Palapazha Payasam : சூப்பர் சுவையில் பலாப்பழ சுளைகளில் தித்திக்கும் பாயாசம்! உணவில் இனிமை கூட்டும்!
Palapazha Payasam : சூப்பர் சுவையில் பலாப்பழ சுளைகளில் தித்திக்கும் பாயாசம் செய்யலாம். அது உங்கள் உணவில் சுவையை அதிகரிக்கும்.
பலாப்பழத்தில் பல்வேறு நற்குணங்கள் உள்ளது. பலாப்பழத்தை நாம் அப்படியே சாப்பிடுவதைவிட, இதுபோன்ற பாயாசம் செய்து சாப்பிடும்போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும். இதில் பாயாசம் செய்வது எப்படி என்று முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
பலாப்பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டும் கிடைக்கும் உணவு, கோடையை ஒட்டி கிடைக்கும் ஒரு பழம். இதை நாம் அப்படியே சாப்பிட்டாலும் சுவை நிறைந்ததாக இருக்கும். ஆனால் அதில் பாயாசாம் நம் நாவின் சுவை அரும்புகளை மலரச்செய்யும். இதோ ரெசிபி கட்டாயம் செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
பலாப்பழ சுளைகள் – 15
பாசிப்பருப்பு – கால் கப்
பாகு வெல்லம் – ஒன்றரை கப் (பொடித்தது)
முதல் தேங்காய்ப்பால் – ஒரு கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் – 2 கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பலாப்பழ சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
கடாயை லேசாக சூடாக்கி அதில் பாசிப்பருப்பை சேர்த்து வாசம் வரும் வறுக்கவேண்டும். பின்னர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
கனமான கடாயில் பொடியாக நறுக்கிய பலாப்பழ துண்டுகளை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பொடியாக்கிய வெல்லம், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.
பலாப்பழம் வெந்ததும் ஒரு கரண்டியால் மசித்துக் கொள்ளவேண்டும். பின் வடிகட்டிய வெல்லக்கரைசல் ஊற்றி கிளறவேண்டும்.
பின் 2 டேபிள் ஸ்பூன் நெய், வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவேண்டும்.
பாயாசம் அடிபிடிக்காமலிருக்க இடையிடையே கிளறிக் கொண்டே இருக்கவேண்டும்.
பாயாசம் கெட்டியானவுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் எஞ்சிய நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கலந்ததும் முதல் தேங்காய்ப்பால் ஊற்றி 3 நிமிடங்களில் லேசான கொதி வந்ததும், அடுப்பை அணைக்கவேண்டும். தித்திக்கும் பலாப்பழ பருப்பு பாயாசம் தயார்.
இதை அனைத்து வகை விருந்துகளிலும் பரிமாறலாம். குறிப்பாக திருமணம் போன்ற சுபகாரியங்களில் இதை பரிமாறும்போது அந்த விருந்து சிறக்கிறது.
பலாப்பழத்தின் நன்மைகள்
பலாப்பழம் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இதில் புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு கப் பலாப்பழத்தில் 157 கலோரிகள் உள்ளது. 2.8 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. 1.1 கிராம் கொழுப்பு, 38.3 கிராம் கார்போஹைட்ரேட்கள், 2.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.
22.6 மில்லிகிராம் வைட்டமின் சி, 0.5 மில்லிகிராம் வைட்டமின் பி6, 1.5 மில்லிகிராம் நியாசின், ரிபோஃபிளேவின் 0.1 மில்லிகிராம், கால்சியம் 39.6 மில்லிகிராம், மெக்னீசியம் 47.8 மில்லிகிராம், பொட்டாசியம் 739 மில்லிகிராம், பாஸ்பரஸ் 34.6 மில்லிகிராம் உள்ளது.
பலாப்பழம் வீக்கத்தை குறைக்கிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. அல்சரை குணப்படுத்துகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. சரும பிரச்னைகளை சரிசெய்கிறது. புற்றுநோயைத் தடுக்கிறது. தொற்றுக்களை குணப்படுத்துகிறது. எலும்புப்பிரை நோயைத் தடுக்கிறது.
டாபிக்ஸ்