Reduce Excess Pitta : உடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா? இதோ இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்!
Reduce Excess Pitta : உடலில் உள்ள பித்தத்தை குறைக்க வேண்டுமா? இதோ எலுமிச்சை மற்றும் சீரகத்தை வைத்து தயாரிக்கப்படும் இந்த கஷாயம் மட்டும் போதும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
நமது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்கவேண்டும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இதில் ஏதேனும் ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ உடலில் பிரச்னைகள் ஏற்படும். பித்தம் என்பதை நாம் சரியான அளவில் பராமரிப்பது கட்டாயம். இல்லாவிட்டால், அது பித்தப்பை அறுவைசிகிச்சை வரை அழைத்துச் சென்றுவிடும்.
பித்தம் என்ற திரவத்தை கல்லீரல் சுரக்கிறது. அதை பித்தப்பை என்ற உறுப்பு சேமித்து வைத்துக்கொண்டு, உணவு செரிக்க தேவைப்படும்போது வழங்குகிறது. இந்த பித்தம் அதிகமாக சுரந்தால், நமது உடலில் அது பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது.
எனவே உங்கள் உடலில் பித்தம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க இயற்கை முறைகளை பின்பற்றுவதுதான் சிறந்தது. உங்கள் உடலில் பித்தம் அதிகரித்துவிட்டால், அதை நாடி பார்க்கும்போது கண்டுபிடித்துவிடலாம். பித்தத்தை குறைக்க வீட்டிலேயே எளிய முறையில் நமக்கு எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் ஒரு தீர்வு என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எலுமிச்சை பழம் – 1
சீரகம் – ஒரு ஸ்பூன்
செய்முறை
எலுமிச்சை பழத்தை தோலுடன் நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் சீரகமும் சேர்த்து, 20 நிமிடங்கள் நண்றாக இந்த தண்ணீரை கொதிக்கவிடவேண்டும். கொதித்த பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு, இந்த தண்ணீரை அரை மணி நேரம் மூடி வைக்கவேண்டும். அப்போதுதான் அந்த எலுமிச்சையில் உள்ள சாறுகள் தண்ணீரில் இறங்கும்.
பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொண்டு, அதை நாம் நாள் முழுவதுமே தண்ணீருக்கு பதில் பருகிவரலாம். அப்போது பித்தம் சமநிலையை அடையும். இதை நீங்கள் வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
பித்தம் அதிகரித்துவிட்டால் உடலில் சூடு அதிகரிக்கும். எனவே இதுபோன்ற வீட்டிலேயே செய்யப்படும் தீர்வுகளுடன், நல்ல உணவு, தியானம், 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம், உடற்பயிற்சி என நீங்கள் பின்பற்றும்போது அதுவும் உங்கள் உடலில் பித்தத்தை சமப்படுத்த உதவுகிறது. மேலும் உங்கள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்