Pasiparuppu adai : அடடே அடையா? அது இத்தனை ருசியாகத்தானே இருக்கணும் என சுவைக்கத் தூண்டும் பாசிபருப்பு அடை!
Pasiparuppu adai : அடடே அடையா? அது இத்தனை ருசியாகத்தானே இருக்கணும் என சுவைக்கத் தூண்டும் பாசிபருப்பு அடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அடை, தென்னிந்தியாவில் பரிமாறப்படும் டிஃபன் வெரைட்டிகளில் முக்கியமான ஒன்று. தோசைப்போலவே இருக்கும். ஆனால் தோசைக்கு மாவை அரைத்து புளிக்கச் செய்து வார்த்து எடுக்கவேண்டும். அடைமாவை அரைத்தவுடனே செய்யலாம். பொதுவாக அடைக்கு தொட்டுக்கொள்ள அனைத்து வகை சட்னிகளும், சாம்பாரும் பரிமாறப்படுகிறது. பொதுவாக அடை கடலை பருப்பு கலந்து செய்யப்படுகிறது. இந்த அடை செய்ய பாசிபருப்பு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகை தானியங்களிலும் அடை செய்யலாம். சிறுதானியங்கள் முதல் அனைத்து வகை தானியங்களையும் பயன்படுத்தி அடை தயாரிக்கப்படுகிறது. நவதானியங்களை சேர்த்துகூட அடை செய்ய முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஒரு உணவாக அடை உள்ளது. அடைக்கான காம்போவாக அவியல் உள்ளது. எனினும் மற்ற சைட்டிஷ்களையும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பாசிபருப்பு – ஒரு கப்
பச்சரிசி – கால் கப்
உளுந்து – கால் கப்
(இந்த மூன்றையும் தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ 2 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்)
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் – ஒரு கப்
மல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் அல்லது கிரைண்டரில் ஊறவைத்த பாசிபருப்பு, அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றுடன், இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் உப்பு சேர்த்து கரைக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கரைத்துக்கொள்ளவேண்டும். அடைமாவும் கொரகொரப்பாகவும், கெட்டியாகவும் இருக்கவேண்டும். மிகவும் நைசாக அரைத்துவிடக்கூடாது.
அரைத்து எடுத்த மாவில் பொடியாக நறுக்கிய அளவு சின்ன வெங்காயம், துருவிய தேங்காய் மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். மாவு அதிக தண்ணீராக இல்லாமல் கரைத்துக் கொள்ளவேண்டும்.
தோசைக்கல்லை சூடாக்கி, கரைத்து வைத்த மாவை சற்று கனமாக தடவி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும், திருப்பிப் போட்டு இருபுறமும் நன்றாக சிவந்தவுடன் இதை எடுக்கவேண்டும்.
நறுக்கிய வெங்காயம், தேங்காய் பூ, கொத்தமல்லியை மாவோடு சேர்க்காமல் இவற்றை தனியாக கலந்து வைத்து அரைத்த மாவை அடையாக ஊற்றி அடையின் மேல் தூவி வெந்ததும் பரிமாறலாம். அதுவும் நன்றாக இருக்கும்.
இந்த அடைக்கு, காரச்சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது கிரேவி, அவியல் என எதைவேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும். ஒருமுறை சுவைத்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.
பாசிபருப்பு
100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது. மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. நார்ச்சத்துக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்