சித்த மருத்துவம் : மாதவிடாய் நிற்கும் தருணம்; ஹார்மோன்கள் சமமின்மை; நரை முடியால் அவதி? – இயற்கை மருத்துவர் தரும் தீர்வு!
சித்த மருத்துவம் : மாதவிடாய் நிற்கும் தருணத்தில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். கடும் முடி உதிர்வு மற்றும் நரை முடி, ஹார்மோன்கள் சமமின்மை என ஏற்படுகிறது. இதில் இருந்து விடுபடும் எளிய வழி ஒன்றை மருத்துவர் ராசா ஈசன் நம்மிடம் கூறுகிறார்.

நமது அழகுக்கு அழகு சேர்ப்பதே தலைமுடிதான். தலைமுடி அழகுடன் மட்டும் இருக்கக்கூடாது. ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும். ஒரு சிலருக்கு நரை முடி இளம் வயதிலேயே ஏற்படும். ஒரு சிலருக்கு மத்திம வயதுகளில் அல்லது அதற்குப்பின்னர் ஏற்படும். சிலருக்கு வயதான காலத்திலும் நரை முடி இருக்காது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் தருவாயில் ஹார்மோன்கள் சமமின்மை காரணமாக பல்வேறு பிரச்னைகள் வாட்டி எடுக்கும். அதில் இந்த நரைமுடி தொல்லையும் ஒன்று. நரை முடியால் மாதவிடாய் நிற்கும் காலத்தில் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கு ஒரு எளிய தீர்வு. அது என்னவென்று பாருங்கள்.
இதுகுறித்து, திருச்சி இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறியதாவது,
மாதவிடாய் நிற்கும் தருவாயில் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அப்போது ஹார்மோன்களின் சமமின்மை கடுமையாக இருக்கும். இதனால் உடலளவிலும், மனதளவிலும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நரை முடி, முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே அந்த நேரத்தில் பெண்கள் செய்யவேண்டியது என்னவென்றால்,
தேவையான பொருட்கள்
• மருத மரப்பட்டை – 100 கிராம்
• மகிழ மரப்பட்டை – 100 கிராம்
• அசோக மரப்பட்டை – 100 கிராம்
செய்முறை
மருத மரப்பட்டை, மகிழ மரப்பட்டை மற்றும் அசோக மரப்பட்டை ஆகிய அனைத்தையும் நன்றாக வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன் அரை ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் பாதியாக வற்றிய உடன் இறக்கி, சிறிதளவு தேன் கலந்து, இளம் சூடாக பருகவேண்டும்.
இந்த மருந்தை 48 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.
தலைமுடி இயற்கையாக கருப்பாக கரியபவழம் வாங்கி, அவுரி சாறு விட்டு காய்ச்சி இறக்கி தலையில் பூசி கொள்ளலாம். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளித்து விட வேண்டும். இதை செய்யும்போது, முடி இயற்கையிலேயே கருமை நிறம் பெறும்.
இந்த வெளிப்புற தைலத்தை ஆண்களும் பயன்படுத்திக்கொள்ளளலாம். உட்புறத்தில் எடுத்துக்கொள்ளும் மருந்து பெண்களுக்கானது மட்டும்தான். இவ்வாறு ராசா ஈசன் கூறினார்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்