Rava Idly : ஒரே மாதிரி இட்லி சாப்பிட்டு போர் அடித்தால் இதுபோல் செய்யலாம்; ரவை இட்லி; இதோ ரெசிபி!
Rava Idly : ரவாவில் இட்லி செய்வது எப்படி என்று பாருங்கள்.

Rava Idly : இட்லியைக் குறித்து முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லி ரவை, ஜவ்வரிசி, சம்பா ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழி வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. இத்தனை சிறப்புகள் நிறைந்த இட்லியை நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடாமல கொஞ்சம் வித்யாசமாக செய்ய எளிதான ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
ரவை – ஒரு டம்ளர்
கேரட் – 1 (துருவியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய்த் துருவல் – கால் கப்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
முந்திரி – ஒரு கைப்பிடி
நெய் – 2 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லி – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து எடுத்து தனியாக வைத்துவிடவேண்டும். அடுத்து அதே கடாயில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்துக்கொள்ளவேண்டும். அதில் வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
அதில் ரவையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து அதை ஆறவைத்துவிடவேண்டும். அதில் தயிர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும். அதில் தேங்காய் துருவல் மற்றும் கேரட் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த இட்லியை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள நீங்கள் சட்னி, சாம்பார் என எதை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் குருமா செம்ம காம்போவாக இருக்கும். குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் கொடுத்து விட ஏற்றதுதான் இந்த ரவை இட்லி. ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்