Restaurant Style Pongal : ரெஸ்டாரென்ட் சுவையில் வெண்பொங்கல் செஞ்சு அசத்தணுமா? இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Restaurant Style Pongal : ரெஸ்டாரென்ட் சுவையில் வெண்பொங்கல் செஞ்சு அசத்தணுமா? இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
பொங்கலுக்கு வழக்கமான பச்சரிசியை பயன்படுத்தாமல், மாவு பச்சரிசி என்று கடையில் கிடைக்கும் அதை கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் கடையில் கிடைக்கும் பச்சரிசி நல்லது.
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி ஒரு கப் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதே கப்பில் ஒரு கப் (அதே அளவு) பாசிபருப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டையும் நன்றாக அலசிவிட்டு, அரை மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும்.
(பொதுவாகவே அரிசி, பருப்பு என அனைத்தையும் சமைப்பதற்கு முன் அரைமணி நேரம் ஊறவைத்துவிட்டால் அது உணவுக்கு நல்ல சுவையை கொடுக்கும்)
பொதுவாக குக்கரில் பச்சரிசி வைத்தால் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் சேர்ப்போம். ஆனால் பொங்கலுக்கு எப்போதும் அதிகம் வைக்க வேண்டும். அப்போதுதான் பொங்கல் நன்றாக குலைந்து வரும்.
ஒரு கப் அரிசி மற்றும் ஒரு கப் பாசிபருப்பு என இரண்டு கப் எடுத்துள்ளதால் இதற்கு 8 கப் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேணடும்.
தண்ணீரின் அளவு மிகவும் முக்கியம். அப்போதுதான் ரெஸ்டாரென்ட் சுவை மற்றும் குழைவுடன் பொங்கல் கிடைக்கும்.
குக்கரில் அரிசி-பருப்பு தண்ணீர் சேர்த்துவிட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடிவைத்துவிட்டு, 3 விசில் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது நீங்கள் வழக்கமாக விடும் அளவும் விசில் விட்டுக்கொள்ளலாம். அடுப்பை முழு தீயிலே வைத்துக்கொள்ளலாம்.
குக்கர் விசிலை உடனே நீக்கிவிடக்கூடாது. முழுவதும் விசில் அடங்கவேண்டும். அப்போதுதான் உள்ளே இருக்கும் பொங்கல் குழைந்து நன்றாக வரும்.
பிரஷர் முழுவதும் அடங்கியவுடன், குக்கரை திறந்து, கொஞ்சம் நன்றாக கலந்துவிடவேண்டும். அப்படி கலந்துவிட்டாலோ நன்றாக குழைந்து வந்துவிடும்.
ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொங்கலுக்கு கொஞ்சம் அதிகம் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் சுவை நன்றாக இருக்கும்.
நெய் நன்றாக சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து அதை வெடிக்க விடவேண்டும். அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக சிவக்க விடவேண்டும். பின்னர் கால் கப் உடைத்த முந்திரியை சேர்க்க வேண்டும்.
முந்திரி சிவந்து வரும்போது, ஒரு துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும். அடுத்து ஃபிரஷ் கறிவேப்பிலை இலைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை இலைகளை ஃபிரஷ்ஷாக இருந்தால்தான் பொங்கல் மணக்கும். காய்ந்த கறிவேப்பிலை இலைகளை பயன்படுத்தக்கூடாது.
அனைத்தும் பொரிந்து வந்தவுடன், அதை அப்படியே பொங்கலில் சேர்த்து நன்றாக பொங்கலை கலந்துவிடவேண்டும். பொங்கல் குழைவாகவும், நல்ல மணமுடனும் இருக்கும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் தாளிப்பில் சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். வேண்டாம் என்றால் விட்டுவிடலாம். பொங்கல் வயிற்றுக்கு ஒரு மந்தமான உணர்வைக்கொடுக்கும்.
நீங்கள் இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்க்கும்போது அது செரிமானத்தை விரைக்கும். அதற்காகவே இவையிரண்டும் பொங்கலில் சேர்க்கப்படுகிறது. ஆனால் கட்டாயம் இஞ்சி சேர்த்தால்தான் பொங்கல் சுவை அதிகரிக்கும்.
இப்போது உங்களுக்கு ரெஸ்டாரன்ட் ஸ்டையிலில் குழைவான, சுவையான, மணமான பொங்கல் கிடைத்துவிடும்.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் அல்லது கும்பகோணம் கடப்பா என எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்துகொள்ளலாம். பொதுவாக பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து செய்யும் டிஃபன் சாம்பார் இதற்கு சூப்பர் மேட்ச். எனவே அதை செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்