HT Tamil Book SPL: தரமான நகைச்சுவை சிறுகதைகள்.. இந்நூலை படிக்கும்போதே இதழோரம் இழையோடும் புன்னகை!
‘அஜகீதம்’ சிறுகதையில் வரும் முடிவு வயிறு குலுக்க சிரிக்க வைக்கும். அப்படியொரு ஒரு கதையை எழுதியிருப்பார். ஒண்டுக் குடித்தனம், பரதனும் பாதுகையும், வைத்தியர், தங்கச்சங்கிலி, கலியுகக் கர்ணன் போன்ற கதைகள் கற்பனையைத் தூண்டுவதுடன் புன்னகையையும் வரவழைக்கிறது.

நூற்றாண்டு கண்ட முதல் தமிழ் புத்தக நிறுவனமான அல்லயன்ஸ் பதிப்பகத்தின் ‘மெளனப் பிள்ளையார்’ நூல் குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். இந்நூல் ஆசிரியர் சாவி. இவர் பத்திரிகை உலகின் ஜாம்பவானாக விளங்கியவர். இவரது முழு பெயர் சா.விஸ்வநாதன். நகைச்சுவை சிறுகதைகள் அடங்கிய நூல் தான் ‘மெளனப் பிள்ளையார்’.
எழுத்தாளர் சா.விஸ்வநாதன், 10.08.1916ம் ஆண்டு வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகே மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் பிறந்தார். தந்தை பெயர் சாமா சுப்ரமணியம், தாயார் பெயர் மங்களா. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த சாவி, சுதேசமித்திரனை படித்து விஷயம் அறிந்தவராக விளங்கினார். கல்கியில் விடாக் கண்டர் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார். பின்னர், அதே கல்கியில் உதவி ஆசிரியராகவும், ஆனந்த விகடன், தினமணிக் கதிர், குங்குமம் ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர். சாவி என்ற இதழையும் தானே தொடங்கி நடத்தியவர்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தன்னுடைய பழைய நினைவுகளை மேடையில் பேசிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.
அப்பாவின் நினைவு குறித்து அவரது மகள்கள் எழுதியதும் இந்நூலில் தொடக்கத்தில் படிக்க முடிகிறது. ‘மெளனப் பிள்ளையார்’ என்பது தான் முதல் சிறுகதை. அந்தக் கதையை படிக்கும் இன்றைய தலைமுறையும் வியப்பார்கள். அத்தனை சிறிய விஷயத்தை அழகாக எழுதியிருப்பார்.
நகைச்சுவை இழையோடும் கதைகள்
‘அஜகீதம்’ சிறுகதையில் வரும் முடிவு வயிறு குலுக்க சிரிக்க வைக்கும். அப்படியொரு ஒரு கதையை எழுதியிருப்பார். ஒண்டுக் குடித்தனம், பரதனும் பாதுகையும், வைத்தியர், தங்கச்சங்கிலி, கலியுகக் கர்ணன் போன்ற கதைகள் கற்பனையைத் தூண்டுவதுடன் புன்னகையையும் வரவழைக்கிறது. நீங்கள் இதில் வெளியிடப்பட்டுள்ள 13 கதைகளையும் படிக்கும்போது இதழோரம் புன்னகை விரியும். அது உங்களுக்கு சிறந்த பேரனுபவமாக இருக்கும்.
நகைச்சுவை கொண்ட சிறுகதைகளை வாசிக்க வேண்டும் என நூலை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் ‘மெளனப் பிள்ளையார்’ நூலை கட்டாயம் வாசியுங்கள். கோபுலு ஒவ்வொரு கதைக்கும் படம் வரைந்திருக்கிறார். அந்தப் படங்களும் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன. இந்த நூலின் அட்டைப் படமும் அவ்வளவு அழகாக கிரியேட்டிவாக இருக்கும்.
நூலின் விலை என்ன?
112 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.85. கையில் எடுத்ததும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் முழு மூச்சில் படித்துவிடாமல் ஒவ்வொரு சிறுகதைக்கு சில நிமிடங்கள் இடைவெளி விட்டு அந்த சிறுகதை குறித்து மனதில் அசைபோட்டுவிட்டு அடுத்த சிறுகதையை படிங்க. அப்போதுதான் இவரது நகைச்சுவை ஆற்றல் மிகுந்த எழுத்துத் திறனை போற்ற முடியும்.
இப்புத்தகம் குறித்து சாவி அவர்கள் எழுதியது:
"இப்புத்தகம் முதன்முறை வெளியானபோது இதைப்படித்த ரசிகமணி டி.கே.சி அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார். எதிர்காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னை வாழ்த்தியிருந்தார்கள்.
இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளை ஒருமுறை வாசித்துப் பார்த்தேன். சில இடங்களில் நன்றாக எழுதியிருக்கிறோமே என்றும் சில இடங்களில் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று தோன்றியது" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்து நகைச்சுவை படங்கள் மட்டுமல்ல, நகைச்சுவை சிறுகதைகள் படித்தும் கூட விடுபடாலம். அவசியம் ‘மெளனப் பிள்ளையாரை’ படித்துப் பாருங்க!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்