Onion Tamarind Rice : லன்ச் என்ன செய்வது என்ற குழப்பமா? வெங்காயம் மட்டும்தான் வீட்டில் உள்ளதா? இதோ இதை செய்ங்க!
Onion Tamarind Rice : லன்ச் என்ன செய்வது என்ற குழப்பமே வேண்டாம். வெங்காயம் மட்டும்தான் வீட்டில் உள்ளது என்றால் கூட கவலை வேண்டாம். ஈசியாக செய்யலாம் வெங்காய சாதம். இதோ ரெசிபி.

இது ஒரு வித்யாசமான லன்ச் பாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – ஒரு கப் (வேகவைத்து வடித்து எடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
வேர்க்கடலை – அரை கப்
முழு பூண்டு – 1
பெரிய வெங்காயம் – நறுக்கியது
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (கீறியது)
கறிவேப்பிலை – ஒரு கப்
புளிக்கரைசல் – கால் கப்
(நெல்லிக்காய் அளவு புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன் அதில், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். ஒரு முழு பூண்டின் பற்களை தோல் உறித்து சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காய பொடி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
கறிவேப்பிலை மற்றும் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கலந்து, கடாயை ஒரு மூடியால் மூடி கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் வற்றியவுடன் வேகவைத்த அரிசியைச் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
சிறிது நேரம் மசாலாக்கள் சாதத்தில் ஒட்டும் வரை கலந்துவிட்டு, பின்னர் பொடியாக நறுக்கிய மல்லித்தழைகளை சேர்க்கவேண்டும்.
சூப்பர் சுவையில் வெங்காய சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம் ஆகியவையே போதுமானது. லன்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிட்டால் குழந்தைகள் கட்டாயம் காலி செய்துவிடுவார்கள்.
என்ன லன்ச் என்ற குழப்பமே இருக்காது. இந்த வெங்காய சாதம் சுவை நிறைந்ததாக இருக்கும்.
வெங்காயத்தின் நன்மைகள்
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயத்தின் நன்மைகள் என்னவென்று தெரியுமா? வெங்காயத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதற்கு காரணம் வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான். உடலில் செல்கள் சேதம் அடைவதை வெங்காயம் தடுக்கிறது. குயிர்சென்டின் என்ற வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பல வழிகளில் நமக்கு உதவுகிறது. வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது.
பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்துக்களை குறைக்கிறது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
அல்சைமர் நோய் ஆபத்துக்களை குறைக்கிறது.
தலைமுடி ஆரோக்கியத்துக்கு வெங்காயத்தின் சாறு உதவுகிறது.
வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஒரு கப் நறுக்கிய வெங்காயத்தில், 64 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட்கள், 2 கிராம் புரதச்சத்துக்கள், கொழுப்பு 0 கிராம், நார்ச்சத்துக்கள் 3 கிராம், சர்க்கரை 7 கிராம் உள்ளது. மேலும் வெங்காயத்தில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் உள்ளன.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னவாகும்?
வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடும்போது, வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்றவை ஏற்படும். உடலில் நாற்றம் ஏற்படும். உணவு நஞ்சாதல் ஏற்டும். எனவே பச்சையாக சாப்பிடும்போது கவனம் தேவை.

டாபிக்ஸ்