வெங்காயத் தொக்கு : நீண்ட நாட்கள் கெடாத சின்ன வெங்காயத் தொக்கை செய்வது எப்படி என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெங்காயத் தொக்கு : நீண்ட நாட்கள் கெடாத சின்ன வெங்காயத் தொக்கை செய்வது எப்படி என்று பாருங்கள்!

வெங்காயத் தொக்கு : நீண்ட நாட்கள் கெடாத சின்ன வெங்காயத் தொக்கை செய்வது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published Mar 22, 2025 12:48 PM IST

வெங்காயத் தொக்கு : சின்ன வெங்காயத்தில் தொக்கு செய்ய முடியும். அது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அதை எப்படி செய்வது என்று பாருங்கள்.

வெங்காயத் தொக்கு : நீண்ட நாட்கள் கெடாத சின்ன வெங்காயத் தொக்கை செய்வது எப்படி என்று பாருங்கள்!
வெங்காயத் தொக்கு : நீண்ட நாட்கள் கெடாத சின்ன வெங்காயத் தொக்கை செய்வது எப்படி என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• கடுகு – ஒரு ஸ்பூன்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• வெந்தயம் – ஒரு ஸ்பூன்

• வர மல்லி – ஒரு ஸ்பூன்

• வர மிளகாய் – 5

• பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன்

(ஒரு கடாயில் கடுகு, சீரகம், வரமல்லி, வர மிளகாய், வெந்தயம் என அனைத்தையும் சேர்த்து வறுக்கவேண்டும். அது வறுபட்டு நல்ல மணம் வரும் நேரத்தில் பெருங்காயத் தூளை சேர்க்கவேண்டும். பெருங்காயத்தூளை சேர்த்த உடனேயே அடுப்பை அணைத்துவிடவேண்டும். அப்போதுதான் பெருங்காயத்தூள் கருகாது. ஏனெனில் நாம் பெருங்காயத்தூளை சேர்த்து வறுத்துக்கொண்டே இருந்தால் அது கருகிவிடும். எனவேதான் கடைசியாக சேர்த்து வறுக்கவேண்டும். வறுத்ததை ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்)

• எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – இரண்டு கைப்பிடியளவு

• புளி – சிறிதளவு

• உப்பு – தேவையான அளவு

• மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு கப்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• பூண்டு – 15 பற்கள் (பொடியாக நறுக்கியது)

• வர மிளகாய் – 4

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

1. முதலில் பொடியை தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், அதில் புளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கி ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

3. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து பூண்டு பற்கள், கிள்ளிய வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கியவுடன், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்க்கவேண்டும்.

4. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு (பார்த்து கவனமான சேர்க்கவேண்டும். வெங்காயம் அரைப்பதிலும் ஏற்கனவே உப்பு சேர்த்துள்ளோம்) அரைத்து வைத்துள்ள மசாலாப்பொடி சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் பதம் வரை சுருள வேகவிடவேண்டும்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இட்லி, தோசையுடனும் சேர்த்து பரிமாறலாம். அத்தனை சுவையானது. குழம்புகளிலும் சேர்த்து கொதிக்கவிட்டால் வித்யாசமான சுவையைத் தரும். எனவே செய்துவைத்துக்கொண்டு பல்வேறு விஷயங்களுக்கும் பயன்படுத்தி, பலன்பெறுங்கள்.