Power Generation : நிலக்கரி மின்சாரம் – புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சாரம் – எதை அரசு ஊக்குவிக்க வேண்டும்?
Power Generation : நிலக்கரி மின்சாரம் – புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மின்சாரம் – எதை அரசு ஊக்குவிக்க வேண்டும்?

நிலக்கரி மின்சாரத்திற்கே அதிக முக்கியத்துவத்தை தமிழக அரசு கொடுத்தால் எளிதில் பூஜ்ஜிய கார்பன் இலக்கை 2050க்குள் எட்டமுடியுமா? புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சாரத்திற்கு உரிய முக்கியத்துவத்தை தமிழக அரசு கொடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாடு 2ல் தமிழகம் எப்படி நிலக்கரி மின்உற்பத்தியிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மின்சக்தி, காற்றாலை மின்உற்பத்திக்கு மாற வேண்டும் என திட்டங்கள் தீட்டப்பட்டாலும், 2024 கோடைக்கால மின்தேவையை பூர்த்தி செய்ய தமிழக மின்பகிர்மானக் கழகம் மார்ச்-ஏப்ரலில் மலேசியாவிடமிருந்து 6.5 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
2024ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே தமிழக அரசு 1.4 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய இருப்பது புவிவெப்படைதல் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பது உறுதியாக தெரிந்தும் தமிழக அரசு நிலக்கரி மின்உற்பத்திக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறது. (குறிப்பாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில்)
2019ல் தமிழகத்தில் ஆற்றல் துறையே அதிக பசுமைக்குடி வாயுக்களை வெளியேற்றியுள்ளது. அது 77 சதவீதம் என பதிவாகியுள்ளது. அதில் நிலக்கரி மின்உற்பத்தியே முக்கிய ஆற்றல் சக்தியாக உள்ளது.
அது மோசமான பாதிப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி புவிவெப்பமடைதல் பிரச்னையை அதிகரிக்கும்.
தமிழகத்தில் 100 சதவீதம் திறனுடன், 4,320 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் நிலக்கரி அனல் மின்நிலையங்கள் உரிய மின்உற்பத்தியை செய்ய நாளொன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
தற்போது தமிழக மின்பகிர்மானக் கழகம் ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கம், தெலுங்கானாவில் உள்ள சிங்கரேனி நிலக்கரி சுரங்களில் இருந்து நிலக்கரியை பெற்று மின்தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
மத்திய அரசும் மாநிலங்களின் மின்தேவையை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்திகளை ஊக்கப்படுத்தாமல், நிலக்கரி தேவையை அதிகம் ஊக்குவித்து, 6 சதவீதம் நிலக்கரியை மின்பகிர்மானக் கழகங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது.
சமீப காலமாகவே தமிழகம் (மின்பகிர்மானக் கழகம்) மலேசியாவிடமிருந்தே அதிக நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை 80 டாலர்/டன் என்ற அளவில் இருந்து வருகிறது. இது உள்ளூர் நிலக்கரியின் விலையை விட அதிகம்.
இதனால் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் பதில் இந்தியாவில் ஒடிசா, தெலங்கானா நிலக்கரி சுரங்கங்களில் இருந்து அதை ரூ.1,750/டன் என்ற குறைந்த விலையில் பெற்றால் கணிசமாக, தேவையற்ற பண விரயத்தை குறைத்து, நட்டத்தில் இயங்கும் தமிழக மின்பகிர்மான கழகத்தின் இழப்பை குறைக்க முடியும்.
மத்திய சுரங்கத்துறை மேற்கொள்ளும் நிலக்கரி ஏலத்தில் தமிழக அரசு பங்கு பெற்று தமிழகத்தில் தற்போது இயங்கும், இனிவரும் நிலக்கரி மின்உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வாங்க திட்டமிட்டுள்ளது.
வேறு யாரும் ஏலத்தில் பங்கேற்காத நிலையில், ஒடிசா, அங்குல் பகுதியில் உள்ள சக்திகோபால் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து தோண்டியெடுக்கப்படும் நிலக்கரி வருங்காலங்களில் எளிதாக தமிழகத்திற்கு கிடைக்கும்.
வடசென்னை நிலக்கரி நிலையத்தில் (800 மெகாவாட்) நிலக்கரி தீர்ந்த நிலையில், தமிழகத்தின் பிற நிலக்கரி அனல்மின் நிலையங்களில் 5-13 நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளது.
எனவே, தமிழகத்தில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்தாலும், ஆற்றல் தேவைக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்திகளை பயன்படுத்த முன்வராமல், நிலக்கரி மின்உற்பத்திக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதால், தமிழகத்தில் புவிவெப்பமடைதல் பிரச்னையை எளிதில் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதே கள உண்மை.
தமிழக அரசு உரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதற்கு தீர்வு காண முன்வருமா?
நன்றி – மருத்துவர் புகழேந்தி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்