பிளாஸ்டிக் : மனித வாழ்வின் அங்கமாகத் திகழும் பிளாஸ்டிக் நுண்கழிவுகளை கையாள்வது எப்படி? ஆய்வில் தகவல்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிளாஸ்டிக் : மனித வாழ்வின் அங்கமாகத் திகழும் பிளாஸ்டிக் நுண்கழிவுகளை கையாள்வது எப்படி? ஆய்வில் தகவல்!

பிளாஸ்டிக் : மனித வாழ்வின் அங்கமாகத் திகழும் பிளாஸ்டிக் நுண்கழிவுகளை கையாள்வது எப்படி? ஆய்வில் தகவல்!

Priyadarshini R HT Tamil
Updated Jun 22, 2025 10:54 AM IST

மேலும், மிக முக்கியமாக, கார்பன் அல்லாத ஹைட்ரஜன் உருவாக்கப்பட்டுள்ளதால், புவிவெப்பமடைதல் பாதிப்பிற்கு தீர்வாகவும் இது அமைந்துள்ளது. இதனால் சூழல் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் : மனித வாழ்வின் அங்கமாகத் திகழும் பிளாஸ்டிக் நுண்கழிவுகளை கையாள்வது எப்படி? ஆய்வில் தகவல்!
பிளாஸ்டிக் : மனித வாழ்வின் அங்கமாகத் திகழும் பிளாஸ்டிக் நுண்கழிவுகளை கையாள்வது எப்படி? ஆய்வில் தகவல்!

பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வது கடினம். அவை எளிதில் மக்காது.

சமீபத்தில் தென்கொரியாவின் Institute for Basic Sciences அறிவியலாளர்கள் செய்த ஆய்வில், உலகையே அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சூரிய ஒளி சக்தியால் (Photo catalytic system) தூய ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ளனர்.

இதற்கு தேவையான வினையூக்கிகளை (Catalysts), அதன் தன்மை மாறாமல், காற்று-நீர் சந்திக்கும் இணைப்புகளில் நிலைநிறுத்தி (Stabilizing) வெற்றி கண்டுள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த ஆய்வால் இரட்டைப் பயன் உலகிற்கு கிட்டியுள்ளது.

1. பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது சாத்தியமாதலோடு,

2. அதிலிருந்து தூய ஹைட்ரஜன் ஆற்றல் கிடைத்துள்ளது. இது வளர்ந்து வரும் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்வதாக உள்ளது.

மேலும், மிக முக்கியமாக, கார்பன் அல்லாத ஹைட்ரஜன் உருவாக்கப்பட்டுள்ளதால், புவிவெப்பமடைதல் பாதிப்பிற்கு தீர்வாகவும் இது அமைந்துள்ளது. இதனால் சூழல் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பலமடிப்பொருட்கள் (Polymer network) வலைப்பின்னலில், வினையூக்கிகளை தன்மை மாறாமல் பாதுகாத்தல் (Stabilizing) மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இத்தொழில்நுட்பத்தின் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து, எத்திலின் கிளைக்கால், டெரிதாலிக் அமிலம் போன்றவை உற்பத்தி செய்யப்படுவதோடு, தூய ஹைட்ரஜனும் வளிமண்டலத்தை அடைவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பத்தை இரண்டு மாத காலம் கடினமான சூழலிலும் (High Alkaline conditions) நடைமுறைப்படுத்த முடியும். இதனால் குழாய் நீர் கடல் நீர் என அனைத்திலும் இதை பயன்படுத்த முடியும். இதை 10 முதல் 100 சதுர மீட்டர் அளவில் ஆய்வகத்திற்கு வெளியில் பயன்படுத்தி அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

முக்கிய ஆய்வாளர் கிம் டே கியோங் கூறுகையில், ‘பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து தூய ஹைட்ரஜன் ஆற்றலைப் பெறுவது முக்கிய மைல்கல்‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ஆய்வாளர் ஹியான் டெக்வான், ‘சூரிய ஒளியை பயன்படுத்தி, வினையூக்கிகளை நிலைநிறுத்தி ஆய்வகத்திற்கு வெளியில் தூய ஹைட்ரஜன் உற்பத்தி செய்வது முக்கிய அறிவியல் சாதனை‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த பலனை அளிக்கும் இத்தொழில்நுட்பத்தை தமிழக மற்றும் இந்திய அளவில் நடைமுறைக்கு கொண்டுவருவது சிறப்பாக இருக்கும்.

சமீபத்தில் American Chemical Society-Omega ஆய்வு பத்திரிக்கையில் வெளியான மற்றொரு செய்தியும் மிக முக்கியமானது.

தாவரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பலமடிப்பொருட்கள் Polymers (பாலிசாக்கரைடுகள்) பிளாஸ்டிக் நுண்துகள் கழிவுகளை நீக்குகிறது என்ற செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

வெண்டைக்காய், வெந்தயம் போன்றவற்றில் இருந்து கிடைக்கும் இயற்கை பலமடிப்பொருட்கள் பிளாஸ்டிக் நுண்துகள்களோடு இணைந்து கீழே படிவதால் அவற்றை எளிதாக நீக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் பலமடிப்பொருள் பொடியை தூவுவதால் நல்ல பலன் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வெண்டைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் பலமடிப்பொருள் ஒரு மணி நேரத்தில் 67 சதவீதம், வெந்தயத்திலிருந்து தயாரிக்கப்படும் பலமடிப்பொருள் ஒரு மணி நேரத்தில் 93 சதவீதம் பிளாஸ்டிக் நுண்துகள்களை (Microplastics) நீக்குகிறது.

வெண்டைக்காய், வெந்தயப்பொடி சம அளவில் கலந்த கலவை 30 நிமிடத்தில் 70 சதவீத பிளாஸ்டிக் நுண்துகள்களை நீக்குகிறது.

செயற்கை பிளாஸ்டிக் நீக்கிகள், பாலிஅக்கிரலமைட், பயன்பாட்டைவிட இயற்கை பலமடிப்பொருட்கள் சிறந்த பலனைக் கொடுப்பதோடு, தேவையற்ற பிற வேதிப்பொருட்கள் செயற்கை பிளாஸ்டிக் வாயிலாக வெளியாவதும் முற்றிலும் தடுக்கப்படுகிறது.

வெண்டைக்காய் பலமடிப்பொருட்கள் கடல் நீரில் 80 சதவீத பிளாஸ்டிக் நுண்துகள்களை நீக்குகிறது.

வெந்தய பலமடிப்பொருட்கள் நிலத்தடி நீரில் 80 முதல் 90 சதவீத பிளாஸ்டிக் நுண்துகள்களை நீக்குகிறது.

இரண்டும் சம அளவில் கலந்த கலவைப் பொடி நன்னீரில் 77 சதவீதம் பிளாஸ்டிக் நுண்துகள்களை நீக்குகிறது.

இதனால் பிளாஸ்டிக் நுண்துகள்கள் வாயிலாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படுகிறது.

தேநீர் பொடி உள்ள பிளாஸ்டிக் உறையிலிருந்தும், மேலமின் கலந்த உறிஞ்சான் (Melamine Sponges) மூலமும் மில்லியன்/பில்லியன் கணக்கில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் வெளியாவதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

முறையான அறிவியல் ஆய்வுகளின் மேற்சொன்ன முடிவுகளை தமிழக மற்றும் இந்திய அரசுகள் உடனடியாக செயல்படுத்த முன்வர வேண்டும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.