Payasam : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; வித்யாசமாசமான அரிசி மாவு மற்றும் ஜவ்வரிசி பாயாசம்! பிள்ளையாருக்கு பிடித்தது!
Payasam : விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல், வித்யாசமாசமான அரிசி மாவு மற்றும் ஜவ்வரிசி பாயாசம். பிள்ளையாருக்கு பிடித்தது. வித்யாசமான சுவையில் அசத்தும்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி அல்லது கணேஷ் சதுர்த்தி இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை விநாயகருக்கு கொண்டாடப்படுகிறது. விநாயகர் வாழ்வில் தோன்றும் தடைகளை களைபவராகக் கருதப்படுகிறார். செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். இந்த நாள் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இது நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்படும். அதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்படும். வீதிகளில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவை சதுர்த்தி முடிந்து 3ம் நாள் அல்லது 5ம் நாள் விமரிசையாக ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பக்தர்கள் இவற்றை வெகுவிமரிசையாக செய்து மகிழ்வார்கள் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை. விநாயகருக்கு பிடித்த ஒன்றாகவும் கருதப்படுகிறது. இதை பல்வேறு வகைகளில் செய்கிறார்கள். இங்கு விநாயகருக்குப்பிடித்த ஜவ்வரிசி, அரிசி மாவு பாயாசம் செய்வது எப்படி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முறையை பின்பற்றி விநாயகர் சதுர்த்தியைக் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை லிட்டர்
(கால் லிட்டர் பசும்பால் மற்றும் கால் லிட்டர் தேங்காய்ப்பால் எடுத்துக்கொள்ளலாம்)
ஜவ்வரிசி – கால் கப் (ஊறவைத்தது)
அரிசி மாவு – கால் கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – ஒன்றரை கப் (பொடித்தது)
ஏலக்காய்ப்பொடி – கால் ஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
பாதாம் – ஒரு கைப்பிடியளவு
திராட்சை – ஒரு கைப்பிடியளவு
தேங்காய் பல் – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு, பாகுபதம் தேவையில்லை, வெல்லம் கரைந்தவுடன் எடுத்துக்கொள்ளலாம். அதை தனியாக வைத்துவிடவேண்டும்.
அரிசி மாவில் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்துக்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் உப்பு, பொடித்த வெல்லம் அல்லது சர்க்கரை ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் அதில் ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து வேகவிடவேண்டும். (கெட்டியான ஜவ்வரிசி நல்லது. உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் நைலான் ஜவ்வரிசியையும் சேர்த்துக்கொள்ளலாம். அதை கால் மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
ஜவ்வரிசி வெந்தவுடன் பாலை அதில் சேர்க்கவேண்டும். பால் கொதித்ததும் முறுக்கு பிழியும் குழாயில் முறுக்கு அச்சை சேர்த்து மாவை கொதிக்கும் பாலில் பிழிந்து விடவேண்டும்.
ஒரே இடத்தில் பிழியாமல் அனைத்து இடங்களிலும் பிழிந்து விடவேண்டும் பிழியும் போது சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டே பிழிந்தால் நல்லது. இந்த அரிசி மாவே பாயாசத்தில் சேமியா போல் இருக்கும்.
இதை ஒருவர் செய்ய முடியாது. எனவே இருவர் சேர்ந்து செய்யவேண்டும். அச்சில் கடைசியாக உள்ள மாவையும் எடுத்து தண்ணீரில் கரைத்து பாயாசத்திலே விடவேண்டும்.
நன்றாக பிழிந்த அரிசியும் வெந்தவுடன் காய்ச்சி வைத்த வெல்லப்பாகை சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தும் வெந்து, கலந்து வந்தவுடன், அதில் ஏலக்காய் பொடியை சேர்க்கவேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவேண்டும்.
மற்றொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், உலர் திராட்சை, தேங்காய் பல் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதங்கவிடவேண்டும். பின்னர் அதை பாயாசத்தில் சேர்த்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.
சூப்பர் சுவையில் ஜவ்வரிசி மற்றும் அரிசி மாவு பாயாசம் தயார். விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையாருக்குப் படைத்து மகிழுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்