Pepper Adai : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மிளகு மற்றும் முப்பருப்பு அடை! டின்னருக்கு சூப்பரான சாய்ஸ்!
Pepper Adai : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மிளகு மற்றும் முப்பருப்பு அடை! டின்னருக்கு சூப்பரான சாய்ஸ்!

தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – அரை கப்
கருப்பு உளுந்து (உடைத்தது) – 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
தேங்காய் துருவல் – ஒரு கப்
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகிய அனைத்தையும் சரியான அளவில் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் சேர்த்து 2 முதல் 4 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
பின் தண்ணீரை வடிகட்டவேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி மற்றும் பருப்புகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவை தோசை மாவு பததத்தைவிட கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் கெட்டியாக இருந்தால்தான் அடை நன்றாக இருக்கும்.
அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
தோசைக்கல்லை சூடாக்கி, மாவை எடுத்து அடைபோல் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து நன்றாக இருபுறமும் வேகவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடை பொன்னிறமாக மாறியதும் திருப்பி போட்டு 1 நிமிடம் நன்கு முறுகியதும் எடுக்கவும். சிவப்பு தேங்காய் சட்னியோடு சூடாக பரிமாற வேண்டும்.
எந்த சட்னி, சாம்பார் அல்லது குருமா அனைத்தும் இதற்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.
இதில் சேர்க்கப்படும் கருப்பு உளுந்தின் நன்மைகள்
உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
100 கிராம் உளுந்தில் 1.6 கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. 59 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. 25 கிராம் புரதச்சத்து, 0.93 கிராம் பொட்டாசியம், 0.38 கிராம் சோடியம் மற்றும் 341 கலோரிகள் உள்ளது. இதில் கூடுதலாக கால்சியம், இரும்பு, வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
உளுந்து உங்கள் செரிமான மண்டலத்துக்கு நல்லது ஏனெனில் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவ்விரு நார்ச்சத்துக்களும், செரிமானத்தை அதிகரிக்கின்றன. இதனால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகியவை தடுக்கப்படுகிறது.
இரும்புச்சத்தை அதிகரிக்கிறது
உங்கள் உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவது இரும்புச்சத்து. இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த ரத்த சிவப்பணுக்கள் உடல் முழுவதும் உறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்கின்றன.
இந்த ஆக்ஸிஜன் சப்ளைதான் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அனீமியா போன்ற கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் உடலுக்கு நன்மையளிக்கின்றன.
உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும், உங்களை மகிழ்ச்சியாகவும் வைக்கிறது
உங்கள் இதயத்தை சூப்பர் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உங்களை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசிய சத்து உடலில் முறையான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் தமனி சுவர்களில் சேதம் ஏற்படாமல் தடுக்கிறது. உளுந்தை வழக்கமாக எடுத்துக்கொண்டால், எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
நீரிழிவு நோயின் நண்பன்
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் தினமும் உளுந்தை சேர்த்துக்கொள்ளலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உளுந்து உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவை சரியாக பராமரிக்கவும், உங்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
தலைமுடிக்கு பளபளப்பை கொடுக்கிறது
உங்கள் தலை முடி பொலிவிழந்து காணப்படுகிறதா? அதற்கு உளுந்தை அரைத்து, தயிருடன் கலந்து தலைமுடியின் கால்களில் பூசி சிறிது நேரம் ஊறவிடவேண்டும்.
பின்னர் மிருதுவான ஷாம்பூவில் தலையை அலசினால் தலைமுடி உறுதியாவதுடன், பளபளப்பாகவும் இருக்கும். உளுந்தில் உள்ள புரதம், ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.
உளுந்து உடல் எடையை குறைக்கிறது
உளுந்தில் உள்ள நார்ச்சத்துக்கள், உங்கள் வயிறை நிறைந்த உணர்வுடன் வைத்து, இடையில் பசி ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் நீங்கள் இடையில் சாப்பிடும் ஸ்னாக்ஸ் கட்டுப்படுத்தப்படுகிறது.
அதனால், உளுந்தை காலை உணவாக எடுத்துக்கொள்வது நீங்கள் இடையில் ஸ்னாக்ஸ் எடுத்துக்கொண்டு கலோரிகள் அதிகரித்துக்கொள்வதை தடுக்கிறது.
உங்கள் எலும்பை உறுதியாக்குகிறது
வயோதிகம் மற்றும் வாழ்வியல் முறை போன்ற காரணங்களால் உங்கள் உடலில் உள்ள எலும்பு வலுவிழந்து, பலவீனமாகிறது. உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும், வலுவாக வைத்துக்கொள்ளவும் உங்கள் உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
உளுந்தில் இந்த சத்துக்கள் அனைத்தும் உள்ளது. அது உங்கள் எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி வலுவாக்குகிறது. மேலும் உங்களுக்கு எலும்பு குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. அதற்கு நீங்கள் உளுந்தை தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மெனோபாஸ் காலங்களில் பெண்களின் எலும்புகள் மோசமடையும். இதனால் ஊட்டச்சத்து நிபுணர்கள், பெண்கள் உளுந்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கிறது
உங்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நலம் உங்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது. உளுந்து சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை அடித்து வெளியேற்றுகிறது.
இதன் மூலம் நீங்கள நன்முறையில் சிறுநீர் கழிக்க உதவுகிறது. இது சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. உங்கள் சிறுநீரகம் நன்றாக பராமரிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது.
உங்கள் சருமத்துக்கு நல்லது
உளுந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரித்து உங்கள் சருமத்துக்கு இயற்கையாகவே நல்ல நிறத்தை வழங்குகிறது. இதனால் உங்கள் சருமம் பளபளக்கிறது. உளுந்தை அரைத்து உங்கள் சருமத்தில் பூசினால் சூரியஒளியால் ஏற்படும் நிறமாற்றம், முகப்பருக்களை சரிபடுத்துகிறது.
ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உதவுகிறது
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. ஆண்மையின்மை, முன்னரே விந்து வெளியேற்றம் போன்ற பிரச்னைகளை சரிசெய்ய உளுந்து உதவுகிறது.

டாபிக்ஸ்