Pongal : குறைந்து வரும் விளை நிலங்கள் மற்றும் கால்நடைகள் - அதிர்ச்சி ஆய்வு! உழவரை கொண்டாடும்போது இயற்கை காக்கப்படுமா?
Pongal : குறைந்து வரும் விளை நிலங்கள் மற்றும் கால்நடைகள்! உழவர் திருநாளில் இயற்கையை காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மனிதர்களின் அடிப்படைத் தேவையான உணவை அனைவருக்கும் வழங்கும் வேளாண் அறுவடையை சிறப்பு செய்யும் வகையில் பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் தமிழகத்தில் கொண்டாடப் பட்டாலும், உழவுத் தொழிலின் நிலை மற்றும் மாடுகளின் நிலை பரிதாபமாகவே தமிழகத்தில் இருப்பது வேதனையான ஒன்று.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க கைப்பற்றப்படவுள்ள 4,563.56 ஏக்கர் நிலத்தில் 3,246 ஏக்கர் நிலங்கள் பசுமையான விளைநிலங்கள்.
உள்ளூர் பஞ்சாயத்துகள் வேளாண் நிலத்தை கைப்பற்ற எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினாலும், அரசு அதை துளியும் கருத்தில்கொள்ளாமல் விமான நிலையம் அமைக்கும் பணிகளை தொடர்ந்து வருவது உள்ளூர் மக்களுக்கு சட்டப்படி கொடுக்கப்படும் அதிகாரத்தால் எந்த பலனும் இல்லை என்பதை காட்டுகிறது.
விளைநிலங்கள் மக்களின் உணவுத் தேவை மற்றும் வாழ்வாதாரத்தை காப்பதாக இருந்தாலும், தொழில் வளர்ச்சிக்கு அதிக பயனளிக்கும் விமான நிலைய விரிவாக்கத்திற்கு அரசு முன்னுரிமை கொடுப்பதும், மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் பணிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை தமிழக அரசு அளிக்கவும் தவறிவிட்டது என்பதே கசப்பான உண்மை.
திருவண்ணாமலை மெல்மா சிப்காட் தொழில் விரிவாக்கத்திற்கு 3,174 ஏக்கர் பசுமையான விளைநிலங்கள் கைப்பற்றப்பட உள்ளது. மேற்கூறப்பட்ட உதாரணங்களிலிருந்து வேளாண் துறைக்கு தமிழக அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் கால்நடைகள் எண்ணிக்கையில் குறைந்து வருவது ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2007-18ல் 20 லட்சம் கால்நடைகள் எண்ணிக்கையில் குறைந்து போயுள்ளது.
2012-18 இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் 6.65 லட்சம் கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே கால கட்டத்தில் வெளிநாட்டு கலப்பு கால்நடைகளின் எண்ணிக்கை 13.21 லட்சம் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
2012-18 இடைப்பட்ட காலத்தில் எருமை மாடுகளின் எண்ணிக்கையும் 6.6 லட்சத்திலிருந்தது 5.18 லட்சமாகக் குறைந்துள்ளது.
வெளிநாட்டு கலப்பின மாடுகள் கருவுற்ற 285 நாட்கள் கழித்து கன்றை ஈன்றெடுத்து நாளுக்கு 14-16 லிட்டர் பால் கொடுக்கிறது என்றும், உள்ளூர் கால்நடைகள் நாளுக்கு 6-8 லிட்டர் பால் மட்டுமே கொடுக்கிறது என்பது உண்மை என்றாலும், உள்ளூர் மாடுகளில் (காங்கேயம்) A2 அல்லெலி இருப்பதால் கிடைக்கும் பீட்டா Caesin புரதம் மற்றும் கொழுப்பு ரத்தக் குழாய்களில் அதிகம் படிந்து அடைப்பு ஏற்படுத்தி இரதய பிரச்னைகள் ஏற்படுவது பெரும்பாலும் இல்லவே இல்லை.
ஆனால் வெளிநாட்டு கலப்பின மாடுகளின் பாலில் A1 அல்லெலி இருப்பதால் ரத்தக் குழாய்களில் அதிகம் படிந்து அடைப்பு ஏற்பட்டு இதயப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதை கணக்கில்கொள்ளும் போதே (இது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது) உள்ளூர் மாடுகளின் பாலே மேலானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கறவை மாடுகளில் 40 சதவீதம் உள்ளூர் மாடுகளாக இருந்தும், மொத்த பால் கொள்முதலில் அவற்றின் பங்கு 21 சதவீதம் என இருந்தாலும், இதய நோய்கள் ஏற்படுவது உள்ளூர் மாடுகளின் பாலில் இல்லை என்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளூர் மாடுகளுக்கு அதிகம் உள்ளது. (வெளிநாட்டு கலப்பின மாடுகளோடு ஒப்பிடும்போது)
2012-19 இடைப்பட்ட 7 ஆண்டுகளில் உள்ளூர் கால்நடைகளின் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்துள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
2012ல் 2.46 மில்லியனாக இருந்த உள்ளூர் கால்நடைகளின் எண்ணிக்கை 2019ல் 1.79 மில்லியனாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் முன்பிருந்த மேய்ச்சல் நிலங்கள் மூலம் கிடாரி சமூகத்தில் ஒருவரால் மாதம் 50,000-60,000 ரூபாய் வருமானம், மாட்டுச்சாணத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைத்தது (கேரளாவில் இயற்கை உரமான மாட்டுச்சாணத்திற்கு கிராக்கி அதிகம். 80 கிலோ உள்ள மாட்டுச்சாண மூட்டை ரூ.120க்கு விலைபோகிறது)
ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக கால்நடைகளை காடுகளில் மேய்ச்சலுக்கு விடுவது தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1880-2010 இடைப்பட்ட காலத்தில் 20 மில்லியன் எக்டேர் வனப்பரப்பும், 26 மில்லியன் எக்டேர் புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலங்களும் அழிந்து போயுள்ளன.
தமிழக மாடுகளும் மற்றும் எருமை மாடுகளும் இறைச்சிக்காக கேரளத்திற்கு அதிகம் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்படுகின்றன.
வேளாண் நிலங்கள் சிறந்த விளைச்சலை அளிக்க மண்ணின் வளமே அடிப்படை காரணமாக அமைகிறது.
இச்சூழலில் மண்ணில் கார்பன் வளம் 0.8 சதவீதம் முதல் 1.3 சதவீதம் இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிட்டும் என இருக்க, தமிழகத்தில் 1971ல் மண் கார்பன் வளம் 1.2 சதவீதம் என இருந்தது 2002ல் 0.68 சதவீதமாகக் குறைந்தும், 2014ம் ஆண்டு மேலும் குறைந்து 0.5 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து மோசமானதும் தமிழக வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2014ம் ஆண்டில் மதுரையில் மண் கார்பன் வளம் மிக மோசமாக 0.23 சதவீதமாகக் குறைந்தும், கிருஷ்ணகிரியில் 0.36 சதவீதம் எனவும் குறைந்து காணப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வளம் மிகுந்த மண்ணில் காற்று 25 சதவீதமாகவும், 5-10 சதவீதமாகவும் சிறு உயிரினங்களும், உதிர்ந்த இலைகளும், இறந்த உயிரினங்களும் இருக்கவேண்டும்.
நாம் தேவைக்கு அதிகமான பூச்சிக்கொல்லிகள், உரங்களை பயன்படுத்தியது, இயற்கை உரங்களை இடாதது, இலை தழைகளை அதிகம் பயன்படுத்தாமல் இருந்ததால் மண்ணின் வளம் கணிசமாக தமிழகத்தில் குறைந்து போயுள்ளது.
இயற்கை உரங்கள் பாஸ்பேட் இருப்பை மண்ணுக்கு அளித்தும், பிற ஊட்டச்சத்துகள் மண்ணுக்கு கிடைப்பதையும் உறுதிபடுத்துகின்றன.
செயற்கை வேதி உரங்கள் மண்ணின் வளத்தை, உயிரினங்களை அழிப்பதுடன், மண்ணை நஞ்சாக்கி அதன் மூலம் பெறப்பட்ட உணவுகளை மனிதர்கள் உண்டு அதிக நோய்வாய்ப்படும் வாய்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேயிலை தோட்டங்களில் மாட்டுச்சாணம் போன்ற இயற்கை உரங்கள் மண்ணை காப்பதும், செயற்கை வேதி உரங்களால் மண்ணின் வளம் சீர்கெடுவதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மண்ணின் வளத்தை அறிய உதவும் மண்புழுக்களின் எண்ணிக்கை சென்னை கிண்டி தேசியப் பூங்காவில் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே அரசு இயற்கையையும், விவசாயத்தையும், கால்நடைகளையும் காப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நன்றி - மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்