Peerkankai Kadayal : பீர்க்கங்காய் தக்காளி கடையல்; சாதம் மற்றும் டிஃபன் இரண்டுக்கும் ஏற்றது! கத்தரிக்காயிலும் செய்யலாம்!
Peerkankai Kadayal : பீர்க்கங்காய் மற்றும் தக்காளியை வைத்து செய்யும் கடையல். இதை சாதம் மற்றும் டிஃபன் இரண்டுடனும் சேர்த்து சாப்பிடலாம். கத்தரிக்காயிலும் இதை செய்ய முடியும்.

மசாலா சேர்க்காமல் காய் சேர்த்து செய்யப்படும் தக்காளி கடையல்கள் அதிக சுவையானதாகவும், தினமும் என்ன சாம்பார் செய்வது என்ற உங்கள் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் இருக்கும். காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கம் குழந்தைகளுக்கும் இதுபோல் சாதத்தில் வைத்து ஒளித்து கொடுத்துவிடலாம். அவர்களும் சுவையான புதிய ரெசிபி என்று சாப்பிட்டு விடுவார்கள். இங்கு பீர்க்கங்காய் தக்காளி கடையல் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை கத்தரிக்காயிலும் செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய் – 1
கடலை எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 4
பூண்டு – 12 பல்
சின்ன வெங்காயம் – 30
பெரிய தக்காளி – 4 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவேண்டும். சோம்பு, சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து அனைத்தும் பொரிந்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அது வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வேகவிடவேண்டும்.
அடுத்து பீர்க்கங்காய் சேர்த்து நன்றாக வெந்தவுடன் ஒரு மத்து வைத்து கடைந்துவிடவேண்டும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, நல்ல மசியலாக இருக்கும் பதத்தில் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான பீர்க்கங்காய் கடையல் தயார். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை டிஃபனுடனும் சேர்த்து சாப்பிடலாம். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானது. எப்போதும் சாப்பாட்டுக்கு சாம்பார், புளிக்குழம்பு என போர் அடிக்கும்போது, இதுபோன்ற கடையல்களும் வித்யாசமாக இருக்கும்.
மேலும் வாசிக்க - காதலர் தினத்துக்கு என்ன செய்யப்போறீங்க?
மேலும் இதேபோல் கத்தரிக்காயிலும் கடைசல் செய்யலாம். அதற்கு பீர்க்கங்காய்க்கு பதில் கத்தரிக்காய் சேர்த்துக்கொள்ளவேண்டும். குக்கரில் வைத்தும் ஒரு விசில் விட்டு இறக்கலாம். அதுவும் நன்றாக குழைந்து வெந்து வரும். எனவே இந்த ரெசிபியை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். பீர்க்கங்காயில் உள்ள எண்ணற்ற நற்குணங்களும் உங்கள் உடலுக்கு கிட்டும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்