ரசப்பொடி : ரசப்பிரியரா நீங்கள்? இந்த பொடி மட்டும் போதும்! உங்கள் வீட்டு ரசம் ஊரே மணக்கும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரசப்பொடி : ரசப்பிரியரா நீங்கள்? இந்த பொடி மட்டும் போதும்! உங்கள் வீட்டு ரசம் ஊரே மணக்கும்!

ரசப்பொடி : ரசப்பிரியரா நீங்கள்? இந்த பொடி மட்டும் போதும்! உங்கள் வீட்டு ரசம் ஊரே மணக்கும்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 13, 2025 08:32 AM IST

உங்களுக்கு ரசம் மிகவும் பிடிக்கும் என்றால் நீங்கள் இந்த ஒரு பொடியை மட்டும் செய்து வைத்துக்கொண்டால் போதும். உங்கள் வீட்டு ரசம் ஊரே மணக்கும்.

ரசப்பொடி : ரசப்பிரியரா நீங்கள்? இந்த பொடி மட்டும் போதும்! உங்கள் வீட்டு ரசம் ஊரே மணக்கும்!
ரசப்பொடி : ரசப்பிரியரா நீங்கள்? இந்த பொடி மட்டும் போதும்! உங்கள் வீட்டு ரசம் ஊரே மணக்கும்!

பொதுவாக ஃபிரஷ்ஷான மசாலா அரைத்தும் ரசம் தயாரிக்கப்படும். பொடியையும் செய்து வைத்துக்கொண்டும் ரசம் வைக்கலாம். ஆனால் இந்த ரசப்பொடியை சேர்த்து நீங்கள் ரசம் வைத்தால், உங்கள் ரசத்துக்கு அது கூடுதல் சுவையைக் கொடுக்கிறது.

பொதுவாக புளிக்கரைசல் மற்றும் தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தூவி நல்ல நீராகக் கரைத்துக்கொள்ளவேண்டும். அதில் மிளகு, சீரகம், பூண்டு, வர மிளகாயை தட்டியோ அல்லது மிக்ஸி ஜாரில் ஒரு ஓட்டு ஓட்டியோ சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து நுரை கட்டி வரும்போதே மல்லித்தழை தூவி இறக்கிவிடவேண்டும். இந்த ரசத்தை கொதிக்கவிட்டால் சுவை மாறிவிடும். இதுதான் வழக்கமாக ரசம் வைக்கும் முறையும், பக்குவமும் ஆகும்.

அதற்கு நீங்கள் பொடியை அரைத்து வைத்துக்கொண்டால் எளிதாக அதைச் சேர்த்து ஃபிரஷ் மசாலா இல்லாமல் ரசம் வைக்க முடியும். கடைகளில் கூட ரசப்பொடிகள் விற்கப்படுகிறது. ஆனால் அவற்றில் கலப்படம் இருக்க வாய்ப்புகள் உள்ளது என்பதால் நீங்கள் ரசப்பொடியை வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வீட்டிலேயே எப்படி ரசப்பொடி தயாரிப்பது என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

• வரமல்லி விதைகள் – ஒரு கப்

• சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

• மிளகு – கால் கப்

• வர மிளகாய் – 15

• துவரம் பருப்பு – கால் கிலோ

• கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

• விரலி மஞ்சள் - 1

• கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

(எப்போது நீங்கள் மசாலாப் பொடிகள் தயாரித்தாலும் அளவாக மட்டுமே தயாரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், அதிகம் செய்தால் நீண்ட நாட்கள் இருக்கும். ஆனால் அதன் மணம் போய்விடும். எனவே ஒரு மாதம் வரும் அளவுக்கு மட்டுமே தயாரித்துக்கொள்ளுங்கள்.

விரலி மஞ்சள் இல்லாவிட்டால், நீங்கள் மஞ்சள் பொடியைக் கூடி சேர்த்துக்கொள்ளலாம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்தே வறுத்துக்கொள்ளலாம்)

1. ஒரு கடாயில் வர மல்லி, வர மிளகாய், மிளகு, சீரகம், கடலை பருப்பு, துவரம் பருப்பு, மஞ்சள், கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

2. நல்ல மணம் வந்தவுடன் வறுத்தவற்றை எடுத்து ஆறவைத்துக்கொள்ளவேண்டும். நன்றாக ஆறியவுடன், ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து இந்தக் கலவையை நல்ல பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடித்தவுடன் கொஞ்சம் சூடாக இருக்கும். அதையும் ஆறவைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தேவையானபோது புளிக்கரைசல் மற்றும் தக்காளி பிசைந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஃபிரஷ் மசாலா சேர்க்கவேண்டாம். பூண்டு மட்டும் தட்டி சேர்த்தால் போதுமானது. சூப்பர் சுவையான ரசம் கிடைக்கும். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.