Soya Chuka : சிக்கன், மட்டன் சுவையில் சோயா சுக்கா; உங்கள் நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து!
Soya Chukka : சோயா சங்க்ஸ் அல்லது மீல் மேக்கர் வைத்து சிக்கன், மட்டன் சுவையில் சுக்கா செய்ய முடியும்.

சிக்கன், மட்டன் சுவையில் அசத்தும் சோயா சுக்கா, இதை நீங்கள் சிக்கன், மட்டன், பன்னீர், மஸ்ரூம் என எதில் வேண்டுமானாலும் செய்யலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும். சுக்கா வறுவல்களை எப்போதும் இரும்புக் கடாய்களில் செய்வதுதான் நல்லது. செய்வதற்கும் எளிதாக இருக்கும். நீண்ட நேரம் கெடாமலும் அதன் சூடு பாதுகாக்கும். இந்த சோயா சுக்கா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் குழந்தைகளுக்கு சோயா சங்க்ஸ் என்ற மீல் மேக்கர் மிகவும் பிடித்த ஒரு உணவு. நீங்கள் இதை செய்து வைத்துவிட்டால் அவர்கள் ஸ்னாக்ஸ் போலவே சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
• சோயா – ஒரு கப் (மீல் மேக்கர்)
(சூடான தண்ணீரில் ஊறவைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக பிழிந்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
• தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
• சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
• உப்பு – தேவையான அளவு
• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
• தக்காளி – 1
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மல்லித்தூள் – 2 ஸ்பூன்
• மல்லித்தழை – சிறிது
• பச்சை மிளகாய் – 2
சுக்கா மசாலா செய்ய தேவையான பொருட்கள்
• மிளகு – அரை ஸ்பூன்
• சீரகம் – அரை ஸ்பூன்
• சோம்பு – அரை ஸ்பூன்
• பட்டை – 1
• கிராம்பு – 4
• ஏலக்காய் – 2
சுக்கா மசாலா அரைப்பது எப்படி?
ஒரு ட்ரை கடாயில் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து வறுத்து ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் அல்லது உரலில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். இது தனி மசாலா ஆகும். இதை நீங்கள் எந்த சுக்கா வறுவலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே அதிகம் செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்தும் கொள்ளலாம்.
சோயா சுக்கா செய்வது எப்படி?
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், சோம்பு போட்டு பொரிய விடவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து மசிந்தவுடன், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும்.
அடுத்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். சூடான தண்ணீரில் ஊறவைத்து பிழிந்த சோயாவை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சுக்கா மசாலா மற்றும் கீறிய பச்சை மிளகாய், மல்லித்தழையை சேர்த்து இரண்டு பிரட்டு, பிரட்டி எடுத்தால் சூப்பர் சுவையான சோயா சுக்கா தயார்.
இதை சூடான தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். எந்த சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவை நிறைந்ததாக இருக்கும். இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார். அவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடிக்கும். எனவே செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இதேபோல் நீங்கள் சோயாக்களுக்கு பதில் சிக்கன், மட்டன், பன்னீர், மஸ்ரூம் என எதை வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்