Siddha Remedy : நரம்புத் தளர்ச்சியா? கை, கால் நடுக்கமா? சித்த மருத்துவம் தரும் தீர்வு என்ன? மருத்துவர் கூறும் விளக்கம்!
Siddha Remedy : திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் நரம்புத் தளர்ச்சி, கை-கால் நடுக்கத்தைப் போக்கும் எளிய சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து விளக்குகிறார். அது என்ன என்று பார்க்கலாம்.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை அளித்து வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர் நரம்புத்தளர்ச்சி, உடல், கை-கால் நடுக்கம் மற்றும் அதற்கான எளிய சித்த மருத்துவ குறிப்புகள் குறித்து நம்மிடம் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் பின்வருமாறு,
நரம்புத் தளர்ச்சி என்றால் என்ன?
நரம்புத் தளர்ச்சி என்பது நடுக்கு வாதம் அதாவது ஆங்கிலத்தில் பார்கின்சன்ஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது. நரம்பு மண்டலத்தால் சரியான இயங்க முடியாத நிலைதான் நடுக்குவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது நாளைடைவில் மோசமடையும்போது ஒருவருக்கு கை-கால்களில் நடுக்கம் ஏற்படுகிறது. நரம்பு மண்டலம்தான் நம் உடலில் உள்ள நரம்பு செல்களைக் கட்டுப்படுத்துகிறது. அது உடலின் பல்வேறு உறுப்புக்களையும் கட்டுப்படுத்துகிறது. இதன் அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும். முதலில் கை-கால்களில் அல்லது தாடையில் நடுக்கம் ஏற்படுவது வழக்கம். அடுத்து இறுக்கத்தைக் கொடுக்கும். இது இயக்கத்தை மெதுவாக்கி, எழுந்து நிற்க முடியாத நிலையை உருவாக்கி, கீழே விழும் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆரம்பத்தில் இதன் அறிகுறிகள் பெரிதாக இருக்காது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அது மோசமாகிவிடும்.
அறிகுறிகள்
• உடலில் நடுக்கம் – கைகள் அல்லது விரல்களில் நடுக்கம் ஏற்படும். சில நேரங்களில் கால்களிலும் நடுக்கம் ஏற்படும்.
• உங்கள் இயக்கத்தை மெதுவாக்கும் – உங்களால் எளிய வேலைகளைக் கூட செய்ய முடியாது. ஒரு நாற்காலியில் இருந்து எழுந்திருப்பதோ அல்லது துணி மாற்றிக்கொள்வதோ கூட சிரமமாக இருக்கும். கண்களை சிமிட்ட முடியாது.
• இறுக்கமான தசைகள் – உங்கள் உடலில் எந்த பாகத்திலும் இறுக்கமான தசைகள் இருக்கலாம். தசைகளில் வலி மற்றும் கைகளை இயக்குவதில் சிரமம் ஆகியவை இருக்கலாம்.
• நிற்க முடியாத நிலை – உங்களால் நேராக நிற்க முடியாத நிலை கூட ஏற்படலாம்.
• தானாகவே இயங்குவது குறையும் – உங்களால் தானாகவே இயங்க முடியாது. சிரிப்பது, கண்சிமிட்டுவது, நடக்கும்போது கைகளை ஆட்டி நடப்பது போன்ற அன்னிச்சை செயல்களைக் கூட உங்களால் செய்ய முடியாது.
• பேச்சில் மாற்றம் – நீங்கள் மெதுவாக அல்லது விரைவாக பேசுவீர்கள். பேசுவதற்கு முன்னர் தயக்கம் ஏற்படும். வழக்கமான பேச்சாக இல்லாமல் அதன் டோனே மாறியிருக்கும்.
• எழுதுவதில் மாற்றம் – உங்களுக்கு எழுதுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். எழுத்துக்கள் சரியாக வராது.
• மற்ற அறிகுறிகளாக, மனஅழுத்தம், பயம், பதற்றம், மலச்சிக்கல் மற்றும் உறக்கத்தில் பிரச்னைகள் ஆகியவை ஏற்படும். கெட்ட கனவுகள், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, நுகருவதில் சிக்கல், சிந்திக்க முடியாமல் போவது மற்றும் நினைவாற்றல் இழப்பு, அதிக சோர்வு ஆகியவை இருக்கும்.
நரம்பு தளர்ச்சி கொண்டவர்கள் எளிய சித்த மருந்தாகப் பூனைக்காலி விதைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நரம்பு தளர்ச்சி, கை-காலில் நடுக்கம், தளர்வு நடை என இருக்கும் ஆண், பெண் இருவரும், இந்த விதையை வாங்கி, அதன் மீதுள்ள தோலை நீக்கிவிடவேண்டும். அந்த விதையை பொடியாக்கி, காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். காலை மற்றும் மாலை அல்லது இரவு என இரண்டு வேளை இரண்டு கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிடவேண்டும். அந்த நடுக்கம் குறையும் வரை தொடர்ந்து சாப்பிடவேண்டும். இது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இது ஆண்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கக் கூடியது ஆகும். எனவே பயன்படுத்தி பலன்பெறுங்கள்.
இவ்வாறு மருத்துவர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்