Puducherry : இந்தியாவின் பிரெஞ்ச் தலைநகரம்; புதுச்சேரிக்கு புறப்படலாமா? பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியல்!
Puducherry : இங்கு ஒரு நாளைக்கு 25 ரூபாய்க்கு சைக்கிள் வாடகைக்கு எடுத்து சுற்றலாம். தில்வாலே கஃபேவில் நீங்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொள்ளலாம். இங்கு எண்ணற்ற வகை உணவுகளும் உங்கள் நாவுக்கு விருந்தளிக்கும்.

உங்களுக்கு கடற்கரை பிடிக்கும் என்றால் புதுச்சேரியை கட்டாயம் பிடிக்கும். புதுச்சேரி சென்னையில் இருந்து சில மணி நேர பயணத்தில் அடைந்துவிடலாம். இங்கு நவம்பர் முதல் மார்ச் வரையில் செல்ல ஏற்ற காலம். வங்காள விரிகுடாவின் கடற்கரை ஆண்டு முழுவதுமே அழகாகத்தான் இருக்கும். இங்கு இரண்டு நாட்கள் நீங்கள் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். அதில் பார்க்கவேண்டிய இடங்கள் என்னவென இங்கு பார்க்கலாம்.
முதல் நாள் செல்ல வேண்டிய இடங்கள்
ஆரோவில் பீச்
புதுச்சேரி செல்லும் வழியில் ஆரோவில் பீச் உள்ளது. இது நீங்கள் புதுச்சேரிக்குள் நுழையும் முன்னரே உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். இங்கு நீங்கள் இதமான புத்துணர்வுள்ள காற்றை சுவாசிக்கலாம். உப்பு மண் நிறைந்து, உங்கள் பயணத்தில் சிறு ப்ரேக் எடுக்க உதவும். இங்கு நீங்கள் ஒரு மணி நேரம் தங்கி விளையாடி மகிழலாம்.
அரவிந்தர் ஆசிரமம்
இது புதுச்சேரியின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது. இது 1926ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுதான் இந்த நாட்டிலே அரவிந்தருக்கு உள்ள ஒரே ஆசிரமம். ஆன்மீக குணம் கொண்டவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது உங்களுக்கு நேர்மறை எண்ணங்களையும், அமைதியையும் அள்ளி வழங்கும் இடமாகும். உள்ளே இதமளிக்கும் சூழல் தியான மண்டபத்தில் உங்களுக்கு அமைதியைக் கொடுக்கும். இது 11 மணி முதல் திறந்திருக்கும். இங்கு புகைப்படம், புத்தகம் என தனித்தனி அறையில் உங்கள் கண்களுக்கும், அறிவுக்கு விருந்து உறுதி. இங்கும் நீங்கள் ஒரு மணி நேரம் செலவிடலாம்.