எள்ளுப்பொடி சாதம்; வயதுக்கு வந்த பெண்களுக்கு இரும்புச்சத்து கிடைக்க அடிக்கடி செய்து சாப்பிடுங்கள்!
எள்ளுப்பொடி சாதம், வயதுக்கு வந்த பெண்களுக்கு இரும்புச்சத்து கிடைக்க அடிக்கடி செய்து சாப்பிடுங்கள். சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியும் ஆகும்.
எள்ளின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நார்ச்சத்துக்கள் நிறைந்தது. 30 கிராம் எள் 3.5 கிராம் நார்ச்சத்தை கொடுக்கிறது. இது 12 சதவீத தினசரி தேவையை பூர்த்தி செய்கிறது. தினமும் எள் சாப்பிடுவது உங்கள் நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் அளவை அதிகரிக்கிறது. நார்ச்சத்து உங்கள் உடலின் செரிமானத்துக்கு உதவுகிறது. கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசிரைட்களை குறைக்கிறது. தாவர புரதத்தின் ஊட்டச்சத்து கூடமாக எள் உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வீக்கத்துக்கு எதிராக போராடி, அதை குறைக்கிறது. வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்தது. ரத்த செல்கள் உற்பத்திக்கு உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது. ஆர்த்ரடிஸ் மூட்டு வலியை குணப்படுத்துகிறது. தைராய்ட் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உங்கள் உடலில் தைராய்ட் ஹார்மோன் சுரக்க இதில் உள்ள செலினியம் உதவுகிறது. பெண்களுக்கு மெனோபாஸ் நேரத்தில் உதவுகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த எள்ளைப் பயன்படுத்தி நீங்கள் எள்ளுப்பொடி சாதம் செய்யலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ள இதோ ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்துகொண்டு, செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
உதிர வடித்த சாதம் – 2 கப்
கடுகு – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
நெய் – டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடி செய்ய தேவையான பொருட்கள்
எள் – 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 8
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிய துண்டு
செய்முறை
கடாயில் எள்ளை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அது பொரிந்தவுடன் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து எண்ணெய் சேர்த்து பெருங்காயத்தை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
மிளகாய், உளுந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் சிவக்க வறுத்து நன்றாக ஆறவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானவுடன் கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும். பொரிந்தவுடன், கறிவேப்பிலையை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, உதிர வடித்த சாதத்தை சேர்த்து, அரைத்து வைத்துள்ள எள்ளுப் பொடியையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து பிரட்டி எடுத்தீர்கள் என்றால் சூப்பர் சுவையான எள்ளுப்பொடி சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் மிகவும் நன்றாக இருக்கும்.
எள்ளுப்பொடி மீதம் இருந்தால் அதை நீங்கள் ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனுடன் உப்பு சேர்த்து கலந்து, இட்லி மற்றும் தோசைக்கும் எண்ணெயுடன் குழைத்து தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
இந்த எள்ளுப்பொடி சாதத்தை நீங்கள் குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கும் கொடுத்துவிடலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக நிச்சயம் இந்த எள்ளுப்பொடி சாதம் இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் கட்டாயம் ருசிப்பீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்டி. தமிழ் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்