சேப்பங்கிழங்கு ஃப்ரை : ஸ்பைசி சேப்பங்கிழங்கு ஃப்ரை; ஒரு கிலோ செய்தாலும் உடனே காலியாகிவிடும்! இதோ ரெசிபி!
சேப்பங்கிழங்கு ஃப்ரை : சேப்பங்கிழங்கில் வறுவல் செய்வது எப்படி என்று பாருங்கள். அதை நீங்கள் தயிர் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். கிழங்குகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வேர்க்காய்கறிகள் உடலுக்கு நல்லது. அதிலும் குறிப்பாக சேப்பங்கிழங்கு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் ஆரோக்கியமான ஃபைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள குயிர்சிட்டின் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை அழிக்கும். இதில் உள்ள மினரல்கள் நீரிழிவு நோயையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இது எலும்புகளையும் வலுப்படுத்தும். இதை நீங்கள் ஊறவைத்து எண்ணெயில் வறுக்கவேண்டும். மசாலாக்களையும், புளிக்கரைசலையும் சேர்த்து இதை மேரியனேட் செய்யும்போது, அது நல்ல மணத்தைத் தரும்.
தேவையான பொருட்கள்
• எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• சோம்பு – கால் ஸ்பூன்
• வெந்தயப் பொடி – அரை ஸ்பூன்
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
• சீரகத் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
• மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
• கறிவேப்பிலைத் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
• மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• புளி – சிறிதளவு
(ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
1. சேப்பங்கிழங்கை நன்றாக கழுவிக்கொள்ளவேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக வேகவைத்து தோலை உரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். குக்கரில் வைத்தும் வேகவைத்துக்கொள்ளலாம். இதை முழுவதும் வேக வைத்துக்கொள்ளக் கூடாது. 70 சதவீதம் வெந்தால் போதும். உங்களுக்கு விருப்பமான முறையில் வேகவைத்துக்கொள்ளவேண்டும். வெந்த கிழங்குகளை ஆறவைத்து, தோலை உரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து வெந்தயப் பொடி, மஞ்சள் தூள், சீரகத்தூள், பெருங்காயத் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலைத் தூள், மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவ உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
3. அடுத்து புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவேண்டும். அனைத்தும் நன்றாக கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, சேப்பங்கிழங்கை சேர்த்து நன்றாக மேரியனேட் செய்து வைக்கவேண்டும். அரை மணி நேரம் மசாலாக்கள் சேர்த்து ஊறவிடவேண்டும்.
4. அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் சேர்த்து மேரியனேட் செய்யப்பட்ட, கிழங்குகளை எடுத்து வறுத்து எடுக்கவேண்டும்.
அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் கிழங்கு கருகாமல் இருக்கும். கிழங்கு மசிந்து விடாமல் தனித்தனியாக மெதுவாக சேர்த்து வறுத்து எடுக்கவேண்டும். தயிர் சாதத்துடன் இதை சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். தயிர் சாதம் மட்டுமின்றி, மீல்ஸ், வெரைட்டி ரைஸ்களுக்கும் இது சிறப்பான சைட்டிஷ் தான். கிழங்கு வகைகளை சாப்பிட அடிம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது வரப்பிரசாதம். வெளியே நல்ல கிரிஸ்பியாக இருக்கும் என்பதால், அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
