Tamil News  /  Lifestyle  /  Pongal 2024: How The Festival Is Celebrated Know About Its History, Importance And Significance

Pongal 2024: பொங்கல் பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது?.. சிறப்பு, முக்கியத்துவம் என்ன?

Karthikeyan S HT Tamil
Jan 14, 2024 01:11 PM IST

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்.

தைப் பொங்கல்
தைப் பொங்கல்

ட்ரெண்டிங் செய்திகள்

தைப்பொங்கல் என்பது நாம் உண்ணும் உணவை விளைவிக்க உதவி செய்த அனைத்திற்கும் நன்றி தெரிவிக்கும் விதமான பண்டிகையாகும். குறிப்பாக விவசாயத்திற்கு எதெல்லாம் உதவியாக இருந்ததோ அவை எல்லாவற்றிற்கும் நன்றி கூறி வணங்குவது இதன் சிறப்பம்சமாகும். இது அறுவடை திருவிழா எனவும் அழைக்கப்படுகிறது. இது மகர சங்கராந்தியுடன் தொடர்புடையது மற்றும் சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகிப் பொங்கலாகவும், தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கும் பொங்கல் பண்டிகை ஜனவரி 17 அன்று நிறைவடைகிறது.

முதலாவதாக வருவது போகிப் பண்டிகை. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் கிடக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

இரண்டாம் நாள் தைப்பொங்கல். தை மாதத்தின் முதல் நாள் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அறுவடை செய்த நெல்லை கொண்டு, புதுப்பானை, புதுஅடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள். இந்த பானையில் மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் கட்டப்பட்டிருக்கும். அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள், கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அதுவும் சூரியனுக்கு படைக்கப்படும். பாரம்பரிய உணவான பொங்கலுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். பண்டைய காலத்தில் வேளாண்மைக்கு மிக அவசியமானது மாடுகள்தான். இந்தநாள் மாடுகளுக்கு சிறப்பு செய்து பொங்கல் வைத்து வழிபடும் நாளாக இந்நாள் உள்ளது. மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் உள்ள கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள்.

நான்காம் நாள் காணும் பொங்கல். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். இந்த நாளில்தான் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற வீர சாகசப் போட்டிகள் நடத்தப்படும்.

இந்தப் பொங்கல் பண்டிகை அனைவருக்கும் எல்லா நலன்களையும் தரும் திருநாளாக மாற இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்