Oil Brinjal Kuzhambu : வாயில் எச்சில் வரவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு! ஆம்லேட்டுடன் சாப்பிட அடிதூள்!
Oil Brinjal Kuzhambu : வாயில் எச்சில் வரவைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. ஆம்லேட்டுடன் சாப்பிட அடிதூள். வத்தல், அப்பளமும் மட்டுமே கூட போது
கத்தரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்காது. மேலும் அது சிலருக்கு அலர்ஜி மற்றும் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற கோளாறுகள் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டுமே இந்தக்காயை சாப்பிடவேண்டும். மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனாலும் சிலருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. அவர்கள் கத்தரிக்காயில் இதுபோன்ற ஒரு எண்ணெய் கத்தரிக்காய் ரெசிபிக்கள் செய்து சாப்பிட்டால் அவர்களுக்கு கத்தரிக்காயையும் பிடித்த காயாக்கிவிடும். சொல்லும்போதோ வாயில் எச்சில் ஊறுகிறதா? இதோ இன்றே செய்து சாப்பிட ரெசிபி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொட்டுக்கொள்ள ஆம்லேட் அல்லது வத்தல், அப்பளம் இருந்தால் கூட போதும். பெரிதான வேறு காய்களை வைத்து கூட்டு, பொரியல் செய்ய தேவையில்லை. இனி உங்கள் வீட்டில் எல்லா நாளும் எண்ணெய் கத்தரிக்காய் மிதக்க இதோ ரெசிபி!
சீரகம் – ஒரு ஸ்பூன்
வரமல்லி – 2 ஸ்பூன்
வரமிளகாய் – 4
தேங்காய் – அரை கப் (துருவியது)
சின்ன வெங்காயம் – 10
கத்தரிக்காய் ஸ்டஃபிங் செய்ய
கத்தரிக்காய் – கால் கிலோ
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
குழம்பு வைக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
(புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)
தாளிக்க தேவையானவை
கடுகு – கால் ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2 (முழுதாக)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன் (கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்)
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம், வரமல்லி, வரமிளகாய், தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். அந்த மசாலவை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து கத்தரிக்காய்களை காம்புக்கு எதிர்புறத்தில் நாலாக வகுந்துகொள்ளவேண்டும். அதை வெட்டிவிடக்கூடாது. கத்தரிக்காய்கள் முழுதாகவே இருக்கவேண்டும். இடையில் மட்டும் வகுந்து இருக்கவேண்டும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கத்தரிக்காய்க்குள் வைத்து ஸ்டஃபிங் செய்ய வேண்டும். அதை சிறிது நேரம் ஊறவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து ஸ்டஃப் செய்த கத்தரிக்காய்களை பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதுபோல் ஸ்டஃப்ட் கத்தரிக்காய் செய்வதற்கு சின்ன சின்ன கத்தரிக்காய்களை தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவேண்டும்.
கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன் பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் போதுமான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், முதலிலே அரைத்து வைத்த தேங்காய் மசாலா மற்றும் புளிக்கரைசலை சேர்த்து வதக்கி போதிய அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவேண்டும்.
அதில் வறுத்த கத்தரிக்காய்களை சேர்க்கவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிட்டு, இறக்கவேண்டும். சூப்பர் சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவை அள்ளும்.
இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இரண்டு நாட்கள் சுட வைத்து சாப்பிடலாம். தாமதமானால் இதன் சுவை அதிகரிக்கும்.
எனவே இதை நீங்கள் மதியம் உட்கொள்ள காலையிலேயே செய்துவிடவேண்டும். எப்போதும் எண்ணெய் கத்தரிக்காய் அல்லது எந்த வகை புளிக்குழம்பு, காரக்குழம்பு வகைகளையும் செய்வதற்கு மண் சட்டியை பயன்படுத்துவது சிறந்தது.
படிக்கும்போது வாயில் எச்சில் ஊறுகிறதா? உடனே செய்து ருசித்துவிடுங்கள். ஹெச்.டி தமிழ் தினந்தோறும் இதுபோன்ற ரெசிபிக்களை உங்களுக்கு தொகுத்து வழங்கி வருகிறது. எனவே சுவையான உணவு வகைகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புகளுக்கு எங்கள் இணையப்பக்கத்தை தொடருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்