Salt Urundai : சுடச்சுட உப்பு உருண்டை; குளிரான மாலையை இதமாக்கும்; செய்வதும் எளிது, சட்னியுடன் இதோ 2 ரெசிபி!
Salt Urundai : சுடச்சுட உப்பு உருண்டை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – கைப்பிடியளவு
வர மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
அரிசி மாவு – ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம், கடலை பருப்பு என அனைத்தையும் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து விடவேண்டும். அனைத்தம் சிவந்து, பொரிந்து வந்தவுடன், பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அரிசி மாவு ஒரு கப் எடுத்து அதில் உப்பு சேர்த்து சூடான தண்ணீர் மற்றும் தாளித்துவைத்த பொருட்கள் என அனைத்தும் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்துக்கு உருட்டிக்கொள்ளவேண்டும். இதை மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் போதும். சூப்பர் சுவையான உப்பு உருண்டைகள் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள காரச் சட்னி சூப்பர் சுவையானதாக இருக்கும்.
காரச்சட்னி செய்ய தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 10 பல்
உளுந்து – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுத்து நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து உப்பு சேர்த்து வதக்கி, ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் அதை சட்னியில் சேர்த்தால் சூப்பர் சுவையான காரச்சட்னி தயார்.
உப்பு உருண்டையும், காரச் சட்னியும் சேர்த்து சாப்பிட அந்த மாலையே மகிழ்ச்சியானதாகிவிடும்.
பள்ளிவிட்டு வரும் உங்கள் குழந்தைகளுக்கு இதை செய்துகொடுத்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். செய்வதும் எளிது. ஆனால் உங்களுக்கு நல்ல சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்