச்சி ஆய்வு!

Summer Days : இன்னும் 25 ஆண்டுகளுக்கு கோடைக்காலம் எப்படி இருக்கும்? அண்ணா பல்கலை. அதிர்ச்சி ஆய்வு!

Priyadarshini R HT Tamil
Published May 06, 2024 04:44 PM IST

Summer Days : தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகம் - Centre for Climate change and Disaster Management - நிறுவன ஆய்வில், தமிழகத்தில் பருவநிலை மாற்ற நிகழ்வுகள் 2050ம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டு இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பருவநிலை மாற்ற நிகழ்வுகள் 2050ம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டு இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்ற நிகழ்வுகள் 2050ம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டு இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

1985-2014 இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 107 நாட்கள் வெப்ப அசவுகரிய நாட்களாக இருந்தது. அது தற்போது படிப்படியாக உயர்ந்து, 150 நாட்களாக உயரும் என்றும், இப்போக்கு 2050ம் ஆண்டு வரை தொடரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்ப அசௌகர்ய நாட்கள் என்றால் என்ன?

நாளின் சராசரி வெப்பநிலை 29°C க்கு மேலும், ஒப்பீட்டு ஈரப்பதம் (Relative Humidity) 30 சதவீதத்துக்க கீழும் இருப்பது. (ஒப்பீட்டு ஈரப்பதம் 30-60 சதவீதம் இருந்தால் உடம்பிற்கு நல்லது)

தமிழகத்தில் சொட்டு மழையின்றி, வறட்சி பாதிக்கப்பட்ட நாட்கள் வடகிழக்கு பருவமழை முடிந்த பின், 2014ம் ஆண்டிற்குப் பின் 9.9 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 78 நாட்கள் சொட்டு மழையின்றி வறட்சியாக இருக்கும்.

பருவநிலை மாற்றம் காரணமாக, பசிபிக் பெருங்கடலில் இருந்துவரும் வெப்பக்காற்று, கிழக்கு நோக்கி பயணித்து, வங்காள விரிகுடாப் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்துக்கொள்வதால், குளிர்ந்த வெப்பநிலை மாறி, உயர்வெப்பம் அதிகமாகிறது.

அதிக வெப்பத்துடன் கூடிய வறட்சி நாட்கள் டெல்டா மாவட்டங்களில், அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டத்தில் 214 நாட்கள்/வருடம் எனவும், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 211 நாட்கள்/வருடம் என்றும் உள்ளது.

டெல்டா பகுதியில் உள்ள களிமண் கலந்த மண் (Loamy soil) அதிக வெப்பத்தை உள்வாங்காமல், வளிமண்டலத்திற்கு திருப்பி அனுப்புவது அதிக வெப்பம் அப்பகுதியில் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களுக்கு இடையே உள்ள மாவட்டங்களில் வெப்ப பாதிப்பு குறைவாக உள்ளது.

கன்னியாகுமரி, நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிவெப்ப வறட்சி நாட்கள் 60 நாட்கள்/வருடம் எனக் குறைவாக உள்ளது.

நீலகிரியில் பசுமை மலைகள் அதிகம் இருப்பதாலும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்வதாலும், அதிவெப்ப நாட்கள் குறைவாக உள்ளது.

2014ம் ஆண்டிற்குப் பின், தூத்துக்குடியில் அதிவெப்ப நாட்கள் 76 நாட்கள்/வருடம் என இருந்தது, 2021ல் 152 நாட்கள்/வருடம் என அதிகரித்து உள்ளது. பசிபிக் பெருங்கடலில் இருந்து வீசும் வெப்பக்காற்று மன்னார் வளைகுடா பகுதியில் அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், தூத்துக்குடி அதற்கு அருகில் இருப்பதால், அதிவெப்பம் அங்கு அதிகம் பதிவாகிறது. அங்கு அதிகரித்து வரும் தொழிற்சாலைகளும் வெப்ப உயர்வுக்கு காரணமாக உள்ளது.

தமிழகத்தின் வடகிழக்குப் பகுதிகள் சொட்டு மழையின்றி, அதிக வெப்ப நாட்களை சந்திக்கிறது. செங்கல்பட்டு-100 நாட்கள்/வருடம், சென்னை-95 நாட்கள்/வருடம் என அதிகமாக உள்ளது.

முன்பெல்லாம் கோடைக்காலத்தின்போது பெய்த மழை என்பது, இனிவரும் காவங்களில் அதிகம் இருக்காது.

அதற்கான காரணங்கள்

அதிக நகர்புறமயமாதல்

குறைந்து வரும் பசுமைப் பரப்பு

அதிகவாகனங்களின் பயன்பாடு (அதன் காரணமாக எழும் சூழல் பாதிப்பு)

புவிவெப்பமடைதல் அதிகமாவதால் தீவிர பருவநிலை மாற்றங்கள் (Extreme Climate Events) அதிகம் நிகழ்வதோடு, பருவமழை பொய்த்து போவதும், வேளை தவறி மழை பெய்யும் (Erratic Rainfall) போக்கும் அதிகரித்து வருகிறது. (2023ல் சென்னையிலும், தூத்துக்குடியிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு (குறைந்த நேரத்தில் அதிகம் மழை பெய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது)

அதிவெப்பம் இருக்கும்போது, மனித உடம்பு தன்னை குளிர்வித்துக் கொள்வது கடினம். அதிவெப்பத்தால் Sun Stroke அதிகம் நிகழும். குறிப்பாக வயதானவர்களுக்கு அதிக சோர்வை அது ஏற்படுத்தும். இந்த ஆண்டு தமிழகத்தில் அதிவெப்பத்தால் இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

வன விலங்குகளும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்ப முடியாது. குறிப்பாக யானைகளுக்கு இயற்கை குளிர்விப்பு முறைகள் அதிகம் இல்லாததால், வறட்சியின் காரணமாக நீரைத்தேடி அவை ஊருக்குள் அதிகம் வந்து மனித-விலங்கு மோதல்கள் அதிகமாகிறது. நாம் புவிவெப்பமடைதல் வறட்சியை காரணமாக பார்க்காமல் அவற்றை தீய எண்ணத்துடன் காட்டிற்குள் விரட்ட முயற்சி செய்வது எப்படி சரியாகும்?

அதிவெப்பத்தால், டெல்டா மாவட்டங்களில், அரிசி சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

கடல்வாழ் மீன்கள் மற்றும் உயிரினங்களும் அதிவெப்பத்தால் பாதிப்படைகின்றன. வெப்பம் அதிகமாகும்போது கடலில் கரியமிலவாயு, கார்பானிக் அமிலமாக அதிகம் மாறுவதால், நீரின் pH அளவு மீன்கள் நன்றாக வளரும் அளவான 8-8.5 pH அளவிலிருந்து குறைந்து, அவற்றின் வளர்ச்சி பெருத்த பாதிப்பை சந்திக்கிறது.

தமிழகத்தில் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அதிகமாவதால், அதிக பசுமைக்குடி வாயுக்கள் வெளியேறி, வளிமண்டலத்தில் அவை அதிக வெப்பத்தை தேக்கிக் கொள்வதால், புவிவெப்பமடைதல், அதிவெப்பம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

தற்போதுள்ள புவிவெப்பமடைதல் மற்றும் எல்நினோ பருவநிலை மாற்றம் காரணமாக, தென் இந்தியாவில் (தமிழகம் உட்பட) வெப்பம் வழக்கத்திற்கு மாறாக கோடையில் முன்கூட்டியே 4-8°C அதிகரித்து காணப்படும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டு, அது பத்திரிக்கை சிலவற்றில் (Down to Earth) வெளிவந்துள்ளது.

2022ல் இந்தியாவில் அதிவெப்பம் மற்றும் புவிவெப்பமடைதல் காரணமாக, கோதுமையின் விளைச்சல் 30-40 சதவீதம் குறைந்துள்ளது.

நாம் தேவையான பசுமை மற்றும் நீலப்பரப்பை அதிகப்படுத்தாமல் (Green cover+Blue cover) குளிர்சாதன வசதிகளை அதிகம் பேசுவது முற்றிலும் தவறான போக்காகும். குளிர்சாதன வசதிக்கான மின்சாரம் நிலக்கரி மின்சாரம் மூலம் பெறும்போது, நாம் புவிவெப்பமடைதல் பிரச்னை அதிகமாக, அது காரணமாக இருப்பதை உணர்ந்து கொள்ள மறுத்து வருகிறோம்.

பசுமைப் பரப்பை (செழிப்பான விவசாய நிலங்கள் மற்றும் ஈரநிலங்களை (27 சதவீதம் பரப்பு) அழித்து பரந்தூரில் விமானநிலையம் அமைக்கும் போக்கை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக அரசு செவிசாய்க்குமா?

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.