Roadside Shop Tomato Chutney : ரோட்டுக்கடை தக்காளி சிவப்பு சட்னி! பேரை கேட்டாலே எச்சில் ஊறுதா? இதோ ரெசிபி!
Roadside shop Tomato Chutney : ரோட்டுக்கடை உணவுகள் என்றால் அதற்கு நம்மிடம் கூடுதல் விருப்பம்தான். என்னதான் ஸ்டார் ஓட்டல்களில் சென்று சாப்பிட்டாலும் ரோட்டுக்கடையில் சாப்பிடுவதில் உள்ள மகிழ்ச்சியே வேறு.
அதிலும் இந்த தண்ணீராக ஓடும் தக்காளி சிவப்பு சட்னியை பார்த்தாலே வாயில் எச்சில் ஊறும். இது பட்ஜெட் ஃபிரண்ட்லியும் கூட. இரண்டு வெங்காயம், 3 தக்காளி இருந்தால் போதும் 10 பேருக்கு பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
கஷ்மீரி மிளகாய் – 10
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – ஒரு கொத்து
இட்லி மாவு – ஒரு கரண்டி
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 2
கல் உப்பு – தேவையான அளவு
செய்முறை
மிக்ஸி ஜாரில் முதலில் சீரகம், பூண்டு, கஷ்மீரி காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை தனியாக வைத்துவிடவேண்டும்.
பின்னர் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த வெங்காய விழுதை சேர்க்க வேண்டும். பின்னர் அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் இட்லி மாவு சேர்த்து நல்ல தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். எவ்வளவு தண்ணீர் சேர்த்தாலும் இந்த சட்னி திக்காக இருக்கும்.
நன்றாக கொதித்து வந்தவுடன், மல்லித்தழை சேர்த்து இறக்கி, சூடாக இட்லியுடன் சேர்த்து பரிமாற சுவை அளளும்.
தக்காளியின் நன்மைகள்
தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு பழம். என்றாலும் இதை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துகிறோம்.
இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது. இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.
100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.
தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட். ஒரு தக்காளி 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் ஃபிலோகுயினோன் என்ற வைட்டமின் கே சத்து உள்ளது. இது ரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இது கர்ப்பிணிகளுக்கு நல்லது.
இதில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் பி, திசுக்கள் வளர்ச்சிக்கும், செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. இதுவும் கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து.
இதில் உள்ள லைக்கோபெனே என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை கொடுக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. உடலில் பீட்டா கரோட்டின் வைட்டமின் ஏ ஆக மாறுகிறது.
தக்காளியின் தோலில் உள்ள நரிஜெனின் என்ற ஃப்ளேவனாய்ட், அலர்ஜியை குறைக்க உதவுகிறது. பல்வேறு நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது. கொலோரோஜெனிக் அமிலம் என்பது, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
லைக்கோபெனே, குளோரோஃபில்ஸ் மற்றும் கெரோட்டினாய்ட்ஸ் அகியவைதான், தக்காளியின் பளபள நிறத்துக்கு காரணமாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்