ஸ்டஃப்ட் இடியாப்பம் : சாதாரண இடியாப்பம் சாப்பிட்டு இருப்பீர்கள்; ஸ்டஃப்ட் இடியாப்பம் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
ஸ்டஃப்ட் இடியாப்பம் : இந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நீங்கள் லன்ச் பாக்ஸிலும் கொடுத்து விடலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டஃபிங் விரவானது. இதற்கு பதில் நீங்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தை வதக்கி தொக்கு செய்து அதையும் ஸ்டஃபிங்காக சேர்த்துக்கொள்ளலாம்.

வழக்கமான இடியாப்பத்தில் மசாலா காய்கறி கலவையை நிரப்பினால் கிடைப்பது ஸ்டஃப்ட் இடியாப்பம் ஆகும். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். பொதுவாக காய்கறிகள் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஸ்டஃப்ட் இடியாப்பத்தை செய்துகொடுக்கும்போது அது அவர்களுக்கு மிகவும் பிடிப்பதுடன், இதை விரும்பி சாப்பிட்டும் முடித்து விடுவார்கள். இந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நீங்கள் லன்ச் பாக்ஸிலும் கொடுத்து விடலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டஃபிங் விரவானது. இதற்கு பதில் நீங்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தை வதக்கி தொக்கு செய்து அதையும் ஸ்டஃபிங்காக சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
இடியாப்பம் செய்ய
• இடியாப்ப மாவு – ஒரு கப்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• சூடான தண்ணீர் – தேவையான அளவு
• உப்பு – கால் ஸ்பூன்
ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்கள்
• கேரட் – கால் கப்
• பீன்ஸ் – கால் கப்
• பச்சை பட்டாணி – கால் கப்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• கரம் மசாலாத் தூள் – கால் ஸ்பூன்
மசாலா அரைக்க
• தேங்காய் – கால் கப்
• சீரகம் – கால் ஸ்பூன்
அல்லது
• சோம்பு – கால் ஸ்பூன்
• சின்ன வெங்காயம் – 2
• பச்சை மிளகாய் – 1 (தேவைப்பட்டால் சேர்க்கலாம், இல்லாவிட்டால் தவிர்க்கலாம்)
தாளிக்க தேவையான பொருட்கள்
• கடுகு – கால் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
அல்லது
• சோம்பு – கால் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை
1. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.
2. இந்த தண்ணீரை அரிசி மாவில் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும். அரிசி மாவை சாப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
3. அது ஒட்டக்கூடாது. எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்துவிடவேண்டும். இதை மூடிவைத்துவிட்டு ஸ்டஃபிங் தயார் செய்யலாம்.
4. காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து ஸ்டீமர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்துக்கொள்ளவேண்டும்.
5. தேங்காயுடன் சீரகம் அல்லது சோம்பு, சின்னவெங்காயம், தேவைப்பட்டால் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளவேணடும். பச்சை மிளகாய் சேர்க்கவில்லையென்றால் மற்ற பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
6. கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, சீரகம் அல்லது வெந்தயம் சேர்த்து தாளித்து, அது பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து வேக வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக பிரட்டவேண்டும்.
7. அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.
ஸ்டஃப்ட் இடியாப்பம் செய்வது எப்படி?
1. இடியாப்ப குழாயில் மாவை நிரப்பி அதை இட்லி தட்டில் ஒரு குழியில் ஒரு லேயர் மட்டும் பிழிந்துகொள்ளவேண்டும். அடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் காய்கறி கலவையை நிரப்பவேண்டும். அடுத்து அதன் மேல் அடுத்த லேயர் இடியாப்பத்தை பிழிந்துவிடவேண்டும். அது அந்த ஸ்டஃபிங்கை மூடியிருக்கவேண்டும்.
2. இதை அனைத்து குழியிலும் செய்து, வேகவைத்து எடுத்தால் சூப்பர் சுவையான ஸ்டஃப்டு இடியாப்பம் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் அல்லது தக்காளி சட்னி செய்துகொள்ளலாம். இதிலே ஸ்டஃபிங் இருப்பதால் அப்படியே கூட சாப்பிட்டுக்கொள்ளலாம்.
குறிப்புகள்
• சோம்பு மற்றும் கறிவேப்பிலை இந்த இடியாப்பத்துக்கு சூப்பரான சுவையைத்தரும்.
• இதை தேங்காய் மசாலா இல்லாமலும் செய்யலாம்.
• இட்லி தட்டை இட்லி பாத்திரத்துக்கு உள்ளே வைக்கும் முன்னர் அதில் உள்ள தண்ணீர் கொதித்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
• அதிக நேரம் வேக வைத்து விடாதீர்கள். சரியான அளவு வெந்தால்தான் இடியாப்பம் பொலபொலவென இருக்கும்.

டாபிக்ஸ்