தமிழ்நாட்டை குறி வைத்துள்ள ஸ்கரப் டைபஸ் நோய்! எச்சரிக்கும் சுகாதாரத் துறை!ஆபத்தில் 7 மாவட்டங்கள்!
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் என்ற பாக்டீரியத் தொற்று பரவி வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ் பொதுவாக புதர் மற்றும் வனப்பகுதிகளில் காணப்படும் சிகர்ஸ் எனப்படும் பாதிக்கப்பட்ட லார்வா பூச்சிகளின் கடி மூலம் பரவுகிறது. இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் பாதிக்கலாம். இதில் அதிகமாக கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாக்டீரியா தொற்று தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்
மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள பகுதிகளில் இந்த தொற்று தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இந்த தொற்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இயல்பாக மழை மற்றும் குளிர் காலங்களில் இது போன்ற ஏதேனும் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள் பரவுவது வழக்கமான ஒன்றாகும். பொதுவாக வைரல் காய்ச்சல், சளி, இருமல் ஏதேனும் ஒன்று வருவதால் அது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு வித்தியாசமான ஒரு தொற்று பரவி வருவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ்
'ஸ்க்ரப் டைபஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொற்று, ரிக்கட்சியா (Rickettsiae) எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இந்த காய்ச்சலை பரப்பும் பாக்டீரியாவின் பெயர் ஓரியண்டியா சுட்சுகாமுஷி(Orientia tsutsugamushi) ஆகும். இதனை கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியவர் என்பதால் இந்த பெயரானது வைக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில், புதர் இருக்கும் இடங்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அங்கு தான் இந்த பூச்சிகள் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடலில் ஏற்படும் தீடீர் தடிப்புகள் மற்றும் உடல் அரிப்பு ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக உள்ளது. 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் சோதனை செய்துக் கொள்வது நல்லது. சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மூலம் 1 முதல் 2 வாரங்களில் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைபஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். ELISA இரத்த பரிசோதனைகள் மற்றும் மூலக்கூறு சோதனைகள் மூலம் நோயைக் கண்டறியலாம், மேலும் சிகிச்சையில் பொதுவாக அசித்ரோமைசின் மற்றும் டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப் படுகின்றன. நோய் கடுமையாகும் சந்தர்ப்பங்களில், நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் மேம்பட்ட சிகிச்சை தேவைப்படலாம்.
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பான ஆடைகளை அணிவது, பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் புதர் மற்றும் வனப்பகுதிகளைத் தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். விவசாயிகள் போன்ற வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் அதிக புல் மற்றும் புதர் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர் மற்றும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள், பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் வெளியில் நேரத்தை செலவிடுபவர்களும் ஸ்க்ரப் டைபஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட சிகர் கடித்ததாக சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது நோயின் அறிகுறிகளை அனுபவித்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.
டாபிக்ஸ்