தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Paal Paniyaram: Chetty Nadu Special Milk Paniyaram

Paal Paniyaram: செட்டி நாடு ஸ்பெஷல் தித்திக்கும் பால் பணியாரம்.. இப்படி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 26, 2024 10:47 AM IST

நீங்க ஒரு ஸ்வீட் ரெசிபி செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த செட்டி நாடு ஸ்பெஷல் பால் பணியாரத்தை ட்ரை பண்ணுங்க. ருசி அருமையாக வரும்.

பால் பணியாரம்
பால் பணியாரம்

ட்ரெண்டிங் செய்திகள்

பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்

பச்சை அரிசி

தேங்காய்

உளுந்து

ஏலக்காய்

உப்பு

சீனி

செய்முறை

முதலில் ஒரு கப் பச்சரிசி மற்றும் ஒரு கப் உளுந்து இரண்டடையும் ஒன்றாக சேர்த்து ஊற விட வேண்டும்.

குறைந்தது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அரிசி உளுந்தை ஊறவிட வேண்டும்.

பின்னர் அதை நன்றாக கழுவி அரைக்க வேண்டும். மிக்ஸியில் சேர்த்து கூட அரைத்துக்கொள்ளலாம். அரிசி உளுந்து அதிகமாக எடுத்தால் கிரண்டரில் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

அரிசி பருப்பு அரைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்க கூடாது. உளுந்த வடைக்கு மாவு அரைக்கும் பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து கரைத்து வைக்க வேண்டும்.

ஒரு தேங்காயை மிக்ஸியில் சேர்த்து 3 கிளாஸ் தண்ணீர் விட்டு நன்றாக பால் எடுத்து கொள்ள வேண்டும். அந்த பால் நன்றாக திக்காக இருக்குக்கும். மீண்டும் இரண்டாவது முறை பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். வெள்ளை சர்க்கரை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் நாட்டு சர்க்கரை கூட சேர்த்து கொள்ளலாம். அதில் வாசனைக்கு தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை ஏலக்காய் சேர்த்து கலந்த தேங்காய் பாலை ஒரு மணி நேரம் மூடி பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு அதில் அரைத்த மாவை குட்டி குட்டியாக சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும். பணியாரம் கலர் மாறும் முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பணியாரத்தில் எண்ணெய் இருக்க கூடாது. இப்படி பொரித்து எடுத்த பணியாரத்தை ஏற்கனவே பிரிட்ஜில் வைத்த தேங்காய் பாலில் சேர்த்து ஊற விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து பரிமாறினால் ருசியான பால் பணியாரம் ரெடி.

குறிப்பு

இந்த பால் பணியாரத்திற்கு சிலர் பசும்பாலை நன்றாக காய்ச்சி எடுத்து அதை இறக்கும் சமயத்தில் தேங்காய் பால் சேர்த்து. அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்தும் செய்வார்கள்.

சிலர் எண்ணெய்யில் பொரித்து எடுத்த பணியாரத்தை மிதமான வெந்நீரில் போட்டு உடனே அடுத்து அதை தயார் செய்து வைத்துள்ள பாலில் சேர்ப்பார்கள்.

இந்த பால் பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது எவ்வளவு சாப்பிட்டாலும் பயம் இல்லாமல் இருக்கலாம். சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் மட்டும் இந்த பால் பணியாரத்தை அளவாக எடுத்துக்கொள்வது நல்லது. மற்றபடி தேங்காய் பாலும் உடலுக்கு பல நன்மைகளை தரும் என்பதால் அனைத்து வயதினரும் இதை சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்